உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அல்லு அர்ஜுனுக்கு நிம்மதி! சந்தியா தியேட்டர் நெரிசல் வழக்கில் காணொளி மூலம் ஆஜராக நீதிமன்றம் அனுமதி!

அல்லு அர்ஜுனுக்கு நிம்மதி! சந்தியா தியேட்டர் நெரிசல் வழக்கில் காணொளி மூலம் ஆஜராக நீதிமன்றம் அனுமதி!


ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கு விசாரணையில், நடிகர் அல்லு அர்ஜுன் காணொளி மூலம் ஆஜராக நம்பல்லி குற்றவியல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. இந்த வழக்கு, டிசம்பர் 2024ல் சந்தியா தியேட்டரில் நடைபெற்ற 'புஷ்பா 2: தி ரூல்' திரைப்படத்தின் பிரீமியர் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பானது ஆகும்.

நீதிமன்றத்தின் இந்த அனுமதியின் மூலம், நடிகர் அல்லு அர்ஜுன் வீடியோ கான்பரன்சிங் முறையில் விசாரணையில் கலந்து கொள்ள முடியும். தற்போது மும்பையில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'ராக்கா' படப்பிடிப்பில் அல்லு அர்ஜுன் பிஸியாக இருப்பதால், அவரால் நேரில் ஆஜராவதில் சிரமம் இருப்பதாக பிரதிவாதி தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்த விசாரணையின் போது, அரசு தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 23 பேருக்கும் 500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையின் நகல்களை வழங்கினார். இந்த குற்றப்பத்திரிகையில் தியேட்டர் நிர்வாகம் மற்றும் அல்லு அர்ஜுனின் குழுவினரின் தரப்பில் ஏற்பட்ட தவறுகள் மற்றும் குறைபாடுகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற சிலர் தனிப்பட்ட காரணங்களால் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை தடைபட்டது. இந்த வழக்கின் விசாரணைக்கு குற்றம் சாட்டப்பட்ட 23 பேரும் ஆஜராக வேண்டியது கட்டாயம் என்பதால், நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை வருகிற ஜூலை 29ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !