6 மாதங்களுக்கு பின்பு வெளியாகும் முதல்வர் விஜயின் 'ஜனநாயகன்': ஜூலை 23ல் ரிலீஸ்
எச் வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படம் கடந்த ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்சார் சான்றிதழ் தாமதம் ஆனதால், தயாரிப்பு தரப்பு நீதிமன்றம் சென்றது. இதனால் மேலும் தாமதமானது.
நடிகர் விஜயின் கடைசி படம் என அறிவித்த இப்படம், தேர்தலுக்கு முன்பாக சென்சார் சான்றிதழ் பெற்று, வெளியிட முயற்சித்தும் தணிக்கை வாரியம், சான்றிதழ் வழங்கவில்லை. தேர்தல் முடிந்து, வெற்றிப்பெற்று விஜய் முதல்வராகவும் பொறுப்பேற்றார். அதன்பிறகாவது சென்சார் சான்றிதழ் கிடைக்குமா என எதிர்ப்பார்த்து வந்த நிலையில், கடந்த ஜூலை 9ம் தேதி தணிக்கை வாரியம், 'ஏ' சான்றிதழ் வழங்கியது. படத்தின் நீளம், 183 நிமிடங்கள் (3 மணிநேரம் 3 நிமிடங்கள்) என்றும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஜனநாயகன் படம் ஜூலை 23ம் தேதி வெளியாகும் என்றும், அதற்கான முன்பதிவு ஜூலை 19ம் தேதி துவங்கும் என்றும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தனது சமூக வலைதளப் பதிவில், 'நெருப்பால் சோதிக்கப்பட்டது, காலத்தால் செதுக்கப்பட்டது, வரலாற்றிற்காக உருவாக்கப்பட்டது, போர் எவ்வளவு கடுமையாக இருக்கிறதோ, வெற்றியின் முழக்கம் அவ்வளவு சிறந்ததாக இருக்கும்' என்றும் பதிவிட்டுள்ளனர். படம் அறிவித்து 6 மாதங்களுக்கு பிறகு இப்போது ரிலீசாவதாலும், படத்தின் டைட்டில் கார்டில் தளபதி விஜய் என்பதற்கு பதிலாக 'மதிப்பிற்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்' என குறிப்பிட உள்ளதால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
லீக்-ஐ தாண்டி வரவேற்கும் ரசிகர்கள்
படம் தாமதமான சமயத்தில், தேர்தலுக்கு முன்பாக 'ஜனநாயகன்' முழு படத்தின் எடிட்டட் வெர்சன், இணையத்தில் கசிந்ததால், படக்குழு அதிர்ச்சியடைந்தது. இதுதொடர்பாக சிலர் கைதாகினர். இவ்வளவு சிக்கல்களையும் தாண்டி, ஜனநாயகன் படத்தை வரவேற்க, ரசிகர்கள் தயாராகியுள்ளனர்.