தமிழ்ப் படம் இயக்கும் ஹிந்தி இயக்குனர் பால்கி
தமிழகத்தில் கும்பகோணத்தில் பிறந்து பெங்களூருவில் வளர்ந்து மும்பையில் செட்டிலானவர் இயக்குனர் பால்கி. அவரது முழுப்பெயர் பாலகிருஷ்ணன், சுருக்கமாக பால்கி என வைத்துக் கொண்டார்.
2007ல் அமிதாப்பச்சன், தபு நடித்து வெளிவந்த 'சீனிகம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அடுத்து அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், வித்யாபாலன் நடித்த 'பா' படத்தை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து 'ஷமிதாப், கி கா, பேட் மேன், சுப் ரிவெஞ்ச் ஆப் ஆர்ட்டிஸ்ட், லஸ்ட் ஸ்டோரிஸ் 2, கூமர்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக எந்தப் படத்தையும் இயக்காமல் இருக்கிறார்.
அவர் இயக்கிய 'சீனி கம், பா, ஷமிதாப், கி கா' ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இளையராஜாவுடன் இணைந்துள்ளார் பால்கி.
ஆனால், இந்த முறை அது ஹிந்திப் படமல்ல, தமிழ்ப்படம். இசையமைக்க வந்து 50 ஆண்டுகள் முடிவடைந்ததை அடுத்து நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் இளையராஜா. அப்போது பால்கி, இயக்குனர் பாக்யராஜ், பாடலாசிரியர் பா விஜய் ஆகியோர் உடனிருந்தார்கள்.
இளையராஜா பேசுகையில்,“பால்கியின் தமிழ்ப் படத்திற்காக இசை நடந்து கொண்டிருக்கிறது,” என்றார். இதன் மூலம் பால்கி தற்போது தமிழ்ப்படம் ஒன்றை இயக்கும் வேலைகளில் இருக்கிறார் என்பது உறுதி ஆகியுள்ளது.
இப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை. விரைவில் வெளியாகலாம்.