உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி

மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி


2026ம் ஆண்டின் ஐந்து மாதங்கள் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. கடந்து போன 5 மாதங்களில் சுமார் 90க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்தன.

அந்த 90 படங்களில் வியாபார ரீதியாக லாபம் தந்த படங்களாக, “தாய் கிழவி, யூத், தலைவர் தம்பி தலைமையில், வித் லவ்” ஆகிய நான்கு படங்களே இருந்தன. மிக மிகக் குறைவான அளவில் வெற்றி சதவீதம் இருந்தது. எதிர்பார்க்கப்பட்ட சில படங்கள் ஓடாமல் தோல்வியைத் தழுவி அதிர்ச்சியைக் கொடுத்தது.

ஐந்து மாதங்கள், 90 படங்களில் பெரிய வசூல் வெற்றி என எந்தப் படமும் இல்லையே என திரையுலகினரும் ஒரு ஏக்கத்திலேயே இருந்தனர். அந்த ஏக்கத்தைப் போக்கும் விதத்தில் மே மாதம் இருந்தது.

கடந்த 2025ம் வருடத்தின் மே மாதத்தில் சுமார் 25 படங்கள் வெளிவந்தன. ஆனால், இந்த 2026ம் வருடத்தின் மே மாதத்தில் சுமார் 10 படங்கள் மட்டுமே வெளியாகின. கோடை விடுமுறையாக இருந்தாலும் கடந்த வருடங்களைப் போல படங்கள் வெளியாகாமல் போனது. தேர்தல் முடிவு, புதிய அரசு பதவியேற்பு, ஐபிஎல் போட்டிகள், கடும் வெயில் என சில பல காரணங்களை அதற்குச் சொல்லலாம்.

மே 8ம் தேதி “29, டே 11” ஆகிய படங்கள் வெளிவந்தன. '29' படம் காதல் கதையாக வந்தாலும் ரசிகர்களைப் பெரிதும் கவரவில்லை. 'டே 11' படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை.

மே 14ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட படம் 'கருப்பு'. ஆனால், கடைசி நேரத்தில் எழுந்த கடன் பிரச்சனை காரணமாக அன்றைய தினம் படம் வெளியாகவில்லை. பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு மே 15 அன்று படத்தை வெளியிட்டார்கள்.

பொதுவாக இப்படி தாமதமாகி வரும் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறும் ராசி தமிழ் சினிமாவில் இருந்ததில்லை. ஆனால், அதை முறியடித்து பெரும் வெற்றியைப் பெற்றது 'கருப்பு'. ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த இந்தப் படம் 300 கோடி வசூலை இதுவரை கடந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 175 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. வெளி மாநிலங்களில் 75 கோடிக்கும் அதிமாகவும் வசூலைப் பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு தமிழ்த் திரைப்படம் இப்படியான வெற்றியைப் பெற்றுள்ளதாக திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

மே 15ம் தேதியன்று ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன், யோகிபாபு மற்றும் பலர் நடித்த 'சட்டென்று மாறுது வானிலை' படம் வெளியானது. ரசிகர்களைக் கவராமல் தோல்வியைத் தழுவியது. அன்றைய தினம் மற்றொரு படமாக 'கரா' படம் வெளியாகிக் கடந்து போனது.

மே 22ம் தேதி “மதர், பானிபூரி பிரேம்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்த வருடப் படங்களின் எண்ணிக்கையைக் கூட்டிய படங்களாக இவை அமைந்தன.

மே 28ம் தேதி 'பிளாஸ்ட்' படம் வெளியானது. அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் மற்றும் பலர் நடிப்பில் அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் வெளியான படம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற படம். தற்போது 40 கோடி வசூலை இந்தப் படம் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அன்றைய தினம் மற்றொரு படமாக 'பழவெட்டி சேதுராயன்' என்ற படம் வெளியானது.

மே 29ம் தேதி, மறைந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் நடித்த “ஈகோ ராமன்', என்ற படம் வெளியானது.

2026ம் ஆண்டின் வசூல் வறட்சியைப் போக்கும் படமாக மே மாதம் அமைந்தது. 'கருப்பு, பிளாஸ்ட்' ஆகிய இரண்டு படங்களும் அனைவருக்கும் லாபம் தரும் படங்களாக இருந்தது திரையுலகினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மே 2026 வெளியான படங்கள்…

மே 8

29, டே 11

மே 15

கருப்பு, சட்டென்று மாறுது வானிலை, கரா

மே 22

மதர், பானிபூரி பிரேம்

மே 28

பிளாஸ்ட், பழவெட்டி சேதுராயன்

மே 29

ஈகோ ராமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !