சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ் அண்டர் 18 படத்தில் சற்றே இடைவெளிக்குபின் தமிழில் நடிக்கிறார். இது குறித்து அவர் அளித்த பேட்டி ''இந்த படம் அக்கா, தம்பி பாசத்தை மாறுபட்ட விதத்தில் சொல்கிறது. நான் விக்ராந்த் ஜோடியாக நடிக்கிறேன். கன்னட நடிகர் சுதீப்புக்கு முக்கியமான வேடம். ஓசூர் பகுதியில் நடந்த உண்மை சம்பவம் அடிப்படையில் படம் உருவாகிறது.
கடந்த சில ஆண்டுகளில் காக்காமுட்டை, க.பெ.ரணசிங்கம், கனா, டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்திரி, தி கிரேட் இந்தியன் கிச்சன், பர்கானா என பல படங்களில் ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கேரக்டரில் நடித்தேன். ஓடிடியிலும் எனக்கு முக்கியத்துவமுள்ள கதைகள் வந்தன. இப்போது கொஞ்சம் இடைவெளி விழுந்துவிட்டது. தமிழை விடமாட்டேன். ஹிந்திக்கு போகிற ஐடியாவும் இருக்கிறது. ஜோதிகாவுக்கு கிடைத்த மாதிரி சினிமாவில், ஓடிடியில் நல்ல வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். தெலுங்கில் நான் நடித்த படங்கள் கமர்ஷியல் ஹிட். அங்கே சில படங்களில் நடித்து வருகிறேன்.
மீண்டும் ஓடிடியில் நடித்து வருகிறேன். தொடர்ந்து நல்ல கதைகள், எனக்கு முக்கியத்துவமான படங்களில் நடிப்பேன். இப்போதைக்கு திருமணம் குறித்து ஐடியா இல்லை. நான் தெலுங்கு படங்களில் நடித்தாலும் சென்னையில்தான் குடியிருக்கிறேன். ஐதராபாத்தில் வீடு வாங்கி குடியேறவில்லை'' என்றார்.