உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மறைந்தும் ஒளிர்கிறார் பாக்யராஜ் : அவரது இரு கண்கள் பயனார்களுக்கு பொருத்தப்பட்டன

மறைந்தும் ஒளிர்கிறார் பாக்யராஜ் : அவரது இரு கண்கள் பயனார்களுக்கு பொருத்தப்பட்டன

இயக்குனர் கே.பாக்யராஜ் கடந்த மாதம் 27ம் தேதி வாக்கிங் சென்றுவிட்டு வந்த நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். சென்னை தனியார் மருத்துவமனையில் இருந்த அவருடைய உடல் சென்னை நுங்கம்பாக்கம் வீட்டில் உறவினர்கள் அஞ்சலி செலுத்த முதலில் ஏற்பாடு செலுத்தப்பட்டது.

அப்போது சில முக்கிய பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர். அந்தசமயம் திடீரென அரைமணி நேரம் வரை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் தடைபட்டன. அவர் வீட்டில் டாக்டர்கள் இருந்தனர். அவர் கண்தானம் செய்ததால் அவருடைய கண்கள் தகுந்த முறையில் அகற்றப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக தகவல் பரவியது. பாக்யராஜ் கண்தானம் செய்ததும், அவர் மறைந்த சில மணிநேரத்தில் அவருடைய கண்கள் ஒரு பாக்சில் எடுத்து செல்லப்பட்டதும் மீடியாவில் வேகமாக பரவியது. பலரும் பாக்யராஜின் முந்தைய முடிவை பாராட்டினர்.

இந்நிலையில், அவருடைய 2 கண்கள் தகுந்த பயனார்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது. கடந்த திங்கள்கிழமை ஒருவருக்கு ஒரு கண்ணும், நேற்று ஒரு கண்ணும் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 பேருக்கு பார்வை, ஒளி கொடுத்துள்ளார் பாக்யராஜ்.

சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம், மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதுதான் என பாக்யராஜ் அடிக்கடி சொல்வார். அதை அடிக்கடி செய்தும் காண்பித்தார். தான் நடத்தி வந்த புத்தகம், தனது ரசிகர் மன்றம், தனக்கு தெரிந்தவர்கள் மூலமாக பலருக்கு சர்ப்பிரைஸ் பரிசு, உதவிகள் செய்து வந்தார். அவர் மறைந்த பின்னரும் அவருடைய கண்கள் மற்ற 2 பேர் வாழ்வு ஒளி பெற காரணமாக இருந்தது பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.

கண்தானம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த பயனார்கள் யார் என்பது மருத்துவ விதிகள்படி வெளியிடப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !