உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: நடனத்தில் பத்மினிக்கு சவால் விட்ட எம்ஜிஆர்

பிளாஷ்பேக்: நடனத்தில் பத்மினிக்கு சவால் விட்ட எம்ஜிஆர்


கவியரசர் கண்ணதாசன் பாடலாசிரியராகவும், எழுத்தாளராகவும் வெற்றி பெற்ற அளவிற்கு கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு என்கிற சினிமா ஏரியாவில் பெரிய வெற்றி பெறவில்லை. என்றாலும் ஒரே ஒரு படம் அவரை இந்த ஏரியாவில் வரலாற்றில் இடம்பெற வைத்தது. அது 'மன்னாதி மன்னன்'. தமிழின் வரலாற்றைப் பறைசாற்றும் வகையில் அமைந்த இப்படத்திற்கு, பாடல்களை எழுதியதுடன் திரைக்கதையையும் அவரே அமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற பல பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

'அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிடர் உடைமையடா...' என்ற திராவிட இயக்கத்தின் தேசிய கீதம் இந்த படத்தில் உருவானதுதான். டி.எம்.எஸ் உணர்ச்சி பொங்க பாடி எம்ஜிஆர் நடிக்க இன்றைக்கும் போற்றப்படுகிற பாடலாக இருக்கிறது. விஸ்வநாதன் & ராமமூர்த்தி இசை அமைத்திருந்தனர்.

ஆடை வடிவமைப்பாளராக இருந்து திரைப்படத் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் மாறிய எம்.நடேசன் இப்படத்தை உருவாக்கினார். அஞ்சலிதேவி, பத்மினி, ராகினி, எம்.ஜி.சக்ரபாணி, பி.எஸ்.வீரப்பா, ஜி.சகுந்தலா, 'குலதெய்வம்' ராஜகோபால், ஆழ்வார்க் குப்புசாமி, நாராயண பிள்ளை ஆகியோர் நடித்தனர். சேர மன்னனுக்கும் சோழ நாட்டு நடன மங்கைக்கும் இடையிலான காதல்கதை. 'ஆட்டனத்தி ஆதிமந்தி' என்ற தமிழ் இலக்கிய கதையை தழுவி இது உருவாக்கப்பட்டிருந்தது.

நாட்டியத்தை மையமாக கொண்டு உருவான இந்த படம் எம்ஜிஆரின் நடனத் திறமையை உலகிற்கு கொண்டு வந்தது. பத்மினிக்கு இணையாக அவர் ஆடினார். ஆடிக்கொண்டே காலால் கோலம்போடும் நடன போட்டியில் எம்ஜிஆர் பத்மினிக்கு ஈடாக நடனமாடினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !