அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார்?
'ஜேம்ஸ் பாண்ட்' என்பது 1953ல் பிரிட்டிஷ் எழுத்தாளர் இயன் பிளெமிங்கால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனையான உளவாளி பாத்திரம். பிரிட்டானிய உளவுத்துறையான MI6ல் பணிபுரியும் ஒருவருக்கு '007' என்ற ரகசிய குறியீட்டுப் பெயரும், 'கொலை செய்வதற்கான உரிமமும்' உண்டு.
இதனை அடிப்படையாக கொண்டு இயன் பிளெமிங் எழுதிய நாவல்களின் அடிப்படையில், 1962 முதல் ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வரத்துவங்கின. சீன் கானரி, ரோஜர் மூர், பியர்ஸ் பிராஸ்னன், டேனியல் கிரெய்க் என பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். உலகளவில் மிக நீண்ட காலம் ஓடிக்கொண்டிருக்கும் வெற்றிகரமான திரைப்படத் தொடர்களில் இதுவும் ஒன்று.
அந்த வகையில் சில ஆண்டுகளாக ஜேம்ஸ்பாண்டாக இருந்து வரும் டேனியல் கிரெய்க், அதில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார் என தேடி வருகின்றனர். அதில் ரசிகர்களும் பல ஹாலிவுட் நடிகர்களின் பெயர்களை பரிசீலனை செய்து வருகின்றனர்.
நடிகர்கள் ஆரோன் டெய்லர்-ஜான்சன், தியோ ஜேம்ஸ், ஹாரிஸ் டிக்கின்சன் மற்றும் ஹென்றி கேவில் போன்ற பிரபலங்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக ஹாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்பு ஜேம்ஸ் பாண்டாக நடித்த பியர்ஸ் பிராஸ்னனும் மீண்டும் பாண்ட் ஆக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
அமேசான் மற்றும் எம்.ஜி.எம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் அடுத்த புதிய ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தை டெனிஸ் வில்லெனுவ் இயக்க உள்ளார். அதற்காக இதில் ஒருவரை தான் அடுத்த ஜேம்ஸ்பாண்டாக தேர்வு செய்ய உள்ளனர். அவர்களுக்கான ஆடிஷனும் படக்குழு நடத்தி வருகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.