சிங்கிள் தியேட்டர்கள் ஸ்டிரைக் : தெலுங்கானா தியேட்டர் சங்கம் முடிவு ?
தெலுங்குத் திரையுலகத்தில் புதிய படங்களை சதவீத பங்கு அடிப்படையில் மட்டுமே வெளியிடுவோம் என தெலங்கானா தியேட்டர்கள் சங்கம் சமீபத்தில் அறிவித்திருந்தது. அதற்கு தயாரிப்பாளர் சங்கம் தக்க பதிலடியைக் கொடுத்திருந்தது. இந்த விவகாரம் இரு தரப்பினருக்கும் இடையில் மோதலை உருவாக்கியுள்ளது. பரஸ்பரம் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிப் பேசி வருகிறார்கள்.
இந்நிலையில் தயாரிப்பாளர்களுக்கு 'செக்' வைக்கும் விதமாக தியேட்டர் சங்கத்தினர் புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தெலங்கானாவில் உள்ள சிங்கிள் தியேட்டர்களை மூட அவர்கள் முடிவு செய்துள்ளார்களாம். சதவீத பங்கு அடிப்படையில் படங்களைத் திரையிட தயாரிப்பாளர்கள் சம்மதிக்கும் வரையில் இந்த ஸ்டிரைக்கை செயல்படுத்த உள்ளதாகச் சொல்கிறார்கள்.
இதனால், ஜூன் மாதம் வெளியாக உள்ள 'பெத்தி' உள்ளிட்ட படங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். இதில் தெலங்கானா அரசு உடனே தலையிடுமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.