தமிழ் சினிமாவை புரட்டி போட்ட பாரதிராஜா...
ஸ்டுடியோக்களில், நான்கு சுவற்றுக்குள் கிடந்த தமிழ் சினிமாவை ஒரு புதிய திசைக்கு செலுத்தி தமிழ் திரைத் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் பாரதிராஜா. இயற்கையோடு பின்னிப் பிணைந்த கிராம வாழ்க்கையின் எதார்த்தத்தையும், அந்த மண்ணோடு பிறந்து வளர்ந்த மனித உறவுகளின் மகத்துவத்தையும், மயிலிறகால் வருடியது போல் நம் மனதிற்கு நெருக்கமாகவும், இதமாகவும் தந்து, மாறுபட்ட சிந்தனையோடு, மகத்தான கலைப்படைப்புகள் உருவாக வழிவகுத்தவர் பாரதிராஜா என்றால் மிகையல்ல.
சினிமா பயணம்
தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் 1941ம் ஆண்டு ஜூலை 17ல் பிறந்தவர் பாரதிராஜா. இவரது நிஜயப்பெயர் சின்னச்சாமி. இவர் உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகள். பள்ளிப்படிப்பை தனது சொந்த ஊரான அல்லி நகரத்திலேயே முடித்த பாரதிராஜா படிக்கும் காலத்திலேயே இலக்கியங்கள், நாடகம் எழுதுதல், நடிப்பு, இயக்கம் என்று ஆர்வமாக இருந்தார்.
ஊர் சிரிக்கிறது, சும்மா ஒரு கதை போன்ற நாடகங்களை எழுதி அதை மேடைகளிலும் அரங்கேற்றினார். சுகாதார ஆய்வாளராக தனது முதல் பணியை ஆரம்பித்த பாரதிராஜாவுக்கு சினிமா மீதிருந்த தீரா காதலால் சென்னைக்கு வந்தார். சென்னையிலும் மேடை நாடகம், பெட்ரோல் பங்க் வேலை என்று பணியில் இருந்தபடியே சினிமா துறையில் நுழையும் முயற்சியில் முனைப்புடன் இருந்தார்.
16 வயதினிலே...
இயக்குநர் பி புல்லையாவிடம் உதவியாளராக பணிபுரியும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதன் பின் பிரபல கன்னட இயக்குநரான புட்டண்ணா கனகலிடம் சேர்ந்து சினிமாவின் நுணக்கங்களை கற்றார். நீண்ட பயணத்திற்கு பின் 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். பாரதிராஜாவின் வருகைக்கு முன்பு வரை ஸ்டூடியோக்களில் அடைபட்டு கிடந்த தமிழ் சினிமா, தமிழக கிராமங்களையே தனது ஸ்டூடியோக்களாக மாற்றியது பாரதிராஜாவின வருகைக்கு பின் என்றால் அது மிகையல்ல.
ஒரு கிராமவாசியின் உணர்வுகளையும் கிராமத்தின் சூழலையும் அப்பழுக்கற்று செல்லுலாய்டில் அழகாகவும் அற்புதமாகவும் காட்டினார். முதல் படத்திலேயே தன்னுடைய ஆளுமையை நிரூபித்த பாரதிராஜா தனது அடுத்த படைப்பான 'கிழக்கே போகும் ரயிலையும்' முழுக்க முழுக்க கிராமத்து பின்புலத்திலேயே எடுத்து வெற்றி கண்டார். கிராமத்து கதைகளத்தை கொண்ட படங்களை மட்டுமே இவரால் இயக்க முடியும் என்ற விமர்சனங்களுக்கும் அன்று இவர் தப்பவில்லை. தனது அடுத்த படைப்பான 'சிகப்பு ரோஜாக்கள் படத்தின் மூலம் அப்படிபட்ட விமர்சனங்களுக்கும் முற்றுபுள்ளி வைத்தார்.
இயக்கிய படங்கள்
டிக் டிக் டிக், காதல் ஓவியம், வாலிபமே வா வா, மண்வாசனை, புதுமைப்பெண், ஒரு கைதியின் டைரி, முதல் மரியாதை, கடலோர கவிதைகள், வேதம் புதிது, கொடி பறக்குது, என்னுயிர் தோழன், புது நெல்லு புது நாத்து, நாடோடி தென்றல், கேப்டன் மகள், கிழக்கு சீமையிலே, கருத்தம்மா, பசும்பொன், தமிழ்செல்வன், அந்தி மந்தாரை, தாஜ்மகால், கடல் பூக்கள், ஈரநிலம், கண்களால் கைது செய், பொம்மலாட்டம், அன்னக்கொடி, மீண்டும் ஒரு மரியாதை உள்ளிட்ட படங்களை இயக்கினார். தமிழ் படங்களையும், சீதாகொகா சிலுகா, யுவதாரம் புலிச்சின்டி, ஈதரம் இல்லலு, ஜமடகனி, ஆராதனா ஆகிய தெலுங்கு படங்களையும், சொல்வ சவான், லவவர்ஸ், சாவேரே வலி காடி ஆகிய ஹிந்திப் படங்களையும் இயக்கி உள்ளார்.
நடிகர், தயாரிப்பாளர்
கல்லுக்குள் ஈரம் படத்தில் நடிகராக அறிமுகமான பாரதிராஜா, அதன் பிறகு நிழல்கள், தாவணி கனவுகள், இதயம், தந்துவிட்டேன் என்னை, காதல் வைரஸ், ஆயுத எழுத்து, ரெட்டை சுழி, பாண்டியநாடு, நினைத்தது யாரோ, குரங்கு பொம்மை, படை வீரன், சீதக்காதி, கென்னடி கிளப், நம்ம வீட்டுப் பிள்ளை, மீண்டும் ஒரு மரியாதை, ஈஸ்வரன், ராக்கி, மாநாடு, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தவிர மனோஜ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் தாஜ்மஹால் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.
குடும்ப பின்னணி
பாரதிராஜா தனது சகோதரியின் மகள் சந்திர லீலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு மனோஜ் என்ற மகனும், ஜனனி என்ற மகளும் உள்ளனர். மனோஜ் பல படங்களில் நடித்தார். கடந்தாண்டு மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவரது காதல் மனைவி நடிகை நந்தனா ஆவார். ஜனனி, மலேசியாவை சேர்ந்த ராஜகுமார் தம்பிராஜாவை திருமணம் செய்து அங்கேயே செட்டிலாகிவிட்டார்.
பயோடேட்டா
நிஜப்பெயர் : சின்னசாமி
பிறந்த தேதி : 17-ஜுலை-1941
பிறந்த ஊர் : அல்லி நகரம், தேனி மாவட்டம்
பெற்றோர் : பெரிய மாயத்தேவர் - கருத்தம்மா,
மனைவி : சந்திர லீலாவதி
பிள்ளைகள் : மனோஜ் (மகன்) - ஜனனி (மகள்)
விருதுகள்
பத்மஸ்ரீ
2004ல் 'பத்மஸ்ரீ' விருது வழங்கி மத்திய அரசு கவுரவிப்பு
தேசிய விருதுகள்
1. 1982ல் சீதாகொகா சிலுகா என்ற தெலுங்கு திரைப்படத்திற்கான தேசிய விருது.
2. 1986ல் ‛முதல் மரியாதை' படத்திற்காக தேசிய விருது
3. 1988ல் வேதம் புதிது தேசிய விருது
4. 1995ல் 'கருத்தம்மா' படத்திற்காக தேசிய விருது
5. 1996 ல் அந்திமந்தாரை' திரைப்படத்திற்காக தேசிய விருது
6. 2001ல் கடல் பூக்கள் படத்திற்காக தேசிய விருது
தமிழக அரசு விருதுகள்
16 வயதினிலே, அலைகள் ஓய்வதில்லை, ஈர நிலம் போன்ற படத்திற்காக தமிழக அரசின் விருது வாங்கி உள்ளார்.
தவிர பிலிம் பேர் விருதுகள், ஆந்திர மாநில அரசின் விருதுகளையும் வென்றுள்ளார்.
பாரதிராஜா இயக்கிய முக்கிய படங்கள்
01. 16 வயதினிலே
02. கிழக்கே போகும் ரயில்
03. சிகப்பு ரோஜாக்கள்
04. புதிய வார்ப்புகள்
05. நிறம் மாறாத பூக்கள்
06. நிழல்கள்
07. அலைகள் ஓய்வதில்லை
08. டிக் டிக் டிக்
09. காதல் ஓவியம்
10. வாலிபமே வா வா
11. மண்வாசனை
12. புதுமைப்பெண்
13. ஒரு கைதியின் டைரி
14. முதல் மரியாதை
15. கடலோரக் கவிதைகள்
16. வேதம் புதிது
17. கொடி பறக்குது
18. என் உயிர் தோழன்
19. புது நெல்லு புது நாத்து
20. நாடோடி தென்றல்
21. கேப்டன் மகள்
22. கிழக்கு சீமையிலே
23. கருத்தம்மா
24. பசும்பொன்
25. தமிழ் செல்வன்
26. அந்திமந்தாரை
27. தாஜ்மஹால்
28. கடல் பூக்கள்
29. ஈர நிலம்
30. கண்களால் கைது செய்
31. பொம்மலாட்டம்
32. அன்னக்கொடி
பாரதிராஜா இயக்கிய பிறமொழி படங்கள்
01. கொத ஜீவிதலு (தெலுங்கு)
02. ரெட் ரோஸ் (ஹிந்தி)
03. சீதாகொகா சிலுகா (தெலுங்கு)
04. லவர்ஸ் (ஹிந்தி)
05. யுவதரம் பிலிசிண்டி (தெலுங்கு)
06. சவேரே வாலி காடி (ஹிந்தி)
07. ஆராதனா (தெலுங்கு)