வெளியான 2 நாளில் இந்தியாவில் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்ட 'சட்லஜ்' திரைப்படம்
ஹிந்தியில் இளம் நடிகர் தில்ஜித் தோசஞ்ச் நடிப்பில் உருவான சட்லஜ் திரைப்படம் சமீபத்தில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனால், வெளியான 48 மணி நேரத்திலேயே இந்த படம் இந்தியாவில் பார்க்க முடியாதபடி நீக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மற்ற நாடுகளில் உள்ளவர்கள் இந்தப்படத்தை பார்க்க முடியும். 1990களின் தொடக்கத்தில் பஞ்சாபில் நடந்ததாகக் கூறப்படும் சட்டவிரோதக் கொலைகள் மற்றும் அடையாளம் தெரியாத உடல்கள் எரிக்கப்பட்ட சம்பவங்களை மையப்படுத்தியும், அதை வெளிச்சத்திற்குக் கொண்டுவர முயல்கின்ற ஒரு மனித உரிமை ஆர்வலரான ஜஸ்வந்த் சிங் கல்ரா என்பவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டும் ஒரு பீரியட் படமாக இது உருவாகியுள்ளது.
ஏற்கனவே இந்த படம் 'கல்லுகரா' என டைட்டில் வைக்கப்பட்டு, பின்னர் சென்சார் போர்டு அறிவுறுத்தலின்படி 'பஞ்சாப் 95' என மாற்றப்பட்டு, தற்போது ஓடிடியில் 'சட்லஜ்' என்கிற பெயரில் வெளியானது. இந்த படம் வெளியாவதற்கு முன்பே இது சில நாட்களில் நீக்கப்படலாம் என படத்தின் நாயகன் தில்ஜித் தோசஞ்ச் தனது இன்ஸ்டாகிராம் நேரலையில் குறிப்பிட்டிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த படம் பல ஆண்டுகளாகச் சென்சார் சிக்கலைச் சந்தித்து வந்தது. குறிப்பாக ஆரம்பத்தில் 21 வெட்டுகள் கொடுத்த சென்சார், பின்னர் கிட்டத்தட்ட அதை 120க்கும் மேலாக அதிகரித்ததாகவும், இதனால் படத்தின் தரம் குறையும் என்பதால் தான் பலமுறை இந்த வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது என்று தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்பட்டது.. தற்போது நேரடியாக ஓடிடியில் வெளியான போதும், 48 மணி நேரத்திலேயே இந்தப்படம் இந்தியாவில் நீக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.