ஷாருக்கான், கஜோல் உள்ளிட்ட பல பிரபலங்களை அன்பாலோ செய்த கரண் ஜோஹர்
பாலிவுட்டில் பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என அனைத்து தரப்பிலும் நட்பு பாராட்டி வருபவர். காபி வித் கரண் என்கிற ஒரு டாக் ஷோவை நடத்தி வருபவர். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை சுமார் 1.7 கோடிக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். இந்த நிலையில் தான் பின் தொடரும் பட்டியலில் இருந்து தற்போது நிறைய பேரை அன்பாலோ செய்து அந்த எண்ணிக்கையை 70-க்கும் கீழே குறைத்துள்ளார் கரண் ஜோஹர்.
அப்படி அவர் அன்பாலோ செய்தவர்களில் ஷாருக்கான், கஜோல், ஆலியா பட், கரீனா கபூர், வருண் தவான் உள்ளிட்ட பல பிரபலங்கள் உள்ளனர். திடீரென இப்படி அவர் பல பிரபலங்களை அன்பாலோ செய்தது அவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவா என்கிற சலசலப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
ஆனால் இது ஒரு விவாதமாக மாறிய நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள கரண் ஜோஹர், இது ஒரு டிஜிட்டல் டிடாக்ஸ். அதாவது இன்ஸ்டாகிராமில் நான் செலவிடும் நேரத்தையும் ஆற்றலையும் குறைப்பதற்காகவே அனைவரையும் அன்பாலோ செய்கிறேன். தயவுசெய்து இதை ஒரு தேசிய செய்தியாக மாற்றாதீர்கள், இது ஒரு தேவையற்ற விஷயம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் செலவிடும் நேரத்தைக் குறைப்பதற்கு எதற்காக மற்றவர்களை அன்பாலோ செய்ய வேண்டும், இன்ஸ்டாகிராம் பக்கமே வராமல் இருக்கலாமே என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.