உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : ஹிந்தி ரீமேக் படத்திற்கு திரைக்கதை எழுதிய கருணாநிதி

பிளாஷ்பேக் : ஹிந்தி ரீமேக் படத்திற்கு திரைக்கதை எழுதிய கருணாநிதி

1983ம் ஆண்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய 'ரிட்டர்ன் டூ ஈடன்' என்ற ஆஸ்திரேலிய தொடர் ஹிந்தியில் 'கூன் பாரி மாங்' என்ற பெயரில் திரைப்படமாக தயாராகி பெரும் வெற்றி பெற்றது. அப்பாவி பெண்ணான நாயகியை திருமணம் செய்யும் ஒருவன் தேனிலவிற்கு அழைத்துச் சென்று கொலை செய்ய முயற்சிப்பான். அதிலிருந்து தப்பிக்கும் அவள் தன் கணவன் தன்னை ஏன் கொலை செய்ய முயற்சித்தான் என்பதை கண்டுபிடித்து அவனை பழிவாங்குவதுதான் இதன் கதை.

இந்த படத்தை தமிழில் 'தென்றல் சுடும்' என்ற பெயரில் ரீமேக் செய்தார்கள். இந்த படத்தில் நடித்த ராதிகாதான் இதில் ஆர்வம் காட்டி தமிழுக்கு கொண்டு வந்தார். படத்தை இயக்கிய மனோபாலா ஆரம்பத்தில் ரீமேக் என்பதால் தயக்கம் காட்டினார். ஆனால் தமிழுக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்கிறோம், திரைக்கதை, வசனத்தை கருணாநிதி எழுதுகிறார் என்றதும் ஒப்புக் கொண்டார்.

படத்தின் திரைக்கதை, வசனத்தை கருணாநிதி எழுதினார். ஹிந்தியை கடுமையாக எதிர்த்து வந்த கருணாநிதி ஒரு ஹிந்தி படத்தின் ரீமேக்கிற்கு வசனம் எழுதியது அப்போது அவரது எதிர்ப்பாளர்களால் விமர்சனம் செய்யப்பட்டது.

இதில் நிழல்கள் ரவி, ராதிகா, மனோரமா, சரத்பாபு, சாருஹாசன், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசை அமைத்திருந்தார். இந்த படத்தின் மூலம்தான் யுவன் சங்கர் ராஜா பின்னணி பாடகராக அறிமுகமானார், 'தூரி தூரி' என்ற பாடலை ஜானகியுடன் இணைந்து பாடியிருந்தார். படம் சுமாரான வரவேற்பை பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !