உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என்னுடைய முதல் ஹீரோ முதல்வர் விஜய் : நடிகை சுவாதி பெருமிதம்

என்னுடைய முதல் ஹீரோ முதல்வர் விஜய் : நடிகை சுவாதி பெருமிதம்


நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கி சமீபத்திய தேர்தலில் போட்டியிட்டு தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். அவருடன் பணியாற்றிய பலரும் அவருடனான அனுபவங்களையும் நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் விஜய்யின் ஆரம்ப காலகட்டத்தில் அவருடன் 'தேவா', 'வசந்த வாசல்', 'செல்வா' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த சுவாதி, 'எனது முதல் ஹீரோ' என்று விஜய்யுடன் தான் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கூறும்போது, எனது முதல் ஹீரோ இளைய தளபதி விஜய். அன்பான நடிகராக தொடங்கிய உங்களது பயணம், இன்று மாண்புமிகு முதலமைச்சர் என்கிற நாற்காலியை அலங்கரிக்கும் வரை வளர்ந்திருப்பதை பார்ப்பது எனக்கு எவ்வளவோ பெருமையாகவும், ஊக்கமளிப்பதாகவும் இருக்கிறது. வெள்ளித்திரையில் எங்களை மகிழ்வித்த நீங்கள், இன்று மக்கள் சேவைக்காக உங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ளீர்கள். திரையிலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி, ஒரு தலைவனாக நீங்கள் முன்னுதாரணமாக திகழ்கிறீர்கள்.

உங்களது இந்த புதிய அத்தியாயத்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் சிஎம் சார். உங்களை நேரில் சந்தித்து எனது வாழ்த்துகளைத் தெரிவிக்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். எனது நண்பர்களும், நலம் விரும்பிகளும், ரசிகர்களும் 'நீங்கள் எப்போது மீண்டும் விஜய்யை சந்திப்பீர்கள்?' என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அந்த நாள் விரைவில் வரும் என்று நான் நம்புகிறேன் எனக் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !