/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
'நாணய' ஓவியங்களின் கதையும் நிஜமும்...
/
'நாணய' ஓவியங்களின் கதையும் நிஜமும்...
ADDED : செப் 14, 2025 05:39 AM

ஒ ரு ஊரில் ஒரு காலத்தில் ஒரு ராஜா இருந்தார் என்று குழந்தைக்கு சோறுாட்டும் தாய், பாட்டியின் கதைகளிலே பயணித்தவர்க ளுக்கு தெரியும் மன்னர்களின் அருமையும் பெருமையும். அந்த மன்னர்களின் வரலாற்றை அவரது காலம் தாண்டியும் பறைசாற்றிக் கொண்டிருப்பது கல்வெட்டுகளும் நாணயங்களும் தான்.
சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் காலத்தில் வெளியிட்ட செப்பு, வெண்கலம், வெள்ளி, தங்க நாணயங்கள் தற்போது வரை வரலாறு பேசுகின்றன. இவர்களது காலத்திய நாணயங்களை ஓவியங்களாக வரைந்து வருகிறார் மதுரை மாங்குளத்தைச் சேர்ந்த இளைஞர் சங்கர். ஓவியத்துடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட கதையை விவரித்தார் சங்கர்.
''8ம் வகுப்பு படிக்கும் போதே ஓவியத்தின் மீது காதல். பார்க்கும் அனைத்தையும் பென்சிலில் வரைந்து பெருமைப்பட்டுக் கொண்ட காலம் அது. பிளஸ் 2வுக்கு பின் என் பாதை மாறாமல் ஓவியத்தின் பக்கம் திருப்பி கரைசேர்த்தவர் ஓவியர் குணசேகரன். அவரது முயற்சியால் வாய்ப்பு பெற்றேன். தற்போது மதுரை அன்றில் ஆர்ட் கேலரி ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். வேலை, ஓவியம் வரைவது இரண்டுமே ஒரே இடத்தில் எனக்கு சாத்தியமானது.
சென்னை அரசு கவின்கலை கல்லுாரியில் நுண்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன்.
களிமண் உருவம், டெக்ஸ்டைல் டிசைன், ஓவியம் உட்பட பல்வேறு படிப்புகளில் நிபுணத்துவம் பெற்றாலும் ஓவியங்கள் தான் என் திறமையை மீட்டது. நாணயங்களை பற்றி வரைய சொல்லி ஆதரவு தந்தது இன்டாக்ட் அமைப்பு நிர்வாகி ராஜேஷ்கண்ணன். எனது குரு குணசேகரனுடன் இணைந்து 150க்கும் மேற்பட்ட நாணய ஓவியங்களை வரைந்துள்ளேன்.
பாரம்பரிய, பின்னணி கதைகளை ஓவியங்களாக வரைந்துள்ளேன். சங்ககால நாணயங்களை பற்றிய தகவல்கள் எழுத்தாளர் ஆறுமுக சீத்தாராமன் மூலம் கிடைத்தது. ஓவியங்களில் வாட்டர், போஸ்டர் கலர், பென்சில் ஷேடிங், ஸ்கெட்ச் பயன்படுத்தியுள்ளேன். சேர, சோழ மன்னர்களின் சில நாணயங்களில் மீன், புலிசின்னம் சேர்ந்தே பொறிக்கப்பட்டுள்ளது. இது மன்னர்களுக்கு இடையே நல்லுறவை வெளிப்படுத்தும் சின்னமாக உள்ளது.
நாணயத்தின் முன், பின் பக்கங்களை ஒரே ஓவியத்தில் வரைவது எங்களது சிறப்பு. சில நேரங்களில் எனது கற்பனைக்கு ஏற்ப கதையாடல் வழியாக ஓவியம் வரைந்து நாணயத்தைப் பற்றிய தகவல்களை சொல்லியிருக்கிறேன். சேர அரசர் தலைநகர் அமைக்க காட்டுவழி யானையில் பயணம் செல்கிறார். ஒரு சேவல் யானையை எதிர்த்து நின்றது. இந்த சேவலே இவ்வளவு வீரமாக இருக்கிறது, இங்குள்ள மக்கள் வீரமாக இருப்பார்கள் என அரசர் நினைத்து, சேவல் எதிர்த்த இடத்தையே தலைநகராக ஆக்கியதாக ஒரு நாணயத்தை அடிப்படையாக கொண்டு ஓவியம் வரைந்துள்ளேன். கதைகளின் வழியே நாணயத்தை ஓவியமாக்குவது கற்பனைக்குத் தீனி போடுவதைப் போல இனிப்பானது.
நாம் பார்க்கும் பொருட்களை 'மினியேச்சர்' வடிவில் சிறுஉருவமாக செதுக்குவதிலும் எனக்கு விருப்பம். நான் பார்க்கும் கேட்கும் ரசிக்கும் அனைத்துமே ஓவியம் தான் என்கிறார் சங்கர்.
இவரிடம் பேச: 63696 12418.