/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
தோகாவில் சர்வதேச யோகா தினம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
/
தோகாவில் சர்வதேச யோகா தினம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
தோகாவில் சர்வதேச யோகா தினம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
தோகாவில் சர்வதேச யோகா தினம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
ஜூன் 22, 2024

ஐக்கிய நாடுகள் சபையின் 10வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கத்தாரில் உள்ள ஆசிய டவுன் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 21ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற யோகா தின விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். கத்தார் நாட்டிலுள்ள இந்திய தூதரகம், இந்திய கலாச்சார மையம் (ஐ.சி.சி.) மற்றும் இந்திய விளையாட்டு மையம் (ஐ.எஸ்.சி.) ஆகியவற்றுடன் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தது.
இந்திய தூதர் விபுல் மற்றும் ஐசிசி மற்றும் ஐஎஸ்சி அதிகாரிகள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினர். இந்திய தூதரக முதன்மை செயலாளர் சச்சின் தினகர் ஷங்க்பால், ஐசிசி தலைவர் ஏபி மணிகண்டன், பொது செயலாளர் மோகன் குமார், ஐஎஸ்சி தலைவர் இபி அப்துல்ரஹ்மான், மற்றும் பிற இந்திய சமூக அமைப்புக்களின் தலைவர்கள் இந்த யோகா தின விழாவில் கலந்து கொண்டனர். நிகழ்வின் முக்கிய அங்கமாக ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்களும் சுமார் 40 நிமிடங்களுக்கு பொது யோகா நெறிமுறைகளை ஒரே நேரத்தில் செய்தனர். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான யோகா போட்டிகள் மற்றும் யோகா வினாடி வினா ஆகியவையும் இவ்விழாவின் சிறப்பம்சமாக இருந்தது.
யோகா விழாவில் உரையாற்றிய இந்திய தூதர், 'சர்வதேச யோகா தினத்திற்கான இந்த ஆண்டு கருப்பொருள், 'சுயம் மற்றும் சமூகத்திற்கான யோகா', தனிநபர்களுக்கான யோகா உடலுக்கும் மனதுக்கும் முழுமையான நன்மைகள் தருகிறது, அதே நேரம் சமூகத்தில் மனிதநேயத்திற்கும் இயற்கைக்கும் இடையில் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு யோக சக்தி உதவுகிறது, இதையே இவ்வருட சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள் வலியுறுத்துகிறது' என்று குறிப்பிட்டார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் கத்தாரில் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டில், 8 வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தின் போது, தோகாவில் 114 நாட்டுப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஒரு யோகா அமர்வில் அதிக அளவில் பல தேசத்து பிரதிநிதிகள் பங்குபெற்றதற்கான கின்னஸ் உலக சாதனை உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பல வருடங்களாக நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியின் முந்தைய பதிப்புகள் போலவே இந்த வருட சர்வதேச யோகா தினவிழாவும் கத்தாரில் மிகவும் சிறப்பாகவும், வெற்றிகரமாக நடைபெற்றது.
- நமது செய்தியாளர் சிவ சங்கர். எஸ்
Advertisement