உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: ஜெமினியின் “சந்திரலேகா” திரைப்படத்தின் சாகசங்களும், சரித்திரப் பதிவுகளும்...

பிளாஷ்பேக்: ஜெமினியின் “சந்திரலேகா” திரைப்படத்தின் சாகசங்களும், சரித்திரப் பதிவுகளும்...

1940களிலேயே முப்பது லட்சம் ரூபாய் பொருட் செலவில், மூன்றரை வருட காலமாக தயாரித்து வெளியிட்ட ஒரு மாபெரும் கலைச்சித்திரமாக வெளிவந்து, வெற்றிவாகை சூடிய திரைப்படம்தான் ஜெமினி எஸ் எஸ் வாசன் அவர்கள் தயாரிப்பில், அவரே இயக்கியிருந்த “சந்திரலேகா” திரைப்படம்.

“பாலநாகம்மா”, “மங்கம்மா சபதம்” ஆகிய திரைப்படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பின் தயாரிப்பு செலவைப் பற்றி எவ்வித தயக்கமுமின்றி, மிக பிரமாண்டமாக தயாரித்த இத்திரைப்படம், 1948ம் ஆண்டு ஏப்ரல் 9 முதல் தலைநகரங்கள் முழுவதிலும் உள்ள 40 திரையரங்குகளில் வெற்றிநடை போடுகின்றது எனவும், ஆந்திர மாநிலம் காகிநாடாவிலிருந்து கொழும்பு வரை தென்னிந்தியா முழுவதும் 50 திரையரங்குகளில் தினசரி 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கண்டுகளித்து வருகின்றனர் எனவும் இத்திரைப்படத்திற்கென பிரத்யேக விளம்பரங்கள் வந்த வண்ணம் இருந்து கொண்டேயிருந்தது அப்போது.

இவ்வாறு திரை உலகையே “சந்திரலேகா” வெளிவருவதற்கு முன்னும் பின்னும் திடுக்கிட வைத்திருந்தது. சிறிய முதலீட்டில் படங்களை தயாரித்து வெளியிட இருந்த பல தயாரிப்பாளர்கள் தங்களது படங்களின் வெளியீட்டை தள்ளிப்போடும் நிலையும் ஏற்பட்டிருந்தது அன்றைய நாளில். சினிமா படம் 11 ஆயிரம் அடிக்கு மேல் இருக்கக் கூடாது என்று பத்திரிகைகள் பிரசாரம் செய்து வந்திருந்த நிலையில், “சந்திரலேகா”வை 18 ஆயிரத்து 634 அடி நீளம் தயாரித்து, 200 நிமிடங்களுக்கும் மேல் ஓடுமாறு உருவாக்கியிருந்தார் எஸ் எஸ் வாசன். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், அதுவரை தமிழ் சினிமா உலகம் பயணித்துக் கொண்டிருந்த அதன் திசையிலிருந்து மாறிப் பயணப்பட காரணமாக அமைந்த முதல் திரைப்படமாக உருவானதுதான் இந்த “சந்திரலேகா”. கலை, பொழுதுபோக்கு என்ற இந்த இரண்டை மட்டுமே தத்துவமாகக் கொண்டு, அந்தக் காலத்திலேயே முப்பது லட்சம் ரூபாய் பொருட் செலவில் பிரமாண்டத்தின் உச்சமாக தயாரிக்கப்பட்டிருந்தது “சந்திரலேகா” திரைப்படம்.

கலைநுட்பத் திறனில் “சந்திரலேகா” திரைப்படம் மிகச் சிறப்பான ஒரு மைல் கல்லை அடைந்திருந்ததோடு, பார்வையாளர்கள் மற்றும் கலையுலகினர் என அனைவரது பாராட்டையும் பெற்றிருந்தது. மேல்நாட்டுத் திரைப்படங்களுக்கு நிகராக அரங்க நிர்மாணங்களும், படப்பிடிப்பும் அமைக்கப்பட்டிருந்தது. கலை இயக்குநராக பணிபுரிந்த ஏ கே சேகர், ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கே ராம்னாத் ஆகிய இந்த இருவரின் பங்களிப்பு இந்தப் படத்தின் வெற்றிக்குப் பெரிதும் துணை நின்றன.

ஒரு சிற்றரசின் இளவரர்களான வீரசிம்மன், சசாங்கன் என்ற இரண்டு சகோதரர்களுக்கு இடையே நடக்கும் ஆட்சி அதிகாரப் பகிர்வுப் பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில், இளைய சகோதரரான 'சசாங்கன்' என்ற வில்லன் கதாபாத்திரத்திற்கு எஸ் எஸ் வாசனின் முதல் தேர்வாக இருந்தவர் படத்தின் நாயகனான எம் கே ராதா. அவர் மறுப்பு தெரிவிக்க, பின் நாயகன் கதாபாத்திரமான 'வீரசிம்மன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் எம் கே ராதா. அதேபோல் படத்தின் டைட்டில் “சந்திரலேகா” என்ற நாயகி கதாபாத்திரத்திற்கும் எஸ் எஸ் வாசனின் முதல் தேர்வாக இருந்தவர் அன்றைய முன்னணி நட்சத்திரமான கே எல் வி வசந்தா என்ற நடிகை. பின்னர் அவரும் மாற்றப்பட்டு சந்திரலேகா என்ற நாயகி கதாபாத்திரத்திற்கு அன்றைய தமிழ் திரையுலகின் 'கனவுக் கன்னி'யான நடிகை டி ஆர் ராஜகுமாரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1952ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த “ஆன்” என்ற திரைப்படத்திற்குப் பின் ஜப்பான் நாட்டில் வெளியிடப்பட்ட இரண்டாவது இந்தியத் திரைப்படம் என்ற பெருமையையும், ஜப்பான் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றிருந்தது இந்த “சந்திரலேகா”. இந்தப் படத்தின் மாபெரும் வெற்றி, எஸ் எஸ் வாசனை இந்திய சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராகவும் உயர்த்தியது.

படத்தில் இடம் பெற்றிருந்த மிக நீண்ட வாள் சண்டைக் காட்சிகள், திரைக்கதை அமைப்பு, அபாரமான அரங்க அமைப்புகள், அழியா புகழ்பெற்ற ட்ரம் டான்ஸ் போன்ற முக்கிய அம்சங்கள் இந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்குத் துணை நின்று, “சந்திரலேகா” என்ற இந்த சாதனைச் சித்திரத்தை சரித்திரத்தில் இடம் பிடிக்கச் செய்திருந்தது என்றால் அது மிகையன்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !