எவ்வளவு காலம் முடியுமா அவ்வளவு காலம் கார் ரேஸ் : அஜித் பேட்டி
நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக ‛குட் பேட் அக்லி' படம் வெளியானது. இந்த படம் வெளியாகி ஓராண்டை கடந்துவிட்ட நிலையில் இன்னும் அவரின் அடுத்தபட அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. தொடர்ந்து கார் ரேஸில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் அஜித்தின் அம்மா இறந்த நிலையில் அந்த காரியங்களை முடித்துவிட்டு மீண்டும் ரேஸிற்கு திரும்பிவிட்டார். பிரான்ஸில் நடக்கும் ரேஸில் பங்கேற்கிறார்.
இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ள அவர் அளித்த பேட்டி : கடந்த மூன்று வருடங்களாக நான் துபாயை மையமாகக் கொண்டு வசித்து வருகிறேன். எனது குடும்பத்தினர் இந்தியாவில் உள்ளனர். கார் பந்தயங்களில் தொடர்ந்து பங்கேற்க வேண்டிய கடமைகள் இருப்பதால், தற்போதைய பந்தய காலங்களில் ஐரோப்பாவில் அதிக நேரத்தைச் செலவிட்டு வருகிறேன்.
அடுத்த ஆண்டிற்கான பந்தயத் திட்டங்களை தற்போதே தயார் செய்து வருகிறோம். 'ஏசியன் லெ மான்ஸ்' மற்றும் 'இ.எல்.எம்.எஸ்' ஆகிய தொடர்களில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளோம். என்னால் எவ்வளவு காலம் கார் பந்தயங்களில் ஈடுபட முடியுமோ, அவ்வளவு காலம் ஒவ்வொரு வருடமும் இந்த 'கிரெவென்டிக்' தொடரில் தொடர்ந்து பங்கேற்க விரும்புகிறேன். எனது அணியின் மெக்கானிக்குகள், பொறியாளர்கள் மற்றும் உடன் பயணிக்கும் வீரர்கள் என அனைவரும் ஒரு மிகச்சிறந்த குழுவாகச் செயல்பட்டு வருகிறோம்.
இவர்களுடன் இருப்பது எனது இரண்டாவது குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வைத் தருகிறது'' என்றார்
அஜித்தின் இந்த பேட்டி மூலம் அவர் இந்தாண்டும், அடுத்தாண்டும் தொடர்ச்சியாக கார் பந்தயத்தில் கவனம் செலுத்துகிறார் என்று தெரிய வருகிறது. அப்படியானால் அஜித்தின் 64வது படம் இப்போதைக்கு உருவாகாதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.