/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூர் வைணவ ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா
/
சிங்கப்பூர் வைணவ ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா
சிங்கப்பூர் வைணவ ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா
சிங்கப்பூர் வைணவ ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா
டிச 31, 2025

சிங்கப்பூர் வைணவ ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா
வைகுண்ட ஏகாதசி மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி திதியில் கொண்டாடப்படும் வைணவர்களின் முக்கியப் பண்டிகை. ஏகாதசி என்பது சமஸ்கிருதத்தில் “ பதினொன்று “ எனப் பொருள்படும். அமாவாசை அல்லது பௌர்ணமிக்கு அடுத்த 11 ஆவது நாள் திதியைக் குறிக்கும் ஒரு புனித விரத நாளாகும். இந்நாளில் மகா விஷ்ணுவை வழிபட்டு விரதம் மேற்கொள்ளுவது ஆன்மிக வளர்ச்சி - ஆரோக்கியம் - மற்றும் மோட்சம் தரும் என்பது நம்பிக்கை.
இத்தகு சிறப்புமிகு நன்னாளில் சிங்கப்பூர் பிரதான வைணவ ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசிப் பெரு விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். தென்கிழக்கு ஆசியாவின் ஸ்ரீவைகுண்டம் - சிங்கப்பூரின் திருப்பதி என அழைக்கப்படும் சிராங்கூன் சாலை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்தில் டிசம்பர் 30 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா வழக்கமான உற்சாகத்துடனும் புனிதத்தோடும் சிறப்பாக நடைபெற்றது. மார்கழி மாதத்திற்கே உரிய சுப்ரபாத சேவை வைகறையிலேயே முழங்கி இப்பகுதியையே புனிதமாக்கியது. தொடர்ந்து விஷ்ணு சகஸ்ரநாமம் - திருப்பள்ளி எழுச்சி ஒலிக்க பக்தர்கள் வழங்கிய பால்குட அபிஷேகம் கண்கொள்ளாக் காட்சியாக மிளிர்ந்தது. மண்டபம்நிறை பக்தர்கள் “ கோவிந்தா ... நாராயணா - வைகுந்தவாசா “ என விண்ணதிர முழங்க தலைமை அர்ச்சகர் டாக்டர் வாசுதேவ பட்டாச்சார்யார் சொர்க்கவாசல் வழிபாடு நடத்தி திறந்து வைத்தார். பக்திப் பிழம்பாக ஆயிரக்கணக்கானோர் சொர்க்க வாசல் வழியே வரிசைகட்டி வழிபட்ட காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்களும் காட்சிப்படுத்தியிருந்தது அருமையினும் அருமை. மாலை சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்று ஸ்ரீதேவி - பூதேவி சமேத ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலய நாதஸ்வர வித்துவான்களின் இசை முழங்க தங்க ரதத்தில் எழுந்தருளி ஆலயம் வலம் வந்து அருள்பாலித்தார். இரவு முழுவதும் பக்தி இசை - ப்ரவசனம் - கதா காலட்சேபம் நடந்த வண்ணமிருந்தன. ஆலய மேலாண்மைக் குழுவினர் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்..
- நமது சிங்கப்பூர் செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்
Advertisement

