‛‛மாமா மாமா மாமா...'' என ஏங்க வைத்த குரலுக்கு சொந்தக்காரர் பாடகி ஜமுனா ராணியின் திரைப்பயணம் ஒரு பார்வை
‛‛பாட்டொன்று கேட்டேன்... மாமா மாமா மாமா..., காளை வயசு கட்டான சைசு..., நான் சிரித்தால் தீபாவளி...'' உள்ளிட்ட பல்வேறு காலத்தால் அழியாத பாடல்களை பாடிய குழந்தைத் தனமான குரலுக்கு சொந்தக்காரர் ஜமுனா ராணி காலமானார். அவரது திரைப்பயணம் ஒரு பார்வை...
சிறு வயதில் பரத நாட்டியம் பயின்று வந்த ஜமுனா ராணியின் குரல் வளத்தை அறிந்த அவரது தாயார் இவரை பாட வைக்கலாம் என்று முடிவெடுத்தார். அப்போதிலிருந்து தான் இவருடைய இசைப் பயணம் ஆரம்பமானது. 1946 ஆம் ஆண்டு வெளியான தியாகய்யா என்ற தெலுங்கு படத்தின் மூலமாக இவர் பின்னணிப் பாடகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.
இவர் தமிழில் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தினர் தயாரிப்பில் 1952ம் ஆண்டு வெளிவந்த கல்யாணி என்ற திரைப்படத்தில் பின்னணிப் பாடும் வாய்ப்பு பெற்று அப்படத்தில் இரண்டு பாடல்கள் பாடினார். சக்ஸஸ் என்று ஒரு பாட்டும் ஒன் டூ த்ரீ எ;னறு ஒரு பாட்டும் இவருடைய குரலில் பதிவானது. இந்த இரண்டு பாடல்களும் இவருக்கு நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது.
விடுதி நடனப் பாடல்கள் கிராமியப் பாடல்கள் ஜிப்ஸி எனப்படும் நாடோடிப் பாடல்கள் போன்ற பாடல்களுக்கு இவருடைய குரல் அந்நாட்களில் மிகவும் பொருத்தமாக இருந்ததால் இவருக்கு இவ்வாறான பாடல்களே அதிகம் வந்தது. சுந்தர்ராவ் நட்கர்னி இயக்கத்தில் வெளிவந்த மகாதேவி திரைப்படத்தில் நடிகை சாவித்ரிக்காக இவர் பின்னணி பாடிய காமுகர் நெஞ்சில் நீதியில்லை என்ற பாடல் இவருக்கு திரையிசைப்பயணத்தில் ஒரு திருப்பத்தை தந்தது என்றே சொல்லலாம்.
அதன்பின் மன்னாதி மன்னன் திரைப்படத்தில் நீயோ நானோ யார் நிலவே, பாசமலர் திரைப்படத்தில் பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் போன்ற பாடல்கள் பாடும் வாய்ப்பு கிடைத்து திரையிசையில் தனக்கென ஒரு முத்திரை பதித்தார். ஜி ராமநாதன். கேவி மகாதேவன், எஸ் தக்ஷிணா மூர்த்தி, ஏஎம் ராஜா, பெண்டியாலா நாகேஸ்வரராவ், டி சலபதிராவ், டிஜி லிங்கப்பா, எஸ்வி வெங்கட்ராமன், எஸ்எம் சுப்பையா நாயுடு, விஸ்வநாதன் ராமமூர்த்தி, எஸ் ராஜேஸ்வரராவ், ஜிகே வெங்கடேஷ், டிஆர் பாப்பா, வி குமார், இளையராஜா என்று அனைத்து இசை ஜாம்பவான்களிடமும் பணியாற்றிய பெருமைமிக்கவர்.
டிஎம் சவுந்தரராஜன், பிபி ஸ்ரீனிவாஸ், ஏஎம் ராஜா, சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகனாதன், ஜேபி சந்திரபாபு, ஏஎல் ராகவன், எஸ்சி கிருஷ்ணன், பி சுசிலா, பி லீலா, எல்ஆர் ஈஸ்வரி, ஜிக்கி, ஏபி கோமளா, ஏஜி ரத்னமாலா, எஸ் ஜானகி, எம்எல் வசந்தகுமாரி, டிவி ரத்னம், கே ராணி, எம்எஸ் ராஜேஸ்வரி மற்றும் சூலமங்கலம் ராஜலட்சுமி என அனைத்து முன்னணி பாடகர்களுடனும் பல பாடல்கள் இணைந்து பாடி ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் சிங்களம் உள்ளிட்ட மொழிகளில் ஏறக்குறைய 6000 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார்.
பயோடேட்டா
இயற்பெயர் : கே ஜமுனா ராணி
சினிமா பெயர் : கே ஜமுனா ராணி
பிறப்பு : 17-மே-1938
இறப்பு : 30, ஜூலை 2026
பிறந்த இடம் : ஆந்திர மாநிலம்
பெற்றோர் : கே வரதராஜுலு - கே திரௌபதி
விருதுகள்
* 1998ம் ஆண்டு தமிழக அரசால் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
* 2002ம் ஆண்டு கவுரவ விருதான அறிஞர் அண்ணாதுரை விருது தமிழக அரசால் வழங்கப்பட்டது.
கே ஜமுனா ராணியின் குரலில் சில முத்தான திரைப்பாடல்கள்
1. ஆசையும் என் நேசமும் ரத்த பாசத்தினால் - குலேபகாவலி
2. காமுகர் நெஞ்சில் நீதியில்லை - மகாதேவி
3. மேலே பறக்கும் ராக்கெட்டு - அன்பு எங்கே
4. பூவில் வண்டு போதை கொண்டு - அன்பு எங்கே
5. அதிமதுரா அனுராகா - எங்கள் குடும்பம் பெருசு
6. செந்தமிழ் தேன் மொழியாள் - மாலையிட்ட மங்கை
7. தடுக்காதே என்னை தடுக்காதே - நாடோடி மன்னன்
8. வீணான ஜம்பம் ஏனடி - சபாஷ் மீனா
9. சொல்லட்டுமா சொல்லட்டுமா - தை பிறந்தால் வழி பிறக்கும்
10. யாரடி நீ மோகினி - உத்தம புத்திரன்
11. ஆட்டத்திலே பலவகை உண்டு - பாகப்பிரிவினை
12. அக்காளுக்கு வளைகாப்பு - கல்யாணப் பரிசு
13. என்னை அறியாமலே எனதுள்ளம் கவர்ந்தாயே - மனைவியே மனிதனின் மாணிக்கம்
14. குங்குமப் பூவே கொஞ்சுப் புறாவே - மரகதம்
15. கண்பாடும் பொன் வண்ணமே - சகோதரி
16. இந்த ஜகமே என் கையிலே - பாக்தாத் திருடன்
17. தாரா தாரா வந்தாரா - தெய்வப்பிறவி
18. காளை வயசு கட்டான சைசு - தெய்வப்பிறவி
19. இவர் கானா இவர் பானா - தெய்வப்பிறவி
20. நீயோ நானோ யார் நிலவே - மன்னாதி மன்னன்
21. பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு - படிக்காத மேதை
22. பார்த்தீரா அய்யா பார்த்தீரா - பாக்கியலக்ஷ்மி
23. மாமா மாமா மாமா ஏம்மா ஏம்மா ஏம்மா - குமுதம்
24. பாட்டொன்று கேட்டேன் - பாசமலர்
25. படிக்க வேண்டும் புதிய பாடம் - தாயில்லாப் பிள்ளை
26. ஆதி மனிதன் காதலுக்குப் பின் - பலே பாண்டியா
27. அத்திக்காய் காய் காய் - பலே பாண்டியா
28. சித்திரத்தில் பெண்ணெழுதி - ராணி சம்யுக்தா
29. தாங்காதம்மா தாங்காது சம்சாரம் தாங்காது - செந்தாமரை
30. கொஞ்சம் தள்ளிக்கணும் - கடவுளைக் கண்டேன்
31. பாலாற்றில் சேலாடுது - கொடுத்து வைத்தவள்
32. உனக்காகவா நான் உனக்காகவா - செல்வம்
33. டூயட்டு டூயட்டு டூயட்டு பாடிடும் முதலிரவு - பாலாடை
34. வாழைத் தண்டு போலே உடம்பு அலேக் - பணமா பாசமா
35. புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் - இரு கோடுகள்
36. நான் சிரித்தால் தீபாவளி - நாயகன்