ADDED : ஆக 21, 2025 01:53 PM

பிறந்த நட்சத்திர நாளன்று கோயில் வழிபாடு செய்தால் முன்வினை பாவம் தீரும். அன்று அவரவர் நட்சத்திரத்திற்கு உரிய தெய்வம், மரத்தை வழிபடுவது இன்னும் சிறப்பு. அதற்குரிய விசேஷ தலமாக திருவண்ணாமலை மாவட்டம் உக்கம்பெரும்பாக்கம் கூழமந்தல் ஏரிக்கரை அருகிலுள்ள நட்சத்திர விருட்ச விநாயகர் கோயில் உள்ளது.
காஞ்சி மஹாபெரியவரின் வழிகாட்டுதலால் சிவானந்த சரஸ்வதி சதாசிவ சித்தர் சுவாமிகள் இங்கு நட்சத்திர விருட்சங்களை (மரம்) பிரதிஷ்டை செய்தார். பிறந்த நட்சத்திர நாளில் இங்குள்ள விநாயகரை வழிபட்ட பின் நட்சத்திர அதிதேவதைக்கு அபிேஷகம், அர்ச்சனை செய்வது நல்லது. அப்போது மரத்தை மூன்று முறை சுற்றுவது அவசியம். இதனால் சகல தோஷங்களும் விலகும். வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தைப்பேறு என சுபவிஷயங்கள் தடையின்றி நிறைவேறும். நட்சத்திரம் தெரியாதவர்கள் 27 நட்சத்திரம், 12 ராசிக்கான மரங்களை எல்லாம் பொதுவாக வழிபாடு செய்யலாம்.
காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதியான விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிரதிஷ்டை செய்த அத்திருத்ராட்ச லிங்கேஸ்வரர் இங்கு இருக்கிறார். வள்ளி, தெய்வானையுடன் சிவசுப்பிரமணியர், குருபகவான், சனீஸ்வரர், ராகு, கேதுவுக்கு சன்னதிகளும் உள்ளன.
எப்படி செல்வது: காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலையில் உக்கம்பெரும்பாக்கம் அருகே உள்ளது கூழமந்தல் ஏரிக்கரை.
* காஞ்சிபுரத்தில் இருந்து 18 கி.மீ.,
* வந்தவாசியில் இருந்து 22 கி.மீ.,
விசேஷ நாள்: தமிழ்ப்புத்தாண்டு, விநாயகர் சதுர்த்தி, பவுர்ணமி, சனி, குரு, ராகு, கேது பெயர்ச்சி.
நேரம்: காலை 8:00 - 12:00 மணி; மாலை 4:00 - 7:00 மணி
தொடர்புக்கு: 79048 79371, 94451 20996
அருகிலுள்ள கோயில்: செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில் 21 கி.மீ., (கல்வியில் சிறக்க...)
நேரம்: அதிகாலை 5:30 - 12:00 மணி; மதியம் 3:30 - 8:30 மணி
தொடர்புக்கு: 0418 -222 4387