/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
ஐராவதி கார்வேயை அறிய இந்த புத்தகம் படிக்கலாம்
/
ஐராவதி கார்வேயை அறிய இந்த புத்தகம் படிக்கலாம்
ADDED : டிச 14, 2025 05:07 AM

வா சகர்கள் வாசிக்க வேண்டிய புத்த கங்கள் குறித்து, வாசித்த வர்கள் வாசித்த புத்தகங்களில் இருந்து, தங்களின் வாசிப்பு அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றனர்.
இந்த வாரம் ஊர்மிளா தேஷ்பாண்டே மற்றும் தியாகோ பின்டோ பர்போசா இணைந்து எழுதிய, 'IRU' (இரு) என்ற ஐராவதி கார்வேயின் வாழ்க்கை வரலாறு ஆங்கில நுால் குறித்து, ஆங்கில பேராசிரியர் பூரணி தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
இந்தியாவின் முதல் பெண் மானுடவியல் ஆய்வாளர் என்ற பெருமைக்குரியவர் ஐராவதி கார்வே. அவரது வாழ்க்கை வரலாற்று நுால்தான் இது. 1927ம் ஆண்டு களில் ஆண்களே அதிகம் கவனம் செலுத்தாத மானுடவியல் ஆய்வு துறையில் ஐராவதி கார்வே விருப்பத்துடன் செயல்பட்டு வெற்றி பெற்று இருக்கிறார்.இந்நுால் ஆராய்ச்சி அடிப்படையில் எழுதப்பட்டாலும், ஒரு நாவலைப் போல எழுதப்பட்டுள்ளது.
ஐராவதி சிட்பவன் பிராமண வகுப்பை சேர்ந்தவர். இவரது அப்பா இவரை அதிகம் படிக்க வைக்க விரும்பவில்லை. குடும்பத்தினருடன் போராடிதான் கல்லுாரி படிப்பை முடிக்கிறார். பின் நாட்களில் இவரது கணவர்தான் மானுடவியல் துறையில், பி.ஹெச்டி படிக்க ஊக்கப்படுத்தி இருக்கிறார்.
பிரீட்ரிக் வில்ஹெல்ம் பல்கலையில் முனைவர் பட்டப் படிப்புக்காக பெர்லினுக்கு வந்தார். முதல் உலகப்போர் முடிந்திருந்த காலம் அது. அப்போது அவர் ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர் கொள்ள நேர்ந்தது.
இவரது ஆய்வின் நெறியாளராக இருந்தவர் டாக்டர் யூஜென் பிஷ்ஷர். இவர் ஐரோப்பிய இனத்தவர் மற்றும் மற்ற நிறமுள்ள மக்களை விட உயர்ந்தவர்கள் என்ற கோட்பாட்டில் நம்பிக்கை உடையவர்.
இதையே ஐராவதி கார்வேக்கு ஆய்வு தலைப்பாக கொடுத்தார்.இது மண்டை ஓடுகளின் அளவீட்டின் அடிப்படையில் நிரூபிப்பதாகும். ஜெர்மனியைச் சேர்ந்த, 149 வெள்ளை மண்டை ஓடுகளையும், கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஜெர்மன் காலனிகளில் இருந்து வெள்ளையர் அல்லாத மண்டை ஓடுகளையும் ஆராய்ந்த பிறகு, ஐராவதி யூஜென் பிஷ்ஷரின் கோட்பாட்டுக்கு எதிரான கருத்தை ஆய்வின் முடிவாக வைத்தார். இந்த ஆய்வில், யூஜென் பிஷ்ஷருக்கு உடன்பாடு இல்லை என்றாலும், முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.
ஐராவதி இந்தியா திரும்பிய பிறகு தன்னம்பிக்கையுடன் மேலும் ஆய்வை தொடர்ந்தார். களப் பயணங்கள் வழியாக கூர்க், மேற்கு மகாராஷ்டிரா, அசாம், கேரளா மற்றும் பீகாரில் உள்ள ஆதிவாசி பகுதிகளுக்கு சென்று, ஆய்வு செய்து ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதினார். இப்படி ஐராவதி கார்வே பற்றி பல விஷயங்கள் இந்த நுாலில் விரிவாக சொல்லப்பட்டுள்ளன.
இந்தியாவின் உறவு முறைகள் எப்படி உள்ளது என்பது பற்றியதுதான் இவரது முதல் புத்தகம். இந்தியாவின் ஜாதி, சமூகம் மற்றும் பழக்க வழக்கம் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ளார். 'சிட்பவன் பிராமணர்' என்ற தலைப்பில், ஆய்வு நுாலையும் எழுதி இருக்கிறார்.
இவரது 'யுகாந்தா' என்ற நுால் முக்கியமானது. இது மகாபாரதத்தை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. இந்தியாவில் பெரிதும் நம்பப்படும், பழமை வாதத்தில் இவருக்கு நம்பிக்கை இல்லை.
அறிவியல் ஆதாரங்களை அடிப்படையாக கொண்டுதான், கருத்துக்களை முன் வைக்கிறார். இந்தியாவில் பெண்கள் சந்தித்த, எல்லா பிரச்னைகளையும் இவரும் சந்தித்து இருக்கிறார். இந்த நுாலை எழுதியுள்ள ஊர்மிளா தேஷ்பாண்டே, ஐராவதியின் சொந்த பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

