ADDED : மார் 10, 2024 11:48 AM

கோவை சொந்த ஊர். தொழில்ரீதியாக மதுரைக்கு அடிக்கடி பயணம் வருவது உண்டு. ஹெர்பல் எண்ணெய் வகைகள் விற்பனையை துவக்கி முன்னணி தொழில்முனைவோராக இருந்தாலும் அதையும் தாண்டி கவிதை, கதை எழுதுவதில் எனக்கு தனிப்பட்ட ஆர்வம் ஏற்பட்டது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், கதைகள் எழுதி ஆவணப்படுத்தியுள்ளேன். இவற்றை தொகுத்து விரைவில் புத்தகமாக வெளியிட திட்டமிட்டுள்ளேன்.
ரத்தம், உடல் உறுப்புகள் தானம் குறித்து 10 ஆண்டுகளாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். என் சேவை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்பதற்காக கண்களை தானம் செய்துள்ளேன். படித்தது பள்ளி அளவில் என்றாலும் இன்று உயர்கல்வி நிறுவனங்களுக்கும், ஐ.டி., தொழிலில் உள்ளவர்களுக்கும் தன்னம்பிக்கை தொடர்பான பயிற்சி வகுப்புகள் எடுக்கும் அளவிற்கு என்னை வளர்த்துக்கொண்டேன்.
சமூகத்தில் பெண்கள் மேம்பாடு அடைய வேண்டும் என்றால் அவர்கள் முதலில் சுயதொழில் மூலம் 'சொந்தக்காலில்' நிற்க வேண்டும். அதற்காக கிராமங்களில் சிறு தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு ஆன்லைன் தொழில்நுட்பங்கள் மூலம் கிடைக்கும் தொழில் வாய்ப்புகள் குறித்தும் இலவசமாக விழிப்புணர்வு பயிற்சி அளித்து வருகிறேன்.
இதுபோன்ற பெண்களை ஒருங்கிணைக்கும் வகையில் 'பஜார்வே' குழு ஏற்படுத்தியுள்ளேன். தொழில்நுட்பங்களை எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் செயல்படுத்தி வருகிறேன். பெண் தொழில்முனைவோர்களுக்கு நான் சொல்வதெல்லாம் 'டிரெண்டிங் பிசினஸ் வேண்டாம்; ஆயுள் முழுவதும் செய்யும் தொழில்களை தேர்வு செய்யுங்கள்' என்பது தான். இதன் மூலம் ஏராளமான பெண் தொழில்முனைவோர்களை உருவாக்கியுள்ளேன்.
'என் கேள்விக்கு என்ன பதில்' என்ற தலைப்பில் ஆன்லைன் வழியே பெண்களுக்கான இலவச மனநல கவுன்சிலிங்கும் அளித்து வருகிறேன். என் கவுன்சிலிங் மூலம் 100க்கும் மேற்பட்ட கணவன் - மனைவியை சேர்த்து வைத்துள்ளதை சாதனையாக நினைக்கிறேன். பிரிந்திருந்த கணவன், மனைவியை என் கவிதையால் சேர்த்து வைத்த பாக்கியமும் எனக்கு கிடைத்தது, பெருமை. சொந்த தொழிலுடன் இதுபோன்ற சேவை பயணம் இன்னும் தொடரும் என்கிறார் இந்த நம்பிக்கை நாயகி.

