/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
நவநங்கைகள் அம்மன்களாக வலம் வந்த நவராத்திரித் திருவிழா ஹூஸ்டனில்!!!
/
நவநங்கைகள் அம்மன்களாக வலம் வந்த நவராத்திரித் திருவிழா ஹூஸ்டனில்!!!
நவநங்கைகள் அம்மன்களாக வலம் வந்த நவராத்திரித் திருவிழா ஹூஸ்டனில்!!!
நவநங்கைகள் அம்மன்களாக வலம் வந்த நவராத்திரித் திருவிழா ஹூஸ்டனில்!!!
அக் 16, 2024

நம் தமிழ் கலாச்சாரத்தையும் பக்தியையும் பறைசாற்றும் இந்த விழா அமெரிக்க மண்ணில் ஹூஸ்டன் மீனாட்சி அம்மன் கோயிலில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஒன்பது நாட்களும் மீனாட்சியம்மன் சக்தி சொரூபமாக எழுந்தருளி அனைவருக்கும் அருள்புரிவாள். படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று சக்திகளையும் அன்னை பெற்று இந்த ஒன்பது நாட்களும் போர் புரிந்து அசுரர்களை அழித்து உலகைக் காத்தாள் என்பது ஐதீகம். அன்றும் இன்றும் என்றும் பெண் என்பவள் சக்தியின் வடிவம், அவளால் அவள் நினைத்தால் ஆக்கவும், காக்கவும், அழிக்கவும் முடியும்.
இயக்குனர் உரை:
தினமலர் வாசகர்களுக்கு வணக்கம். நான், Dr. கார்த்திகேயன், லித்தியம் பேட்டரி மறுசுழற்சி நிறுவனத்தில் இயக்குனராகப் பணி செய்துகொண்டுள்ளேன். இந்த படைப்பை உருவாக்க ஒரு எண்ணம் தோன்றியது, முடியுமா என்ற தயக்கமும் உடனே என்னுள் தொற்றியது, காரணம் நேரம் மற்றும் நம் முழு உழைப்பை தரவேண்டி இருக்கும் மற்றும் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்லவேண்டும் என்பது மட்டுமே. இதை பற்றி ஒவ்வொரு பெண் சக்திகளிடம் எடுத்துரைத்ததும் அவர்கள் காட்டிய ஆர்வம் எனக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்தது எனலாம். இதில் பணியாற்றிய அனைவரும் தங்களது முழு உழைப்பையும் நேரத்தையும் ஒதுக்கி விரதமிருந்து பணியாற்றியது சிலிர்ப்பைத் தந்தது. உடை, அணிகலன்கள், ஒப்பனைகள் பற்றிய குறிப்பு முதல் ஒவ்வொரு சக்திக்கான ஆயுதங்கள் பண்புகள் என ஆராய்ந்து அதை காட்சிப்படுத்தினோம். இதற்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன், மற்றும் இந்த முழுமுதல் படைப்பை உருவாக்க எண்ணம் தந்து அதை சிறப்பாக முடிக்க உதவிய இறை அருளுக்கும் நன்றி! என் படைப்பு தொடர உங்கள் இதயம் கனிந்த வாழ்த்துகளை நல்கி ஆசீரவதியுங்கள. நன்றி!
????பெண் என்பவள் மகா சக்தி, அவளைப் போற்றி வழிபடும் இந்த விழாவில், நானும் ஒரு சிறு பங்களிப்பை கொடுக்க எண்ணி இந்த “நவராத்திரி பெண்கள் (சக்திகள்)” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு உருவாக்கியதுதான் என் முழுமுதல் படைப்பு. இந்த படைப்பை உருவாக்க இரண்டு மாதங்களுக்கும் மேலாக பலரும் ஒன்றாக இணைந்து உழைத்து உருவாக்கினோம்.
எங்களது படைப்பில் ஒன்பது பெண்கள் தங்களை சக்தியாக பாவித்து உடை அலங்காரங்கள் மற்றும் ஒப்பனைகளைச் செய்து மீனாட்சியம்மன் கோயிலில் அருள்பாலித்தார்கள். இதைகண்ட மதுரை மீனாட்சியம்மன் தன்னுடைய தோழிகளான காஞ்சி காமாட்சி மற்றும் காசி விசாலாட்சியையும் அழைத்து வந்து பன்னிரு தேவிகளாக காட்சிப் படுத்தியது ஒருவித சிலிர்ப்பை ஏற்படுத்தியது. ஒவ்வொரு பெண்களும் தங்களை தேவியராக உணர்ந்தது ஒரு் சிறந்த தருணம். அனிதா இதை ஒருங்கினைத்து பயிற்ச்சி தந்தார்.
முதல் படைப்பில் நவராத்திரி பெண்கள் (சக்திகள்)-
1. முதல் நாள் சக்தியாக - சைலபுத்திரி - விஐயலக்குமி
2. இரண்டாம் நாள் சக்தியாக - பிரம்மசரியாயினி - ஸ்ரீதேவி
3. மூன்றாம் நாள் சக்தியாக - சந்திரகாந்தா - சோபனா
4. நான்காம் நாள் சக்தியாக - கூஷ்மாண்டா - கெளரி
5. ஐந்தாம் நாள் சக்தியாக - சகந்தமாதா - வித்யா
6. ஆறாம் நாள் சக்தியாக - காத்யாயினி - அனிதா
7. ஏழாம் நாள் சக்தியாக - காலராத்திரி் - சங்கீதா
8. எட்டாம் நாள் சக்தியாக - மகாகெளரி - ஜானகி
9. ஒன்பதாம் நாள் சக்தியாக - சித்திதாத்ரி - காவியா
மற்றும்
10. மதுரை மீனாட்சியாக - நிசா
11. காஞ்சி காமாட்சியாக - ஸ்ரீமலா
12. காசி விசாலாட்சியாக - ஷில்பா
ஒப்பனை கலைஞர்கள் துர்கா மற்றும் கீர்த்தனா சிறப்பாக அனைவரையும் மெருகேற்றினர். ஆடை மற்றும் அணிகலன்கள் அனைத்தும் பிட்டாரா மற்றும் மகம் டிரங் கொடுத்து உதவியது. புகைப்பட கலைஞர்கள் விஷ்ணு, ராஜ், அலெக்ஷ், ஹூஸைன் தங்களது கேமரா கண்களால் காட்சிப்படுத்தி இந்த படைப்பை சிறப்பித்தனர்.
இதற்கெல்லாம் ஒத்துழைப்பை தந்து உதவிய மீனாட்சியம்மன் கோவில் மேலாளர் சுந்தர் மற்றும் மாலதி சுந்தர்க்கும், வெங்கடாச்சலத்திற்கும் (நிர்வாக குழு உறுப்பினர்) நன்றி கூற கடமைபட்டுள்ளோம். இதை தொடர்ந்து நிர்வாக குழு கேட்டுக்கொண்டதற்கு இணங்கி நவராத்திரி விழாவிலும் எங்களது நாட்டியநாடகத்தை நடத்தினோம்.
மகிசாசூரன் வதம் - நாட்டிய நாடகம்!
நவராத்திரி விழா, பெண்களை போற்றுவது மட்டும் அல்ல, அவளின் சக்தியை உணர மற்றும் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்தச் செல்ல உதவும். நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும் அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியாகவும் மற்றும் கடைசி் மூன்று நாட்கள் சரசுவதி தேவியாகவும் காட்சிப்படுத்தபடுவாள்.
இந்த ஆண்டும் நவராத்திரி விழா சிறப்பாக கொலு பொம்மைகள் வைத்து கொண்டாட்டம் கலைகட்டியது. ஒவ்வொரு நாளும் சிறப்பு நிகழ்ச்சிகள் என மீனாட்சியம்மன் கோயில் வளாகமே திருவிழா போல காட்சியளித்தது. அதிலும் எட்டாம் நாள், துர்காஷ்டமி அன்று டாக்டர் கார்த்திகேயன் மற்றும் அவரது குழுவின் நாட்டிய நாடகம் அனைவரையும் மிக வெகுவாகக் கவர்ந்தது. இந்த நாட்டிய நாடகம் நவராத்திரி திருவிழாவின் உட்கருவான அரக்கன் மகிசாசூரனை ஒன்பது சக்திகளும் இணைந்து வதம் செய்வதே ஆகும். இதை சங்கீதா என்ற நடனகலைஞர் திறம்பட ஒருங்கிணைத்து வழங்கினார். அந்த நாட்டியநாடகத்தில் டாக்டர் கார்த்திகேயன் மகிசாசூரனாகவும், ஒன்பது பெண்கள் நவசக்தியாகவும் வந்தனர்.
1. சைலபுத்திரி - சங்கீதா
2. பிரம்மசரியாயினி - நிஷா
3. சந்திரகாந்தா - சுனைனா
4. கூஷ்மாண்டா - ரூப்ஶ்ரீ
5. சகந்தமாதா - பிரியங்கா
6. காத்யாயினி - அனிதா
7. காலராத்திரி் - ரிஷூ
8. மகாகெளரி - ஜானகி
9. சித்திதாத்ரி - காவியா
இந்த நாட்டிய நாடகத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண்டு மெய்மறந்து உடல் சிலிர்த்து ரசித்தனர். இதில் ஒன்பது பெண்கள் விரதமிருந்து அம்மனாகவே வேடமணிந்து பல நாட்களாக நடனப் பயிற்சி பெற்று தங்களது பங்களிப்பை சிறப்பாக தந்தனர். இந்த நாட்டிய நாடகத்தை ஒருங்கிணைத்துத் தந்த குழுவிற்கு கோயிலின் மேலாளர் மற்றும் உறுப்பினர்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இந்த நவராத்திரி என்றுமே ஒரு மறக்கமுடியாத ஒன்றாக எங்களுக்கு அமைந்தது, அதை உங்களுடன் பகிர்வது மகிழ்ச்சியாக மனநிறைவாக உள்ளது. அனைவருக்கும் நன்றி!
- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்
Advertisement