11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் அல்போன்ஸ் புத்ரன் - நிவின்பாலி
கடந்த 2013ல் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் வெளியான நேரம் திரைப்படம், அதில் நடித்த நிவின்பாலி, நஸ்ரியா, பாபி சிம்ஹா உள்ளிட்ட பல நட்சத்திரங்களை முன்னணி நடிகர்கள் வரிசைக்கு உயர்த்தியது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அல்போன்ஸ் புத்திரன், நிவின்பாலியை வைத்து 2015ல் 'பிரேமம்' என்கிற மெகா ஹிட் படத்தை கொடுத்தார். இப்படி அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்த கூட்டணி மீண்டும் தொடரும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், கடந்த 11 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்றவே இல்லை. இந்த நிலையில் தற்போது அல்போன்ஸ் புத்ரன் இயக்கும் புதிய படத்தில் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கிறார்.
இது நிவின் பாலியின் 50வது படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு வெளியீட்டு விழா வரும் ஜூன் 27ம் தேதி நடைபெற இருக்கிறது. பிரேமம் படத்திற்குப் பிறகு பல ஆண்டுகளாக படம் எதுவும் இயக்காமல் இருந்த அல்போன்ஸ் புத்ரன், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரித்விராஜ், நயன்தாரா இணைந்து நடித்த 'கோல்டு' என்கிற படத்தை இயக்கினார். ஆனால் அது தோல்விப் படமாக அமைந்தது. அதனால் டைரக்ஷனை ஒதுக்கிவிட்டு, சமீபகாலமாக ஒரு நடிகராக தொடர்ந்து நடித்து வந்த அல்போன்ஸ், மீண்டும் நிவின்பாலியை வைத்து படம் இயக்குவது ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.