கேளுங்க சொல்கிறோம் - வாசகர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாதசிவாச்சாõரியார்.
கேளுங்க சொல்கிறோம் - வாசகர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாதசிவாச்சாõரியார்.
ADDED : டிச 03, 2010 03:14 PM

** மாலை வேளையில் தீபம் ஏற்ற சரியான நேரம் எது?ஆர்.கார்த்திகேயன், திண்டுக்கல்
சந்தியா காலத்தில் விளக்கேற்ற வேண்டும். பகலும் இரவும் சந்திக்கும் மாலை வேளை சந்தியாகாலம் எனப்படும். இது சமயத்தில் மஞ்சள் வெயில் இருக்க வேண்டும். சூரியன் அஸ்தமனமாவதற்கு முன் 24 நிமிடங்கள் சந்தியா காலமாகும். உதாரணத்துக்கு 6 மணிக்கு சூரிய அஸ்தமனம் என்றால், 5.36 மணியில் இருந்து 6 மணிக்குள் விளக்கேற்றி விட வேண்டும். சூரிய உ<தய, அஸ்தமன நேரம் தினமலர் நாளிதழில் தினமும் வெளியிடப்படுகிறது.
*உடல்நிலை காரணமாக தினமும் கோயிலுக்குச் செல்ல முடியவில்லை. வீட்டிலிருந்தபடியே ஸ்லோகங்களைச் சொல்லி வழிபட்டால் கோயிலுக்குச் சென்ற பலன் கிடைக்குமா? வி.விஜயலட்சுமி, கொட்டிவாக்கம்
உடல்நிலை சரியில்லாத நிலையிலும் கோயிலுக்குச் செல்ல முடியவில்லையே என்று தாங்கள் வருந்துவது கண்டிப்பாக இறைவனுக்குப் புரியும். நீங்கள் வீட்டிலிருந்தபடியே மனதார வழிபடும் பொழுது சுவாமியே உங்கள் வீடு தேடி வந்து நலமளிப்பார். சந்தேகம் வேண்டாம்.
* சதாபிஷேகம் 80 வயது முடிவதற்குள் செய்ய வேண்டுமா? அல்லது 80 வயது முடிந்த பிறகு செய்ய வேண்டுமா? ஆர்.வி.என்.எஸ்.மணி, மதுரை
சதாபிஷேகம் செய்து கொள்வதை 80 வயது முடிந்து 10 மாதங்கள் மற்றும் 27 நாட்களுக்குப் பிறகு செய்ய வேண்டும் என சாந்தி 'ரத்னாகரம்' என்ற நூலும், ஆயிரம் பிறை கண்டவர்களுக்குச் செய்ய வேண்டும் என 'சாமிக ஆகமம்' என்ற நூலும் கூறுகின்றன. இரண்டையும் ஆராய்ந்து பார்த்தால் ஒன்றாகவே உள்ளது. அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாம் பிறையை நாம் எல்லாருமே தரிசிக்க வேண்டும். இதனால் ஆயுள் விருத்தியடையும். ஒரு வருடத்திற்கு 13 முறை மூன்றாம் பிறை வரும். ஆயிரம் முறை எனக்கணக் கிட்டுப் பார்த்தால் 77 ஆண்டுகள் இடைவிடாது பிறை காண வேண்டும். நமக்கு நினைவு தெரிந்து பிறை தரிசிப்பதற்கு நான்கு வயதாவது ஆக வேண்டும். கூட்டிப்பார்த்தால் நினைவு தெரிந்து ஆயிரம் பிறை கண்டு முடிப்பதற்கு முன்பு சொன்ன 80 வயது 10 மாதங்கள் 27 நாட்கள் முடிய வேண்டும் என்ற கணக்கு சரியாக வருகிறது. சதாபிஷேகத்தை ஜன்ம நட்சத்திரத்தில் தான் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. நல்ல முகூர்த்த நாள் பார்த்து செய்யலாம் என்றும் ஆகமங்கள் கூறுகின்றன.
* நவக்கிரகத்தை ஒன்பது முறை பிரதட்சிணம் செய்துவிட்டு (வலம் வருதல்) அப்பிரதட்சிணமாக இரண்டு முறை சுற்ற வேண்டும் என்கிறார்களே? எதனால்? கே.ரங்கநாதன், காஞ்சிபுரம்
சொன்னவர்களிடம் 'இது எந்த சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது?' என்று கேட்டு எனக்கும் சொல்லுங்கள். ஆலயத்தில் பிரதான மூர்த்தியாகிய சிவபெருமானையோ அல்லது விஷ்ணுவையோ வலம் வரும் பொழுது எல்லா சுவாமிகளையும் தரிசிக்கலாமே தவிர, எந்த ஒரு தனிப்பட்ட பரிவார மூர்த்தியையும் பிரதட்சிணம் செய்வதே தவறு. இதில் ஒன்பது முறை பிரதட்சிணம், இரண்டு முறை அப்பிரதட்சிணம் என்பதெல்லாம் பொருந்தாது. அதிலும் அப்பிரதட்சிணம் என்பது நல்ல காரியங்களில் செய்யவே கூடாது.
* மந்திரம், ஸ்லோகம் இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை தெளிவுப்படுத்தவும்? சீனிவாசன் திருமலை, கோயம்புத்தூர்
மந்திரம் மனதிற்குள் ஜபம் செய்வது. ஸ்லோகம் வாய்விட்டுப் பாராயணம் செய்வது.

