
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முல்பாகல் அருகிலுள்ள குருடு மலையில் லட்சுமிகணபதி கோயில் உள்ளது. முதல் யுகமான கிருத யுகத்தில் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவனால் உருவாக்கப்பட்ட விநாயகர் குடியிருக்கிறார்.
காலப்போக்கில் வழிபாடு இல்லாமல் போனது. விஜயநகர மன்னரான கிருஷ்ண தேவராயரின் கனவில் தோன்றி குருடு மலையில் இருப்பதாகவும், அங்கு கோயில் கட்டுமாறும் விநாயகர் உத்தரவிட்டார். அக்கோயிலே தற்போது வழிபாட்டில் உள்ளது. சாளக்கிராம கல்லால் ஆன விநாயகர் சிலையின் உயரம் 11 அடி. கிழக்கு நோக்கியுள்ள இவரை தரிசித்தால் முயற்சி எல்லாம் வெற்றி பெறும். கருவறைக்கு அருகில் பார்த்தால் சுவாமி சிலை சிறியதாகவும், வாசலுக்கு அருகில் நின்று பார்த்தால் பெரியதாகவும் தோன்றுவது வித்தியாசமானது. அஸ்திவாரம் இல்லாமல் சமதளமான பாறையில் கோயில் கட்டப்பட்டுள்ளது.
பிரகாரத்தில் சாமுண்டீஸ்வரி, சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதிகள் உள்ளன. சிவனுக்குரிய வில்வம் தலவிருட்சமாக உள்ளது. தமிழ், கன்னடம், தெலுங்கில் கல்வெட்டுகள் உள்ளன. ஆதிகாலத்தில் தேவர்கள், ரிஷிகள் கூட்டமாக வழிபட்டதால் 'கூட்டாத்திரி மலை' என்றும் பெயருண்டு. அதுவே பின்னாளில் 'குருடு மலை' என்றானது.
ஆங்கில புத்தாண்டு 'மகா பஞ்சாமிர்த அபிஷேகம்' நடக்கும். ரதசப்தமியன்று 13 கி,மீ., சுற்றளவு கொண்ட மலையைச் சுவாமி சுற்றி வருகின்றனர். பிப்ரவரி கடைசி ஞாயிறன்று வெண்ணெய் அலங்காரமும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரம்மோற்ஸவமும் நடக்கும். கார்த்திகை மாத குமார சஷ்டியன்று 1108 லிட்டர் கரும்புச்சாறு அபிஷேகம், 1108 சகஸ்ர மோதக ஹோமம், 1108 வடைகளால் ஆன மாலை சாத்துகின்றனர்.
இங்கு வழிபடுவோருக்கு வெளிநாட்டுக்கு செல்லும் யோகம் உண்டாகும். கணவன், மனைவி ஒற்றுமைக்காக இங்கு 'மண்டல பூஜை' நடத்துகின்றனர். பிரசாதமாக தரும் சந்தனத்தை பூசினால் செல்வம் பெருகும். ராகு, கேது தோஷம் அகல விநாயகருக்கு ஏலக்காய் மாலை சாத்துகின்றனர். நினைத்தது நிறைவேற 1008 மோதகம் படைக்கின்றனர்.
எப்படி செல்வது
* பெங்களூரு - திருப்பதி சாலையில் 80 கி.மீ., துாரத்தில் முல்பாகல். இங்கிருந்து 10 கி.மீ.,
* சென்னையில் இருந்து சித்துாருக்கு 160 கி.மீ., அங்கிருந்து 80 கி.மீ., துாரத்தில் முல்பாகல். இங்கிருந்து 10 கி.மீ.,
விசேஷ நாள்: விநாயகர் சதுர்த்தி
நேரம்: காலை 7:00 -- 2:00 மணி; மதியம் 3:00 -- 7:00 மணி
தொடர்புக்கு: 99458 80990, 86652 22949
அருகிலுள்ள கோயில் : திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் 90 கி.மீ., (மகிழ்ச்சியாக வாழ...)
நேரம்: அதிகாலை 2:30 மணி - இரவு 11:59 மணி
தொடர்புக்கு: 0877 - 227 7777