ADDED : ஆக 28, 2025 12:30 PM

பெண்மையைப் போற்றுவோம்
பாரதியார் புதிய ஆத்திசூடியில், 'தையலை உயர்வு செய்' என்கிறார். நாட்டின் முன்னேற்றம் பெண்களை பொறுத்தது என்றால் பெண்களின் முன்னேற்றம் அவர்களின் கல்வியை பொறுத்து அமையும். இதனால் தான், 'பெண்மை வாழ்க' என்றும், 'பெண்மை வெல்க' என்றும் பெண் விடுதலைக்காகக் கும்மி வடிவில் குரல் கொடுத்தார் பாரதியார். இந்திய சிந்தனை மரபில் ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் சமமான வாய்ப்பு தரப்பட்டது. நம் இதிகாசம், இலக்கியங்கள் பெண்மையைப் போற்றுகின்றன.
கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி, கோதாவரி, சிந்து என்பன நதிகள். தாமரை, ரோஜா, அல்லி, மல்லிகை என்பன மலர்கள். இவை அனைத்தும் பெண்களின் பெயர்கள். அதே போல நம் கலாசாரத்தில் அக்னி சாட்சியாக திருமணம் செய்த பின்னரே ஒருவர் செய்யும் எந்த செயலுக்கும் பலன் கிடைக்கும். மனைவி இல்லாமல் ஒருவர் செயலில் ஈடுபடுவதற்கு சாஸ்திரம் அனுமதிக்கவில்லை. வேத காலத்தில் ஆண்களுக்கு இணையாக 33 பெண் மகரிஷிகளும், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த காலத்தில் 30 பெண் புலவர்களும் இருந்தனர்.
தன் கருத்தை நிலைநாட்ட ஆதிசங்கரர் முதலில் சென்ற இடம் பண்டிதர் மண்டன மிஸ்ரர் வீடு. அங்கு இருவரும் விவாதத்தில் ஈடுபட்டனர். அதில் தோற்பவர் மற்றொருவரின் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது நிபந்தனை. இதற்கு நடுவர் யார் தெரியுமா - எதிர்வாதம் செய்ய இருந்தவரின் மனைவியான உபயபாரதி. இங்கே பெண்ணின் அந்தஸ்தை பாருங்கள். சனாதன தர்மம், மனுஸ்மிருதி கொடுத்ததே உண்மையான பெண் உரிமை என்பது சிந்திக்கத்தக்கது.
அந்நியர் படையெடுப்பால் நம் பண்பாடு அனைத்தும் அழிக்கப்பட்டன என்பதை அறிந்து, இவற்றை மாற்ற வேண்டும் என்றே 'தையலை உயர்வு செய்' என்கிறார். இதை உணர்ந்த பாரதியார் புதுமைப் பெண்ணைப் படைத்துத் தம் கவிதையுலகில் உலா வரச் செய்தார். பாஞ்சாலி சபதத்திற்கு முதன்மை தந்து தனி காவியம் படைத்தார். பாரத மாதாவுக்கு நவரத்தின மாலையும், திருப்பள்ளியெழுச்சியும், திருத்தசாங்கமும் இயற்றினார். சரஸ்வதி, லட்சுமி, மாகாளி, பராசக்தி, முத்துமாரி, கோமதி என பெண் தெய்வங்களின் திருப்புகழை பாடல்களில் போற்றிப் புகழ்ந்தார். சுதந்திர தேவியைப் பணிந்து வணங்கினார்.
பாப்பாப்பாட்டு என பெண் குழந்தைக்கும் பாடல் உருவாக்கினார். 'பெண்மை தான் தெய்வீகமாம் காட்சியடா' என குயில்பாட்டில் வியந்து பாடினார். கண்ணன் பாட்டில் கண்ணம்மாவைக் கொண்டு வந்து நிறுத்தி, குழந்தையாகவும் காதலியாகவும் குலதெய்வமாகவும் கண்டு களித்தார். 'வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா' என்றும், 'மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்' என்றும் ஒரே பாடலில் தாய், மனைவியை ஒருசேர உயர்த்திக் கூறினார். 'பெண் இனிது' என வசன கவிதையிலும் பெண்மைக்குப் புகழாரம் சூட்டினார்.
பாரதியாருக்கு மூன்று குருநாதர் உண்டு. இதன் பின்னணி சிறப்பான ஒன்று. அரசியல் விடுதலைக்கு குரு திலகர். ஆன்மிக விடுதலைக்கு குரு குள்ளச் சாமியார். பெண் விடுதலைக்கு குரு சகோதரி நிவேதிதா. கல்கத்தாவில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு பாரதியார் சென்றிருந்தார். அவரைக் கண்ட விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதா, 'உன் மனைவியை அழைத்து வரவில்லையா' எனக் கேட்டார். 'அவள் பெண் தானே; வீட்டில் இருக்கிறாள்' என்றார். முகம் மாறிய நிவேதிதா, 'பெண் விடுதலை என்ற எண்ணம் இல்லாத நாடு முன்னேறி என்ன பயன்' எனக் கேட்டார். உடனே நிவேதிதாவின் காலில் விழுந்தார் பாரதியார். ''மகாபாரதத்தில் அர்ஜுனனுக்கு விஸ்வரூபம் காட்டிய கண்ணனைப் போல எனக்கு விஸ்வரூபம் காட்டி கண்களை திறந்த ஞானகுரு நீங்கள் தான்'' என்றார்.
அவரின் முதல் தொகுப்பான சுதேசி கீதங்கள் புத்தகத்தை சகோதரி நிவேதிதாவிற்கு சமர்ப்பணம் செய்தார். ஒருமுறை பாரதிதாசன் வீட்டுக்கு வந்த போது, அவருக்காக அடுப்பு பற்ற வைத்து பால் காய்ச்ச முயன்றார் பாரதியார். அது அவருக்கு சவாலாக இருந்தது. இது கூட முடியாத போது, நாம் பெண்களை எவ்வளவு உயர்வாக மதிக்க வேண்டும் என சிந்தித்தார். அதன் விளைவு தான் - 'பெண்கள் வாழ்க என்று கூத்திடுவோமடா - பெண்மை வெல்கவென்று கூத்திடுவோமடா' என பாடினார். பெண்களை பராசக்தியாகவே கருதி வணங்கினார்.
காயத்ரி மந்திரத்தின் தேவதை காயத்ரியை, வேத மாதா எனப் போற்றுகிறது வேதம். குடும்பத்திற்கு பெண்ணே ஒளி தருகிறாள் என்கிறது மனு ஸ்மிருதி. பெண்ணை மனிதனின் மறுபாதி மற்றும் சிறந்த நண்பர் என்கிறார் சாணக்கியர். உபநிஷத்துகள் போற்றும் மைத்ரேயி என்ற பெண் தத்துவமேதை, மகரிஷி யாக்ஞவல்கியருடன் விவாதித்த போது நிலையாமை பற்றி பேசுகிறாள்.
'ஜகதப் பிதரவ் வந்தே பார்வதி பரமேஸ்வரவ்' - அதாவது உலகின் தாய் தந்தையரான பார்வதியையும் பரமேஸ்வரனையும் வணங்குகிறேன் என்கிறார் காளிதாசர். ஜானகிராமன், சீதாராமன், பார்வதிநாதன், வள்ளிக்கண்ணன், உமாமகேஸ்வரன், லட்சுமி நாராயணன் என்றெல்லாம் ஆன்மிகம் பெண்களுக்கே முதலிடம் தருகிறது. கோயில்களில் மீனாட்சி உடனுறை சுந்தரேஸ்வரர், காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர், சாரதா சந்திரமவுலீஸ்வரர் என்றே சுவாமியின் பெயர்கள் அழைக்கப்படுகின்றன.
புராண இதிகாச காலங்கள் தவிர வரலாறு, விடுதலைக் காலங்களிலும் பெண்களின் பங்களிப்பு மிக அதிகம். பிரதமர், ஆளுநர், அமைச்சர், முதல்வர், அதிகாரி, துணைவேந்தர், மருத்துவர், ஆசிரியர், வழக்கறிஞர், விமான ஓட்டி என் எல்லா பதவிகளிலும் பெண்களின் பங்களிப்பு இன்று சிறப்பாக உள்ளது. ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், காந்திஜி, ராஜாஜி, வ.உ.சி, நேதாஜி, படேல் போன்ற சான்றோர்கள், பெண்களின் முன்னேற்றம் நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம் என வலியுறுத்தியதோடு தங்களின் பங்களிப்பையும் அளித்தனர்.
பாஞ்சாலி சபதம் என்ற படைப்பே அடிமைத்தனத்தில் இருந்து பாரதத்தாயை மீட்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பாரதியார் உருவாக்கிய காவியம் தான். வாழ்வில் மிகவும் கஷ்டப்பட்டு, பழங்குடியினப் பிரிவில் இருந்து போராடி வந்தவரே நம் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு என்பதை அறியும் போது, 'தையலை உயர்வு செய்' என்றும் 'எங்கெங்கு காணினும் சக்தியடா' என்றும் பாடிய மீசைக் கவிஞரின் எழுத்து இன்று மெய்யாகி நாடே பெருமை கொள்கிறது. 'எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண்' என்ற பாரதியாரின் மந்திர வார்த்தைகளின்படி, உண்மையான பகுத்தறிவைக் கண்டு கொண்டு பெண்மை சரித்திரம் படைக்கட்டும். பாரதியின் கனவு மெய்ப்படட்டும்.
-ஆத்திசூடி தொடரும்
முனைவர் தென்காசி கணேசன்
94447 94010