பிளாஷ்பேக்: நாயகியாக மீனாவின் முதல் படம் எது தெரியுமா?
ADDED : 13 hours ago
குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்த மீனா நாயகியாக நடித்த படம் 'என் ராசாவின் மனசிலே' என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த படம் பெரிய வெற்றி பெற்றதால் அதுவே முதல் படமாக பார்க்கப்படுகிறது. மீனாவும் தனது நிஜமான முதல் படம் பற்றி பேசுவதில்லை.
அவர் முதன் முதலாக நாயகியாக நடித்த படம் 'ஒரு புதிய கதை'. இந்த படத்தில் அவர் பிரபுராஜ் என்ற புதுமுகத்திற்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தை ஆர்.பாலசுப்பையா இயக்கினார். குமார் மூவீஸ் சார்பில் எம்.ராஜாராம் தயாரித்தார். உமா கண்ணதாசன் இசை அமைத்தார், ஜி.கே.ராஜா ஒளிப்பதிவு செய்தார்.
படத்தில் பணியாற்றிய அனைவருமே புதுமுகங்கள். இதில் மீனா கிராமத்து பெண்ணாக நடித்திருப்பார். எழுத்தாளராக துடிக்கும் ஒரு இளைஞனை அவர் காதலிப்பதும், அதனால் வரும் பிரச்சினைகளும்தான் கதை.