உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : தேவரை 'வாழ வைத்த தெய்வம்'

பிளாஷ்பேக் : தேவரை 'வாழ வைத்த தெய்வம்'

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக இருந்த சாண்டோ சின்னப்பத்தேவர் மிகுந்த கடவுள் நம்பிக்கை உள்ளவர். மருதமலை முருகன் பெயரை தனது பெயருக்கு முன்னால் இன்ஷியலாக போட்டுக் கொண்டவர். எம்ஜிஆருக்கு நண்பராக இருந்து அவரது படங்களை தயாரித்து பெரிய வெற்றிகளை குவித்து வசூலையும் அள்ளியவர்.

இடையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, நீதிமன்றம் வரை சென்று இருவரும் பிரிந்தனர். இதனால் எம்ஜிஆர் இல்லாமல் சில படங்களை தயாரித்த தேவர் பெரும் தோல்வி அடைந்து, பெரிய பொருளாதார இழப்பையும் சந்தித்தார். இதனால் கடவுள் நம்பிக்கையாளரான தேவர் இதுதான் எனது கடைசி படம் என்று இறைவன் மீது பாரத்தை போட்டு ஒரு படத்தை தொடங்கினார். கதைகூட ரெடியாகாத நிலையில் அந்த படத்திற்கு 'வாழவைத்த தெய்வம்' என்று அவரே தலைப்பு வைத்து விட்டு கதை தேடினார்.

அப்போது ஆரூர்தாஸ் டப்பிங் படங்களுக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தார். அவரை அழைத்து வந்து இந்த தலைப்புக்கு ஏற்றவாறு ஒரு கதையும், வசனமும் எழுதுமாறு சொன்னார். அந்த வகையில் பிற்காலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை வசனம் எழுதிய ஆரூர் தாஸுக்கு இது முதல் நேரடி தமிழ் படமானது.

நாயகனாக எஸ்.எஸ்.ராஜேந்திரனை நடிக்க அழைத்தார். எம்ஜிஆரை பகைத்துக் கொள்ள விரும்பாத அவர் நடிக்க மறுத்து விட்டார். அதன்பிறகு ஜெமினி கணேசன் நடித்தார், அவரது ஜோடியாக சரோஜாதேவி நடித்தார். எம்ஏ திருமுகம் இயக்கினார். படம் பெரிய வெற்றி பெற்று, தேவரை தெய்வம் வாழவைத்தது. பின்னர் எம்ஜிஆருடன் சமாதானமாகி பல வெற்றிப் படங்களையும் தயாரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !