பிளாஷ்பேக் : ஆண், பெண் நட்பிற்கு மகுடம் சூட்டிய படம்
இளம் ஆண், பெண் பழகினாலே காதலர்கள் என்று காலம், காலமாக சினிமா சொன்னது. காரணம் அன்றைய சமூகமும் அப்படித்தான் இருந்தது. ஆணும் பெண்ணும், காதலிக்கலாம், கல்யாணம் பண்ணலாம் அதை தாண்டி நட்பாக இருக்க முடியாது என்றே இருந்தது. திரையுலகில் பல புரட்சியை செய்தவர்கள்கூட இதை பற்றி யோசிக்கவில்லை.
காதல், கல்யாணம் இவற்றை தாண்டி ஆணும், பெண்ணும் நட்பாக இருக்கலாம் என்று பேசிய படம் 'பாலைவனச் சோலை'. ஆனால் அந்த படத்தில்கூட பெண்ணுடன் நட்பாக இருக்கும் ஆண்களில் ஒருவனுக்கு அந்த பெண்ணின் மீது காதல் வந்து விடும். ஆனால் 4 ஆண்களுக்கு இடையே ஒரு அறையில் வாழும் பெண் அவர்களுடன் நட்பாகவே இருந்தாள், யாரும் அவளை காதலிக்வில்லை, அவள் யார் காதலிலும் விழவில்லை. ஆண், பெண் உறவுக்கு 'நட்பு' என்ற அந்த மகுடத்தை சூட்டிய படம் 'புது வசந்தம்'.
சரியான மேடை கிடைக்காமல் சாலையோரங்களில் பாடி பிழைப்பு நடத்துகிறார்கள் நான்கு நண்பர்கள். தனது காதலனைத் தேடி நகரத்திற்கு வருகிறாள், ஓர் இளம்பெண். ஆனால் காதலன் வெளிநாடு சென்றிருப்பதால் எங்குச் செல்வது என்று தெரியாமல் தத்தளிக்கிறாள். இவளுடைய பரிதாப நிலைமையைப் பார்க்கும் நான்கு இளைஞர்களும் தங்களின் வீட்டிற்கு அழைத்துச் சென்று அடைக்கலம் தருகிறார்கள். அவர்களின் கண்ணியமான நடத்தையைப் பார்க்கும் இளம்பெண் அங்கேயே தங்குகிறாள். இளைஞர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறாள்.
சில மாதங்கள் கழிந்ததும் வெளிநாட்டிலிருந்து காதலன் வருகிறான். திருமணக் கனவோடு அவனைச் சென்று சந்திக்கிறாள். ஆனால் அவனோ 'நான்கு இளைஞர்களோடு தங்கியவள், கற்போடு இருப்பாளா?' என்று சந்தேகப்படுகிறான். 'இனிமேல் இவளைப் பார்க்க வராதீர்கள்' என்று அந்த இளைஞர்களை அவமதித்துத் துரத்தியடிக்கிறான். காதல் ஒரு பக்கம், நட்பு ஒரு பக்கம். அந்த இளம் பெண் என்ன செய்தாள்? என்பதுதான் படம்.
நான்கு நண்பர்களாக முரளி, ஆனந்த் பாபு, சார்லி, ராஜா நடித்திருந்தார்கள், நாயகியாக சித்தாரா நடித்திருந்தார். விக்ரமன் இயக்கி இருந்தார். 25 வாரங்கள் ஓடி வெள்ளிவிழா கொண்டாடியதற்கு எஸ்.ஏ.ராஜ்குமாரின் பாடல்களும் முக்கியமான காரணம்.
இதுபோன்ற படங்கள் அதன்பிறகு நிறைய வந்தது. இன்றைக்கு வேலைக்கு செல்லும் ஆண்களும், பெண்களும் ஒரே இடத்தில் கண்ணியமாக தங்கி இருக்கிறார்கள். இந்த சமூக மாற்றத்தை கொண்டு வந்ததற்கு புது வசந்தம் படத்திற்கும் முக்கிய பங்கு உள்ளது. கொண்டு வந்தவர் ஆர்.பி.சவுத்திரி, உருவாக்கியவர் விக்ரமன். இன்றைக்கும் விக்ரமனின் வீட்டின் பெயர் 'புதுவசந்தம்'.