/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
பசுமை வழிக்கு மாறுமா, ஏ.ஐ. தொழில்நுட்பம்!
/
பசுமை வழிக்கு மாறுமா, ஏ.ஐ. தொழில்நுட்பம்!
ADDED : மார் 15, 2026 06:00 AM

'உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியின் தாக்கம் மின்சாரம், நீர் மற்றும் கார்பன் வெளியேற்றம் தொடர்பான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், ஏ.ஐ வளர்ச்சியை பசுமை ஆற்றலுடன் இணைக்க வேண்டும்' என்கிறார், சென்னை சவீதா பல்கலை கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் விஞ்ஞானி டாக்டர் அசோக்குமார் வீரமுத்து.
திருப்பூரில் உள்ள ஒரு கல்லுாரியில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்ற அவர் 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி:
உலகில், செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ந்து வரும் முக்கிய தொழில்நுட்பமாக இருந்தாலும், அதன் பின்னணியில் பெரும் சுற்றுச்சூழல் சவால் உருவாகி வருகிறது.
ஏ.ஐ. செயல்படுவதற்கான பெரிய அளவிலான தரவு மையங்கள், அதிகளவில் மின்சாரத்தை பயன்படுத்துகின்றன.
சர்வதேச ஆற்றல் அமைப்பின் சமீபத்திய ஆய்வின்படி உலகளவில், ஏ.ஐ. தரவு மையங்களில் மின்சார பயன்பாடு, கடந்த, 2024ல் சுமார், 415 மில்லியன் மெகாவாட் அளவில் இருந்துள்ளது. 2030க்குள் அது, 945 மில்லியன் மெகா வாட் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த மின் பயன்பாடு அளவு என்பது, இன்று ஜப்பான் நாடு முழுதும் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு சமமான அளவு. பெரிய ஏ.ஐ. தரவு மையங்கள், ஒரு லட்சம் வீடுகளில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு சமமான மின்சாரத்தை பயன்படுத்தும் அளவுக்கு வளர்ந்து வருகின்றன.
அதிக மின் தேவையால், மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும்; இதனால், நிலக்கரி மற்றும் எரிவாயு போன்ற எரிபொருட்களின் பயன்பாடும் அதிகரிக்கும்.
நீர் பயன்பாடுஅதிகரிக்கும் ஏ.ஐ. தரவு மையங்களின் மற்றொரு முக்கியமான சுற்றுச் சூழல் பிரச்னை, தண்ணீர் பயன்பாடு. கம்ப்யூட்டர் சேவைகள் மற்றும் செயலிகள் செயல்படும் போது, மிக அதிகளவு வெப்பம் உருவாகிறது.
வெப்பத்தை கட்டுப்படுத்த, பெரும்பாலான தரவு மையங்கள், பெரியளவிலான குளிரூட்டும் அமைப்புகளை பயன்படுத்துகின்றன. இதற்காக தினமும் பல ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
ஏற்கனவே பல நாடுகளில் நீர் பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில், இந்த அதிக தண்ணீர் பயன்பாடு நிலத்தடி நீர் வளங்களை பாதிக்கும்.
காலநிலை மாற்றம் மூன்றாவது முக்கியமான சுற்றுச்சூழல் சவால், கார்பன்-டை-ஆக்ைஸடு வெளியேற்றம். அதாவது, ஏ.ஐ. தரவு மையங்களுக்கு தேவையான மின்சாரம், பெரும்பாலும் எரிபொருள் அடிப்படையிலான மின் நிலையங்களில் இருந்து கிடைக்கும் போது அதிகளவு கார்பன் வெளியேற்றம் ஏற்படுகிறது.
ஆய்வுகளின்படி, தரவு மையங்களின் மின்சார பயன்பாட் டால் உருவாகும் கார்பன்டை ஆக்ஸைடு வெளியேற்றம் தற்போது, 80 மில்லியன் டன் அளவில் இருக்கிறது; 2035க்குள் அது, 300 மில்லியன் டன் வரை உயரக்கூடும் என ஆய்வுகள் கணிக்கின்றன. இதுபோன்ற காரணங்களால், காலநிலை மாற்றம் மேலும் தீவிரமடையும்.
பசுமை காக்கவழி இருக்கு செயற்கை நுண் ணறிவு மனிதர்களுக்கு எதிரானது அல்ல. ஆனால் அதனை பொறுப்புடன், நெறிமுறைகளுக்கு உட்பட்டு பயன்படுத்தினால் மட்டுமே மனித சமுதாயத்திற்கு உண்மையான நன்மையை வழங்கும்.
தொழில் நுட்ப வளர்ச்சியும் மனித நலனும் சமநிலையாக இருக்கும். ஏஐ. தரவு மையங்களில் சோலார் மற்றும் காற்றாலையில் மின்னாற்றல் உற்பத்தி செய்ய வேண்டும்.
நீர் பயன்பாட்டை குறைக்க, நவீன குளிரூட்டும் தொழில்நுட்பங்கள் மற்றும் நீர் மறுசுழற்சி முறைகளை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

