வாசகர்கள் கருத்துகள் (1)
விஜயசாந்தி ய விட்டுடீங்க .. கல்லுக்குள் ஈரம் படத்தில் அருணா விஜயசாந்தி அறிமுகம்
சமீபத்தில் மறைந்த இயக்குனர் பாரதிராஜாவின் பிறந்தநாள் இன்று. புத்தம்புது படைப்புகளை மட்டுமல்ல, பல புதுமுக நடிகர், நடிகைகளையும் தனது படங்களில் அறிமுகப்படுத்துவது சமீபத்தில் மறைந்த பாரதிராஜா பாணி. அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட கலைஞர்கள் இன்றைக்கும் சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, ஹீரோயின்களை அறிமுகப்படுத்தும்போது அவர்களுக்கு ரா வரிசையில் பெயரை மாற்றி வைப்பது பாரதிராஜா வழக்கம். அப்படி பாரதிராஜாவால் அறிமுகப்படுத்த ஹீரோயின்கள் யார்? அவர்கள் நடித்த படங்கள்? அந்த கேரக்டரின் சிறப்பு என்ன? என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம்...
ராதிகா
கிழக்கே போகும் ரயில் படத்தில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட, நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகள் ராதிகா. 1978ல் வெளியான அந்த படத்தில் நடிக்கும்போது ராதிகா டீன் ஏஜில் இருந்தார். தான் நடிகையான குறித்து பேசியுள்ள ராதிகா ''லண்டனில் இருந்து சென்னை வந்தபோது, என் அம்மாவிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு என்னை நடிக்க வைக்க பேசினார். அந்த படத்தில் பலர் எதிர்ப்பை மீறி என்னை நடிக்க வைத்தார். நான் நடிப்பதில் பாக்யராஜிற்கு கூட உடன்பாடு இல்லை. அந்த வயதில் என் குணம், நடிப்பு அப்படி. ஆனால், அந்த படத்தின் வெற்றியால் என் வாழ்க்கை மாறியது. தென்னிந்திய மொழிகளில் நான் சிறந்த நடிகையாக இருக்க அவரே காரணம்.
என் 2வது இன்னிங்ஸ்சையும் அவரே தொடங்கி வைத்தார். 2 மாத கைக்குழந்தையுடன் இருந்த என்னை அழைத்து சென்று கிழக்கு சீமையிலே படத்தில் நடிக்க வைத்தார். அந்த படம் என் நடிப்பை பேசியது, பல விருதுகளை கொடுத்தது. பிற்காலத்தில் நான் குணசித்திர நடிகையாக மாற அந்த படம் தான் காரணம். என்று கூறியிருக்கிறார்.
பசும்பொன், தாஜ்மகால் படத்திலும் ராதிகா நடித்து இருந்தார். மற்ற ஹீரோயின்களை விட பாரதிராஜா மீது அதிக பாசத்தில் இருந்தவர் ராதிகா. அவரின் இறுதிசடங்களில் கூட உறவினர் மாதிரி 2 நாட்கள் கூடவே இருந்தார். தாய் கிழவி படத்தில் நடித்த பின் பாரதிராஜாவை சந்தித்து பேசினார் ராதிகா. 'உனக்கு நேஷனல் அவார்டு கிடைக்கும்'' என்று அப்போது பாரதிராஜா கூற, ''எல்லாமே உங்களால் தான். அப்படிக் கிடைத்தால் உங்க காலடியில கொண்டு வந்து வைக்கிறேன்'' என்று ராதிகா கூறும் வீடியோ வைரலானது. பாரதிராஜா பேசிய கடைசி வீடியோவும் அதுதான்
ராதா
பாரதிராஜாவின் இன்னொரு பெருமைக்குரிய அறிமுகம் ராதா என்பார்கள். கேரளாவில் நடிகை அம்பிகா தங்கையாக, சந்திரிகா என்ற பெயரில் சின்ன பெண்ணாக இருந்தவரை அலைகள் ஓய்வதில்லை படத்தில் ஹீரோயின் ஆக்கினார் பாரதிராஜா. அந்த படம் ஹிட்டாக, தெலுங்கிலும், தமிழிலும் முன்னணி நடிகையாக மாறினார் ராதா. கொஞ்சம் கிளாமரும், கமர்ஷியல் ஹீரோயினாக இருந்த ராதாவை தனது முதல் மரியாதை படத்தில் நடிக்க வைத்து அவருக்கு பெரிய அங்கீகாரம் கொடுத்தார் பாரதிராஜா.
காதல் ஓவியம் படத்திலும் ராதா நடிப்பு பேசப்பட்டது. ராதா மகள் கார்த்திகாவையும் தான் இயக்கிய அன்னக்கொடி படத்தில் நடிக்க வைத்தார் பாரதிராஜா. 'எனக்கு பிறப்பால் ஒரு தந்தை, எப்போதுமே எனக்கு காட்பாதர் பாரதிராஜா தான். எனக்கு சென்னையில் இருந்த ஒரே உறவு என்றால் அது பாரதிராஜா தான். அவரால் தான் நான் இந்த நிலைக்கு வந்தேன் ' என்று அவர் மறைவில் அழுதார் ராதா. மும்பையில் வாழ்க்கை, ஓட்டல் பிஸினஸ், தொழிலதிபர் என்று மாறினாலும் தன்னை அறிமுகப்படுத்தி பாரதிராஜா மீது பாசமாக, விசுவாசமாக இருந்தார் ராதா.
ரேவதி
ஆஷாவாக இருந்தவரை மண்வாசனை படத்தில் ரேவதியாக மாற்றினார் பாரதிராஜா. இவரும் அவரின் மற்ற ஹீரோயின்கள் போலவே இந்தியா முழுக்க முன்னணி படங்களில் நடித்தார். தன் குருநாதர் போல இவர் ஒரு கட்டத்தில் இயக்குனராகவும் ஆனார். தான் அறிமுகப்படுத்திய ஹீரோயின்களில் ரேவதி மீது பாரதிராஜாவுக்கு தனி அன்பு உண்டு. பாரதிராஜா இயக்கிய புதுமைப் பெண் (1984), ஒரு கைதியின் டைரி (1985), தாஜ்மகால் ஆகிய படங்களிலும் ரேவதி நடித்தார். மண்வாசனை படத்தில் அவரிடம் அடி வாங்கினேன். ஆனால், அதை குறையாக எடுக்கவில்லை. அது என்னை செதுக்கியது என்று சொன்ன ரேவதி, தேவர் மகன் படத்தில் தேசிய விருது பெறும் அளவுக்கு உயர்ந்தார்
ரேகா
தமிழ் சினிமாவில் டீச்சர் என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் ரேகாதான். கேரளாவை சேர்ந்த சுமதி ஜோஸ்பின் என்பரை ரேகா என பெயர் மாற்றினார் பாரதிராஜா. இவரும் மற்ற ஹீரோயின்கள் போல, மற்ற மொழிகளிலும் தமிழிலும் கொடி கட்டி பறந்தார். இயக்குனர் மீது அவரின் கடைசி காலத்தில் கூட அன்பாக இருந்தார். அடிக்கடி அவருடன் பேசுபவராக, அவரை நேரில் சென்று பார்ப்பவராக இருந்தார்.
சுகன்யா
புது நெல்லு புது நாத்து படத்தில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர். அந்த படம் வெற்றி அடைய, இவரும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக மாறினார். நகரத்தில் பிறந்த சுகன்யாவை கிராமத்து பெண்ணாக மாற்றி அழகு பார்த்தார் பாரதிராஜா.
ரஞ்சிதா
நாடோடி தென்றல் படத்தில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர். அதை தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்தார். இப்போது சினிமாவை விட்டு ஆன்மிக பாதைக்கு சென்றுவிட்டார்.
பிரியாமணி
பாலக்காட்டை சேர்ந்த பிரியாமணியை தனது கண்களால் கைது செய் படத்தில் ஹீரோயினாக அறிமுகம் செய்தார் பாரதிராஜா. அந்த படம் ஹிட்டாகவில்லை. ஆனால், அடுத்து பல படங்களில் நடித்து, பருத்திவீரன் படத்துக்கு தேசிய விருது வாங்கும் அளவுக்கு உயர்ந்தார் ப்ரியாமணி. இப்போதும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெப்சீரியஸில் பிரியாணி பிஸி
ரதி, ரமா, அருணா, காஜல் அகர்வால்
இவர்களை தவிர 'புதிய வார்ப்புகள்' படத்தில் ரதி, என் உயிர்த் தோழன்' படத்தில்ல் ரமா, 'முதல் மரியாதை' படத்தில் ரஞ்சனி, 'கல்லுக்குள் ஈரம்' படத்தில் அருணா, பொம்மலாட்டம் (பட வெளியீடு தாமதமாக பழனி முதலில் வந்தது) படத்தில் காஜல் அகர்வால் ஆகியோரையும் அறிமுகம் செய்தவர் பாரதிராஜா தான். ரதியும் முன்னணி நடிகையாக மாறினார். அருணா தமிழில் பெரிதாக ஜொலிக்கவில்லை, தெலுங்கில் ஓரளவு வெற்றி பெற்றார். மலையாள படங்களில் நடித்தார் ரஞ்சனி. இந்தியளவில் பெரிய நடிகையாக வந்து கோடிகளில் சம்பாதித்தார் காஜல் அகர்வால். இப்போதும் அம்மா கேரக்டரில், குணசித்திர நடிகையாக ஜொலிக்கிறார் ரமா. இவர்களை தவிர தாஜ்மஹால் படத்தில் ரியா சென், கிழக்கு சீமையிலே படத்தில் அஸ்வினி, மீண்டும் முதல் மரியாதை படத்தில் வரும் ராசி நட்சத்திரா ஆகியோரும் பாரதிராஜாவின் அறிமுகங்களே.
விஜயசாந்தி ய விட்டுடீங்க .. கல்லுக்குள் ஈரம் படத்தில் அருணா விஜயசாந்தி அறிமுகம்