ADDED : ஆக 28, 2025 12:31 PM

ஆஞ்சநேயர் கோயில் - மிளகு வடை
சிறிய திருவடி எனப்படும் அனுமன் வாயுபுத்திரன், கேசரி மைந்தன், அனுமன், மாருதி, சொல்லின் செல்வன், சுந்தரன் என பல திருநாமங்களால் அன்போடு அழைக்கப்படுபவர். வலிமைக்குப் பெயர் பெற்ற இவரை வழிபட்டால் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளையும் பலமிழக்கச் செய்வார். பக்தர்கள் கேட்கும் வரங்களை தாமதிக்காமல் உடனுக்குடன் அருள்பவர் இவர். ராமபக்த ஆஞ்சநேயர், பஞ்சமுக ஆஞ்சநேயர், காட்டுவீர ஆஞ்சநேயர்,
குபேர வீர ஆஞ்சநேயர், கணையாழி ஆஞ்சநேயர், திரிநேத்ர சதபுஜ ஆஞ்சநேயர், வீர ஆஞ்சநேயர், பால ஆஞ்சநேயர், விஸ்வரூப ஆஞ்சநேயர், பவ்ய ஆஞ்சநேயர், சஞ்சீவி ஆஞ்சநேயர், கல்யாண ஆஞ்சநேயர், வரத ஆஞ்சநேயர், ஜெயமங்கள ஆஞ்சநேயர், யோக ஆஞ்சநேயர், நிருத்த ஆஞ்சநேயர் என பல பெயர்களில் இவருக்கு கோயில்கள் உள்ளன. அனுமனுக்கு மிகவும் விருப்பமான வடைமாலையை சாற்றி வழிபடுவது விசேஷம். எப்போதும் ராமருக்கு சேவை செய்யும் அனுமனுக்கு களைப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக உளுந்த வடை தயாரித்து கொடுத்தாள் அனுமனின் தாயான அஞ்சனை. இதனாலேயே அனுமனுக்கு வடைமாலை சாற்றும் பழக்கம் ஏற்பட்டது.
அஞ்சனைக்கும் வாயுபகவானுக்கும் பிறந்தவர் அனுமன். இளம் வயதில் ஒருமுறை விளையாடிக் கொண்டிருந்த போது அனுமனுக்குப் பசி எடுத்தது. அப்போது சூரியனை பழம் எனக் கருதி அதை உண்பதற்காக ஆகாயத்தை நோக்கிப் பறந்தார். அந்த நேரத்தில் ராகுவும் கிரகணத்தை ஏற்படுத்த சூரியனை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். வாயுமைந்தனான அனுமனின் வேகத்துக்கு ராகுவால் ஈடு கொடுக்க முடியுமா? தன்னை விட வேகமாகச் செல்லும் அனுமனின் வேகத்தையும் வீரத்தையும் கண்டு பிரமித்த ராகு, “அனுமனே! சூரியனைப் பிடித்து கிரகணத்தை உண்டாக்கும் நேரம் வந்துவிட்டது. தயவு செய்து உன் வேகத்தை குறைத்துக் கொள்” என வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும் அனுமனின் வேகத்திற்கு ராகுவால் ஈடு கொடுக்க முடியாததால் சூரிய கிரகணம் நடக்கவில்லை.
அனுமனின் வீரத்தைக் கண்டு வியந்த ராகு பகவான் வரம் ஒன்றைக் கொடுத்தார். “எனக்கு உகந்த தானியமான கருப்பு உளுந்தால் வடை மாலை தயாரித்து உன்னை வழிபடும் பக்தர்களை துன்புறுத்த மாட்டேன். ராகு தோஷம் ஏற்பட்டாலும் இந்த வழிபாடு செய்தால் உடனே நிவர்த்தியாகும்'' என வாக்களித்தார். இதனால் தான் உளுந்து வடை மாலை அனுமனுக்கு சாற்றப்படுகிறது.
ராகு உள்ளிட்ட கிரக தோஷத்தில் இருந்து விடுபடவும், விருப்பம் நிறைவேறவும் பக்தர்கள் அனுமனுக்கு வடைமாலை சாற்றுகின்றனர். 54, 108, 1008, 1,00,008 என்ற எண்ணிக்கையில் வடைகள் கோர்க்கப்பட்டு மாலை சாற்றும் வழக்கம் உள்ளது. ஆண்டுதோறும் மார்கழி அமாவாசையும் மூலநட்சத்திரமும் சேரும் நாளில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி அன்று 18 அடி உயரமுள்ள ஒற்றைக் கல்லால் ஆன ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலையால் அலங்காரம் நடக்கும். 2250 கிலோ உளுந்தம் பருப்பு மாவும், 32 கிலோ மிளகு, 33 கிலோ சீரகம், 750 லிட்டர் நல்லெண்ணெய் கொண்டு ஒரு லட்சத்து எட்டு வடைகள் தயாரிக்கப்படுகின்றன.
அனுமன் கோயில்களில் நெற்றியில் இட்டுக் கொள்ள செந்துாரம் தரப்படும். ராமனின் ஆயுள் பலத்திற்காக நெற்றியில் செந்துாரம் பூசிக் கொள்ளுவதாக ஒருமுறை சீதை சொல்லக் கேட்ட அனுமன், “என் பிரபு ராமனின் ஆயுள் கூடுமென்றால் உடல் முழுவதும் செந்துாரம் பூசிக்கொள்வேன்'' என செந்துாரம் பூசிக் கொண்டார். இதனடிப்படையில் செந்துாரம் பிரசாதமாக தரப்படுகிறது.
இனி அனுமனுக்கு பிடித்த மிளகு வடையினை எப்படி செய்வது என பார்ப்போம்.
தேவையானவை
உளுந்து - 200 கி
சீரகம் - 2 ஸ்பூன்
மிளகு - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: உளுந்தை கழுவி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் ஊற வைத்த உளுந்தை தண்ணீர் சேர்க்காமல் நைசாக அரைக்க வேண்டும். மிளகு, சீரகத்தை சற்று கொரகொரப்பாக உடைத்துக் கொள்ளவும். அரைத்த உளுந்த மாவுடன் உடைத்த மிளகு, சீரகம், உப்பு சேர்த்து நன்றாகப் பிசையவும். அகலமான கடாயில் எண்ணெய்யை விட்டு நன்கு காய்ந்த பின் வாழை இலையில் எண்ணெய்யைத் தடவி மாவை தட்டி நடுவில் சிறு துளையிட்டு எண்ணெய்யில் பொரித்து எடுக்க வேண்டும். மாவை அரைத்தவுடன் வடை சுடுவது அவசியம். இப்போது அனுமனுக்கு பிடித்த மிளகு வடை தயார்.
-பிரசாதம் தொடரும்
ஆர்.வி.பதி