எஸ்.பி.பி பிறந்தநாள்: இளையராஜா, கமல் வாழ்த்து
அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இசையுலகில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி பல சாதனைகளை படைத்தவர் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். 2020ல் காலமானார். பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடியுள்ள இவரின் 80வது பிறந்தநாள் இன்று. இதனையடுத்து அவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இசையமைப்பாளர் இளையராஜா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''ஒரு இசையமைப்பாளரின் தொலைநோக்குப் பார்வையை எஸ்.பி.பி-யை விட வேகமாகப் புரிந்துகொண்டவரும், ஒரு பாடலில் அவரை விட அதிக கவனம் செலுத்தியவரும் வேறு யாரும் இல்லை. அவரது வாழ்க்கை, நட்பு மற்றும் 50,000 பாடல்கள் என்ற இணையற்ற சாதனையைக் கொண்டாடுகிறோம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், எஸ்.பி.பி'' எனப் பதிவிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில், ''என் கரம் பற்றிய விரல், என் இசைக்கான குரல் அன்னையா எஸ்.பி.பாலசுப்ரமண்யம் அவர்களின் பிறந்த நாள் இன்று. அவர் வாழ்க, குரலாக'' எனப் பதிவிட்டு வாழ்த்தியுள்ளார்.