sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 18, 2025 ,புரட்டாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

ஆசியா

/

கோயில்கள்

/

தாய்த் தெய்வ வழிபாடு!!! ( நெல்லையப்பர் கோயில் திருநெல்வேலி )

/

தாய்த் தெய்வ வழிபாடு!!! ( நெல்லையப்பர் கோயில் திருநெல்வேலி )

தாய்த் தெய்வ வழிபாடு!!! ( நெல்லையப்பர் கோயில் திருநெல்வேலி )

தாய்த் தெய்வ வழிபாடு!!! ( நெல்லையப்பர் கோயில் திருநெல்வேலி )


நவ 20, 2023

Google News

நவ 20, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காலத்தால் பழமை மாறாததும், நிறைந்த சக்தியைத் தரக்கூடியதும்.... தாய்த் தெய்வ வழிபாடு!!! தெய்வ வழிபாட்டிற்கான அடிப்படை!!!!

நாடோடியாக வாழ்ந்த மனித இனம் நாகரிகம் அடைந்த பின்னர் கூட்டமாக வாழத் தொடங்கியது. ஒவ்வொரு கூட்டமும் தங்கி வாழ்ந்த இடங்கள் தனித்தனி ஊர்களாக அமைந்தன. அம்மக்கள் தங்களுக்கென்று சில வரையறைகளை வகுத்துக் கொண்டனர். கோயில் இல்லா ஊரில் குடியிருக்கலாகாது என்பதற்கு ஏற்பத் தாங்கள் வழிபடும் தெய்வத்திற்காகக் கோவில் சுட்டி வழிபடத் தொடங்கினர்.


தெய்வ வழிபாட்டில் தாய்த் தெய்வ வழிபாடு தொன்மையானது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் பெண் தெய்வத்தை வணங்கி வந்தனர் என்பதை மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற இடங்களில் கிடைத்த அகழ்வாராய்ச்சி சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. இன்றைய நிலையிலும் பெண் தெய்வம் வழிபடத் தொடங்கி சிற்றூர் முதல் பேரூர் வரை சக்தி வழிபாடாகி இருக்கிறது. தமிழ் இலக்கண இலக்கியங்களில் வரலாற்றில் தாய்த் தெய்வ வழிபாடு பெற்றுள்ள இடம் ஆய்வுப் பொருளாக எடுத்தாளப்படுகிறது.


தெய்வ வழிபாட்டிற்கான அடிப்படை

தெய்வங்கள் வழிபடுவோரின் வாழ்க்கை முறையில் இருந்து எழுகின்றன. ஒரு சமுதாயம் அதன் உணவு, உடை, உறையுள் ஆகிய புறவாழ்க்கை தேவைகளை எந்த முறையில் பெறுகிறதோ அதற்காக எத்தகைய சமுதாய அமைப்பினை உருவாக்கிக் கொண்டுள்ளதோ அந்த அமைப்பின் அடிப்படையின் மீது தெய்வ நம்பிக்கை எழுகின்றது.


பழங்காலத்தில் மக்கள் தங்களுக்குரிய உணவுத் தேவைக்காக விலங்குகளை வேட்டையாடினர். கல்லெறிந்தும், கவண் மூலம் கல்லைக் குறிபார்த்து எறிந்தும், கல், ஈட்டி, கல் கோடரிகளைப் பயன்படுத்தியும், விலங்குகளைக் கொன்றனர். மக்களும், மந்திரம், மந்திரச் சடங்குகள், வன தேவதைகள், பேய்கள் ஆகியவற்றை அடக்கக் கூடிய வலிமையுடைய பல தெய்வங்களை நம்பினர். தமது வாழ்க்கைக்கு உதவும் மழை, வெயில், காற்று, நீர், தீ ஆகிய இயற்கையின் வடிவங்கள் அனைத்தையும் வழிபாட்டிற்கு உரியவை ஆக்கினர். மேலும் தீமையை விளைவிக்கும் இயற்கை சக்திகளையும் வழிபட்டனர். இதற்கு அச்சம் அடிப்படையானது. அச்சத்தின் காரணமாகப் பலி கொடுத்து அவற்றைத் திருப்திபடுத்தவும் முயன்றனர்.

வழிபாட்டுத் தேவை


புராதன விவசாயக் காலத்தில் மக்களின் புற உலக வாழ்க்கையில் பூமியே முக்கிய பங்கு வகிக்கிறது. தெய்வங்களும், மந்திரச் சடங்கு களும் பூமியின் செழிப்புத் திறனை மிகுதியாகக் கற்பனை செய்து உருவாக்கப்பட்டன. செழிப்புத் திறனை வளர்க்கும் விதமானது பெண்களுக்கே உண்டு என்ற நம்பிக்கை தோன்றியது. பெண்கள் தான் முதலில் வேட்டைத் தொழிலில் இருந்து விவசாயத் தொழிலில் கவனம் செலுத்த தொடங்கினர். பூமியின் விதையைச் செடியாக வளர்க்கும் திறனுக்கும், தாயின் குழந்தையைப் பெறும் சக்திக்கும் தொடர்பு உண்டு என்று புராதன விவசாயத்தில் நம்பிக்கை கொண்ட மக்கள் ஈடுபடத் தொடங்கினர். எனவே பூமியை உயிருள்ள, உயிரில்லாத அனைத்திற்கும் தாய் என்று கருதினர்.

தாய்த் தெய்வ வழிபாடு தோற்றம்


தத்துவச் சிந்தனை வளர்ச்சி பெற்ற காலத்தில் பூமி, பிற உலகங்கள் எல்லாம் ஒரே ஜகன்மாதாவிலிருந்து தோன்றியது என நினைத்தனர். இவ்வாறு தாய்த் தெய்வம் மக்கள் உள்ளத்தில் தோற்றம் எடுத்தது. 'செழிப்புத் தெய்வங்களும் தோன்றின' என்று நுடார்பரச் கூறுகிறார். தெய்வங்களில் பெண் தெய்வங்கள் உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து வழிபடப்பட்டன. பெண்ணுக்குச் சமுதாய வாழ்வில் எவ்வித இடம் இருக்கிறதோ அதன் அடிப்படை யிலேயே பெண் தெய்வங்களுக்கும், மதிப்பு அல்லது அவமதிப்பு ஏற்படக் கூடும். இனக்குழு வாழ்க்கையில் குலத்தின் பெண்ணே தாயாகவும், தலைவியாகவும் இருக்கிறாள். இந்நிலையில் சமுதாயத்தின் தாய்த் தெய்வம் எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாகத் தலைமையிடம் பெறுகிறது. ஆண் தெய்வங்களைவிடப் பெண் தெய்வங்கள் மக்கள் மனதில் அதிக இடம் வகிக்கின்றன.

வேட்டை காலத்தில் சொத்து பெண் வழியில் கிடைக்கப் பெற்றதால் பெண்களுக்குச் சமுதாயத்தில் உயர்ந்த மதிப்பு இருந்தது. வேட்டையாடுகின்ற காலத்திலேயே இனக்குழுவினில் வேலை பிரிவினை ஏற்பட்டது. ஆண்கள் விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினர். வேட்டை மூலமாக உணவைவிடப் பயன் தருகின்ற விளைச்சலைப் பெண்கள் விளைவித்தனர். எனவேதான் உலகம் முழுவதிலும் செழிப்பைக் குறிக்கும் தெய்வங்கள் பெண் தெய்வமாகக் கருதப்படுகின்றன.


விவசாயம் செய்யும்போது சூலாயுதத்தை வேட்டைக் கருவியாகவும், விவசாயக் கருவியாகவும் பயன்படுத்தினர். இக்கருவியே இன்றும் உழவர் மக்களிடையே தெய்வத்தைக் குறிக்கும் கருவியாய் வைத்து வணங்கப்படுகிறது. கிராமப்புறங்களிலே பல்வேறு சிறுதெய்வ வழிபாட்டு முறைகளிலும் சூலாயுதம் வைத்தே வணங்கப்படுகிறது. இதுவே முற்காலத்தில் பெண் தெய்வங்களின் போர் ஆயுதமாகவும் பயன்பட்டது. 'சூலி' என்ற சொல் சூலாயுதத்தை உடையவர் என்றும், சூல் கொண்டவர் என்றும் பொருள்படும். உலகையே சூல் கொண்டு பெற்ற தெய்வம் என்று தாய்த் தெய்வமானது கருதப்படுகிறது.

இலக்கண இலக்கியங்களில் தாய்த் தெய்வ வழிபாடு பழம்பெரும் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் தாய்த் தெய்வ வழிபாடு இருந்தது என்பதை, 'மறங்கடைக் கூட்டிய குடிநிலை சிறந்த கொற்றவை நிலையும் அகத்தினைப்புரனே' என்ற நூற்பா விளக்குகிறது. தொல்காப்பியர் காலத்தில் 'கொற்றவை' என்ற தாய் தெய்வம் வணங்கப்பட்டது. மக்கள் கொற்றவையைத் தம் வெற்றி தெய்வமாகக் கருதி வழிபட்டனர்.


சங்க இலக்கியங்கள் தாய்த் தெய்வத்தைக் காட்டில் உறைபவளாகச் சித்திரிக்கின்றன. 'மாயோன்மேய காடுறை உலகமும்' என்று தொல்காப்பியர் கூறினாலும் மாயோனுக்கு முன்னுரை காடுறை கடவுளாகத் தாய்த் தெய்வம் வழிபடப்பட்டிருக்கிறது. கொற்றவை பரம்பொருளாகிய சிவபெருமானின் ஒரு கூறாக விளங்கும் செய்தியும் சங்க இலக்கியங்களில் இடம் பெறுகிறது. உமையம்மை சிவபெருமானைப் போன்று நெற்றிக் கண் உடைய வளாகவும், சங்க இலக்கிய நூல்களில் காட்டப்படுகிறாள்.சூரர் மகளிர் என்ற அச்சமூட்டும் பெண் தெய்வங்கள், வானர மகளிர் என்ற வானத்தில் உலவும் பெண் தெய்வங்கள் ஆகியவற்றைத் தமிழர் வழிபட்டனர் என்பதற்குச் சங்க இலக்கியங்கள் சான்றாகின்றன.

தந்தைவழிச் சமுதாயம் வளர்ந்த காலத்தில் திருமூலர், அம்மையே சிவனுக்குத் தாயாக, தாரமாக, மகளாக இருப்பதாகக் கூறுகிறார்.


வரலாற்றில் தாய்த்தெய்வ வழிபாடு

வரலாறு அனைத்து நாடுகளிலும் தாய்த் தெய்வ வழிபாடு இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது. பாபிலோனியாவில் தியாமதி என்ற தாய்த் தெய்வமும், சுமேரியாவில் 'யூரினோம்' என்ற தாய்த் தெய்வமும், எகிப்தில் 'ஐஸில்' என்ற தாய்த் தெய்வமும், ரோம் நாட்டில் 'வீனஸ்' என்ற தாய்த் தெய்வமும், கிரேக்கத்தில் 'செபீல்' என்ற தாய்த் தெய்வமும் வழிபடப் பட்டதாகக் கூறப்படுகிறது.


தமிழகத்தில் கி.பி.11-ம் நூற்றாண்டில்தான் அம்மனுக்கென்று தனிக்கோயில் நிறுவப்பட்டதென்று அறிய முடிகிறது. சோழர் காலத்தில் தாய்த் தெய்வங்களுக்குப் பலிகொடுத்து வழிபட்ட பழக்கம் இருந்தமையைச் சோழன் பூர்வ பட்டயம் குறிப்பிடுகிறது.

நடைமுறையில் தாய்த்தெய்வ வழிபாடு


இந்து சமயத்தினர் வாழ்வில் கோயில் என்ற இறைவன் உறைகின்ற இடமாகக் கருதப்படுகிறது. சமய வாழ்க்கையில் கோயிலும், தெய்வமும் இல்லாத வாழ்வை இந்து சமய மக்கள் எண்ணிப் பார்க்க இயலாது. இறைவனை ஆண் வடிவிலும், பெண் வடிவிலும் வழிபட்டாலும் சிறுதெய்வ வழிபாட்டைப் பொருத்தவரை பெண் தெய்வங்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மிகுதியான சிறுதெய்வ கோயில்களில் பெண் தெய்வங்கள் காளி, மாரி, முத்துமாரி, இசக்கி, துர்க்கை போன்ற உருவங்களில் வழிபடப்படுகின்றன.

தாய்த் தெய்வம் - வழிபாட்டு முறைகள்


கொண்டாட்டமும், மகிழ்ச்சியும், பொழுதுபோக்கும் நல் உறவுமே விழாக்களின் நோக்கமாக ஜெயங்கொண்டார் கூறுகிறார். நம்பிக்கையின் அடிப்படையில் மக்கள் விரும்பி ஏற்று, கொண்டாடும் நிகழ்ச்சியாதலால் அது விழா என்று போற்றப்படுகிறது. மனிதன் தன் நன்றி உணர்வைத் தான் வழிபடும் தெய்வங்களுக்குக் காட்டு வதில் ஆர்வமுடையவனாய் இருக்கிறான். எனவே தன்னைக் காக்கின்ற தெய்வத்திற்குத் தன் நன்றியை ஆண்டிற்கொரு முறை விழா என்ற பெயரில் செய்து சிறப்பிக்கிறான்.

பெருந்தெய்வ வழிபாட்டு முறைகளில் இருந்து சிறுதெய்வ வழிபாட்டில் ஒன்றான தாய்த்தெய்வ வழிபாடு வேறுபட்டுக் காணப்படுகிறது. பலி கொடுத்தல், பூக்குழி மிதித்தல், உருவம் எடுத்தல், பொங்கலிடுதல், தீச்சட்டி எடுத்தல், பால்குடம் எடுத்தல், மண் உருவம் எடுத்தல், மாவிளக்கு எடுத்தல் போன்ற சடங்குகள் அதிகமாக நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. வேப்பமரம் தெய்வ வடிவாகக் கருதப்பட்டு வணங்கப்படுகிறது.


முடிவுரை

புனித வாழ்வு என்னும் சக்கரத்தின் கீழ் அதன் மைய அச்சாகத் திகழ்வது சமயம். கடவுளர்களும், கடவுளர்களோடு தொடர்புடைய பொருட்களும் புனிதத் தன்மை உடையவனாகக் கருதப்பட்டன. சமயத்தின் இரண்டாம் கட்டமாகச் சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. இச்சடங்குகள் தெய்வ வழிபாடுகளுக் கேற்ப மாறுபடுகின்றன. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் உள்ள அனைவரின் ஒன்றுபட்ட மனதின் வெளிப்பாடே அச்சமூகத் தினரின் சமயம் என்பர் தர்கைம். இதில் தாய்த் தெய்வங்கள் என்பது பெருந்தெய்வங்களிலும் இருந்தாலும், சிறுதெய்வ வழி பாட்டில் மிக அதிகமாகக் கிராமப்புற மக்களால் வணங்கப்படுவதன் காரணம் காலத்தால் பழமை மாறாததும், நிறைந்த சக்தியைத் தரக்கூடியதும் என மக்களால் நம்பப்பட்டதே


- நமது செய்தியாளர் ஞானகுணாளன்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us