/
உலக தமிழர்
/
ஆஸ்திரேலியா
/
செய்திகள்
/
ஆக்லாந்தில் அருமையான இசை கச்சேரி
/
ஆக்லாந்தில் அருமையான இசை கச்சேரி

நியூஸிலாந்து கர்னாடிக் சொசைட்டி ஆக்லாந்தில் மைக்கேல் பார்க் பள்ளி அரங்கம் எல்லர்ஸ்லீயில் ஏற்பாடு செய்திருந்த கர்நாடக இசை கச்சேரியில், கர்நாடக இசை உலகில் மிகச்சிறந்த கலைஞரான சங்கீத கலாநிதி சுதா ரகுநாதனின் இசைக் கச்சேரி மிகச்சிறப்பாக நடைபெற்றது. உடன் எம்பார் கண்ணன் வயலினும், பரத்வாஜ் மிருதங்கமும் வாசித்து கச்சேரியை சிறப்பு செய்தனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சொசைட்டியின் நிர்வாகத் தலைவர் மாலா நடராஜ் இசை கலைஞர்களை வரவேற்று அறிமுக உரையாற்றினார்.
சுதா முதலில், நீவே கதியென்று நளினகாந்தி ராகத்தில் அமைந்த வர்ணத்தை ஆரம்பித்து கச்சேரியை தொடங்கினார். பின் கம்பீர நாட்டையில் ஸ்ரீ ஜானகி என்ற கிருதியை விஸ்தாரமாக ஸ்வர ப்ரஸ்தாரங்களுடன் பாடினார். தொடர்ந்து ஸ்ரீ தியாகராஜர் இயற்றிய வசந்தபைரவியில் அமைந்த நீ தய ராதா பாடல் மிக அருமையாக இருந்தது. அடுத்து அவர் முக்கிய ராகமாக கீரவாணியை விஸ்தாரமாக ஆலாபனை செய்து தியாகராஜரின் கலிகியுண்டே என்ற கீர்த்தனையை எடுத்து அதற்கேற்ற கல்பனா ஸ்வரங்களை நேர்த்தியாக போட்டு சபையோரின் ஏகோபித்த கரவொலிகளைப் பெற்றார். அவருடன் இசைந்து எம்பார் கண்ணனின் வயலின் தனி ஆவர்த்தனம் மிகச்சிறப்பாக இருந்தது.
அதையடுத்து புரந்தரதாசரின் ராம ராம சீதா எனிரோ என்ற வசந்தா ராகத்தில் அமைந்த கீர்த்தனையை பாடி அதை தொடர்ந்து ரசிகர்களின் விருப்பத்தை ஏற்று ராகம் தானம் பல்லவி பாடினார். அமிர்த வர்ஷிணி ராகத்தில் ஆலாபித்து 'ஸ்ரீகிருஷ்ண கானம் வேணு கானம் மதுரகானம் சபையோரை மகிழ்விக்கும் கானம்' என்ற சிறப்பான பல்லவியை பாடி தானத்தில் ஊத்துக்காடு வெங்கட சுப்பையரின் பாடல்களான தோடியில், தாயே யசோதா, காம்போதியில் குழலோதி மனமெல்லாம், கானடாவில் அலைபாயுதே கண்ணா, மோகனத்தில் ஸ்வாகதம் கிருஷ்ணா. நாட்டகுறிஞ்சியில் பால் வடியும் முகம் மற்றும் ஆடாது அசங்காது வா கண்ணா' என்று மத்யமாவதியில் முடித்தார். பரத்வாஜின் தனி ஆவர்த்தனத்திற்கு சபையோர் கரவொலி எழுப்பி ரசித்தனர்.
பின்னர் புரந்தர தாசரின் 'இன்னு தய பாரதே' என்ற கல்யாண வசந்தம் கீர்த்தனை, சாயி பஜன், பாரதியாரின் 'சின்னஞ்சிறு கிளியே' ராகமாலிகையாக பாடி மிகவும் மனதை வருடியது. நிறைவாக தில்லானாபாடி மங்களத்துடன் கச்சேரியை மிகச்சிறப்பாக பாடி ரசிகர்கள் அனைவரும் நெஞ்சு நிறைந்து நின்று நீண்டநேரம் தங்கள் கைதட்டல் மூலம் பாராட்டினர். சுதா ரகுநாதனும் ரசிகர்களின் அக்கரவொலிகளை மகிழ்ச்சியாக ஏற்று கொண்டதாக எழுந்து நின்று கரம்கூப்பி தெரிவித்தார்.
இறுதியாக மாலா நடராஜ் மிகச் சிறப்பான முறையில் இசை கலைஞர்களை பாராட்டி பேசினார். நிறைவாக சங்கீத சொஸைட்டியின் செயலாளர் ரவி நாகராஜன் இசைக் குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து பேசினார். மனதுக்கு மகிழ்ச்சியான ஒரு சங்கீகத்தை கேட்டு ரசித்த மன நிறைவோடு ரசிகர்கள் இருந்தனர் என்பதில் சங்கேதமில்லை.
- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்
Advertisement