தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/ ஒப்பற்ற ஒப்பனைக்கு ஹேர் ஸ்டைலிஸ்ட் ஹேமலதா

 ஒப்பற்ற ஒப்பனைக்கு ஹேர் ஸ்டைலிஸ்ட் ஹேமலதா

 ஒப்பற்ற ஒப்பனைக்கு ஹேர் ஸ்டைலிஸ்ட் ஹேமலதா


ADDED : பிப் 15, 2026 10:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2026 10:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வளர்ச்சியின் ஒவ்வொரு படிநிலையிலும் முக அழகின் மாற்றத்தை கவனிக்கும்போது, முடி வளர்ச்சிக்கும் பராமரிப்புக்கும் கூடுதல் முக்கியத்துவம் தருகிறோம். 'டிரெண்டியான' ஹேர் ஸ்டைல்களை பிரபலங்கள், நடிகர், நடிகைகளை பார்த்து அதுபோல் நம்மை அழகுபடுத்தி பார்ப்பது ஒரு வகை ஈடுபாடு. நடிகர், நடிகைகளின் முக அழகுக்கு பின்னால் இருப்பது திறமையான ஹேர் ஸ்டைலிஸ்ட்களின் கைவண்ணம் தான்.

மேக்கப் ஆர்ட்டிஸ்டாக பணிபுரிபவர்களின் சிரத்தை, வேலை நுணுக்கமானது. அந்தவகையில் வேட்டையன், டியூட் உட்பட பல படங்களில் பணியாற்றிய ஹேர் ஸ்டைலிஸ்ட் ஹேமலதாவிடம் சண்டே ஸ்பெஷலுக்காக பேசினோம்.

அவர் பேசியதிலிருந்து...



திண்டுக்கல் மாவட்டம் பழநி சொந்த ஊர். அப்பா பிசினஸ் செய்கிறார். அம்மா பள்ளி ஆசிரியை. கோவையில் கல்லுாரி 3ம் ஆண்டு படிக்கும்போது மேக்கப், ஹேர் ஸ்டைலிங்கில் ஆர்வம் இருந்தது. சென்னையில் கார்ப்பரேட் கம்பெனியில் கிடைத்த வேலையில் திருப்தி இல்லை. மாத சம்பளத்திற்கு வேலை செய்வது பொருத்தமாகாது என்பதை உணர்ந்து எனக்கு விருப்பமான மேக்கப் ஹேர் ஸ்டைலிஸ்ட் பயிற்சி பெற்று சம்பாதித்தேன்.

அப்போது தொழில்ரீதியாக அறிமுகமான நண்பர்கள் சினிமாவில் வேலை பார்த்ததால் அவர்கள் மூலமாக நடிகைகளுக்கு மேக்கப் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் முதல் வேலைக்கு கிடைத்த பாராட்டு அடுத்தப்படத்திலும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக 'கமிட்' ஆவதற்கு வாய்ப்பை தந்தது. சின்ன வயதிலிருந்து சினிமாவை பிரமிப்பாகவே பார்த்து பழகியிருக்கிறேன். அப்படிப்பட்ட நிலையில் செலிப்ரிட்டிகளுக்கு மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக பணி செய்வது மிகவும் பிடித்திருந்தது.

ஹேர் ஸ்டைலிஸ்ட்டாகவும் மேக்கப் கலைஞராகவும் சினிமாவில் நீடிப்பதற்கு அப்டேட் உடன் இருப்பது அவசியம். புது ஸ்டைல்கள் பற்றிய நுணுக்கங்கள் தெரியவேண்டும். கதாபாத்திரத்தின் உணர்வுகளை பிரதிபலிப்பதற்கு நடிப்போடு சேர்த்து மேக்கப்பும் முக்கிய பங்காற்றுகிறது. இதில் சின்ன தவறு ஏற்பட்டாலும் அது திரையில் மிகப்பெரிய வித்தியாசத்தை காட்டிக் கொடுக்கும். பணியில் 100 சதவீத திருப்தியும், அர்ப்பணிப்பும் இருந்தால் மட்டுமே 'செயற்கை' என சொல்லமுடியாத ஒப்பனையை திரையில் பார்க்கமுடியும்.

நடிகர்கள் சூர்யா, கவுதம் கார்த்திக், நடிகைகள் மமிதா பைஜூ, ரித்திகா சிங் போன்றோருடன் பணியாற்றிய அனுபவங்கள் அலாதியானது. ஒவ்வொரு சீனுக்கும் நடிகர், நடிகைகளின் ஒப்பனையை திரையில் பார்த்து 'டச் அப்' செய்வது அவசியம். ஏனெனில் உணர்வுபூர்வமான காட்சிகளில் தேவையற்று சின்ன முடி நீண்டு இருந்தாலும் அது திரை நேர்த்தியை கெடுத்துவிடும். இயக்குனர் எதிர்பார்க்கும் ஸ்டைல்களை சாத்தியப்படுத்த மேக்கப் கலைஞர்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதால் வேலையில் எனது தேவை, சுதந்திரம் குறித்து ஆரம்பத்திலேயே பேசி விடுவேன்.

பாராட்டுகள் தனி 'கிக்' மேக்கப், வெரைட்டி ஹேர் ஸ்டைல்களுக்கு அடிப்படை விஷயங்களிலும் கவனம் செலுத்துவேன். உதவியாளர்கள், நம்மை சுற்றி இருப்பவர்கள், பக்கத்து வீட்டார் என ஒவ்வொருத்தரின் இயல்பில் தெரியும் ஒப்பனைகள் கூட திரைக் கலைஞர்களுக்கு கை கொடுக்கும். எந்த விஷயத்தையும் சாதாரணமாக கடந்துவிட முடியாது. செலிப்ரிட்டிகளுக்கு செய்யும் சின்ன சின்ன டச் அப்களுக்கு கிடைக்கும் ஸ்பாட் ரெஸ்பான்ஸ், பாராட்டுகள் தனி 'கிக்'.

ஒரு மேக்கப் கலைஞராக என்னை அடுத்தக்கட்டத்துக்கு மேம்படுத்த 'பிராஸ்தெட்டிக்' (செயற்கை) மேக்கப் கலையை கற்க முயற்சிக்கிறேன். தமிழ் சினிமாவில் பிராஸ்தெட்டிக் மேக்கப் கலைஞர்கள் மிகக் குறைவு. விபத்து ஏற்பட்டது போன்ற முகபாவம், வயதான தோற்றம் போன்றவற்றிற்கான மேக்கப் தேவைக்காக வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து கலைஞர்கள் வரவழைக்கப்படுகின்றனர். எனவே அந்த கலையை முழுவதுமாக கற்கவேண்டும். தமிழகத்திலேயே கலைஞர்கள் உருவாக வேண்டும்.

நடிகர், நடிகைகளை அழகுபடுத்தும்போது, வீட்டில் அம்மாவிற்கும் இதுபோன்று மேக்கப் செய்து பார்க்கவேண்டும் எனத்தோன்றும். ஆனால் பணிச்சுழல் காரணமாக இன்னுமே அது நிறைவேறாத ஆசையாக உள்ளது.

நான் பங்காற்றிய படங்களில் எனது உழைப்புக்கு, வாழ்த்தும், பாராட்டும் தரும் முதல் ரசிகர்கள் எனது நண்பர்கள். அவர்கள் தரும் ஊக்கம் என்னை இன்னும் 'பளிச்'சிட செய்கிறது என்றார்.

நடிகர், நடிகைகளை அழகுபடுத்தும்போது, வீட்டில் அம்மாவிற்கும் இதுபோன்று மேக்கப் செய்து பார்க்க வேண்டும் எனத்தோன்றும். ஆனால் பணிச்சுழல் காரணமாக இன்னுமே அது நிறைவேறாத ஆசையாக உள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us