மீண்டும் சினிமாவில் நடிக்கும் எச்.ராஜா
ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் சார்பில் சுப்புலட்சுமி ஜெயராம் தயாரித்துள்ள படம் 'செய் செய்யாதே'. குரு விஜய் நாயகனாக நடித்துள்ளார். அவரது தந்தையாக டாக்டர். எஸ். ராஜா நடித்துள்ளார். தாயாராக தர்ஷினி ரெட்டி நடித்துள்ளார். நாயகிகளாக டபிதா குணரத்தினே மற்றும் மோனிகா ப்ரீத்தி ஆகியோர் நடித்துள்ளனர். வாசு ஒளிப்பதிவு செய்துள்ளார். டாக்டர். எஸ். ராஜாவே இயக்கி உள்ளார். ஏற்கெனவே 'கந்தன் மலை' என்ற படத்தில் நடித்த பா.ஜ.க., வை சேர்ந்த மூத்த தலைவர் எச்.ராஜா இந்தப் படத்தில் மீண்டும் நடித்துள்ளார்.
படம் பற்றி இயக்குநர் கூறும்போது “இன்றைய சமூகத்தில் உடல்நலப் பிரச்னைகளை அலட்சியமாக எடுத்துக்கொள்வது, சுயமாக மருந்துகளை பயன்படுத்துவது, இணையத் தகவல்களை மட்டுமே நம்பி மருத்துவ முடிவுகளை எடுப்பது, போதைப்பொருள் மற்றும் மயக்க மருந்துகளின் தவறான பயன்பாடு போன்ற பல்வேறு சவால்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றை வெறும் அறிவுரைகளாக அல்லாமல் சுவாரஸ்யமான திரைக்கதையின் மூலம் சிந்திக்க வைக்கும் முயற்சியாக படம் உருவாகியுள்ளது.
இந்த படம் மருத்துவர்களைப் பற்றிய கதை மட்டுமல்ல. ஒரு நோயாளியின் வாழ்க்கையைச் சுற்றி இயங்கும் முழு மருத்துவ அமைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமூகப் படைப்பாகவும் அமைகிறது. நோயாளி, மருத்துவர், செவிலியர், தூய்மைப் பணியாளர், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் அரசு சுகாதார அமைப்பு என ஒவ்வொருவரின் பங்களிப்பும் ஒரு உயரைக் காப்பாற்றுவதில் எவ்வளவு முக்கியமானது என்பதை படம் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்கிறது.
மருத்துவம் என்பது சிகிச்சை மட்டுமல்ல. அது மனிதநேயம், நம்பிக்கை, பொறுப்பு, கருணை மற்றும் குழு ஒருங்கிணைப்பின் வெளிப்பாடு என்பதையும் படம் வலியுறுத்துகிறது. இந்த படத்தில் அரசியல் கட்சி தலைவர் எச்.ராஜா முகியமான கேரக்டரில் நடித்துள்ளார். என்றார்.