திரையுலகில் அடுத்த அதிர்ச்சி : இயக்குனர் பாக்யராஜ் காலமானார்
சென்னை : பிரபல இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ், 73, மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் இன்று காலை (ஜூன் 27) காலமானார்.
கோவாவில் நடந்த நடிகை குஷ்புவின் மகள் அவந்திகாவின் திருமணத்தில் பங்கேற்றுவிட்டு நேற்று இரவு தான் சென்னை திரும்பி உள்ளார் பாக்யராஜ். இன்று காலையில் வழக்கம் போல் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது நெஞ்சு வலிப்பதாக கூற உடனடியாக அருகில் உள்ளவர்கள் வீட்டிற்கு கொண்டு வந்துவிட்டுள்ளனர். அதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது.
இந்திய அளவில் திரைக்கதை மன்னன் என பெயர் எடுத்தவர் இயக்குனர் பாக்யராஜ். நடிகர், இயக்குனர், வசனகர்த்தா, திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்ட பாக்யராஜ் தனித்துவமான கதைக்களம் மற்றும் நகைச்சுவையுடன் கூடிய குடும்பத் திரைப்படங்களை உருவாக்குவதில் மிகவும் பிரபலமானவர்.
தனது குரு பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்து 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றினார். புதிய வார்ப்புகள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் சுவரில்லாத சித்திரங்கள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு, டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களை இயக்கி உள்ளார். பல்வேறு படங்களில் ஹீரோவாகவும் அசத்தினார்.
இயக்குனர் பாரதிராஜா மறைந்து 20 நாட்களுக்குள்ளேயே அவரது சிஷ்யரான பாக்யராஜ் மறைந்து இருப்பது திரையுலகில் இடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இல்லத்தில் அஞ்சலி
சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் இருந்து பாக்யராஜ் உடல் ஆம்புலன்ஸ் மூலம் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு திரையுலகினர் ஏராளமான பேர் அஞ்சலி செலுத்த துவங்கி உள்ளனர். பாக்யராஜ் உடல் நாளை மதியம் 1.30 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
அரசு மரியாதை
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை அளிக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
கண்கள் தானம்
பாக்யராஜ் தனது கண்களை தானம் செய்வதாக ஏற்கனவே கூறியிருந்தார். அவர் மறைந்ததையடுத்து அவரின் கண்கள் தானமாக அளிக்கப்பட்டது. மருத்துவ குழுவினர் வந்து அதற்கான பணிகளை மேற்கொண்டு கண்களை தானமாக பெற்று சென்றனர். மறைந்த பின்னரும் கூட அவர் யாரோ ஒருவரின் வாழ்வில் ஒளியேற்ற போகிறார்.