மதம் மாறியவர்கள் குறித்த தீர்ப்பு: தீர்க்கப்படாத சிக்கல்கள் ஏராளம்!
மதம் மாறியவர்கள் குறித்த தீர்ப்பு: தீர்க்கப்படாத சிக்கல்கள் ஏராளம்!
PUBLISHED ON : மார் 30, 2026 04:30 AM

'ஹிந்து, சீக்கியம் மற்றும் பவுத்த மதத்தை தவிர, பிற மதத்துக்கு மாறியவர்கள் பட்டியலின அந்தஸ்தை உடனடியாக இழப்பர்' என, உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆந்திராவை சேர்ந்த சின்தடா ஆனந்த் என்பவர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறி, போதகராக பணியாற்றி வருகிறார். அவர், தன்னை ஜாதி ரீதியில் துன்புறுத்துவதாக கூறி, ராமிரெட்டி என்பவர் மீது, எஸ்.சி., -- எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஆந்திர உயர் நீதிமன்றம், 'ஹிந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதால், சின்தடா ஆனந்த், பட்டியல் இன அந்தஸ்தை இழந்து விட்டார். எனவே, எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், அவர் பாதுகாப்பு கோர முடியாது' என, தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, 'ஹிந்து, சீக்கியம் மற்றும் பவுத்த மதத்தினர் தவிர, பிற மதத்தினர் பட்டியலின அந்தஸ்து கோர முடியாது. வேறு மதத்திற்கு மாறும் போது, அதுவரை அனுபவித்து வந்த பட்டியலின அந்தஸ்தை அவர்கள் உடனடியாக இழப்பர்.
1950ல் இயற்றப்பட்ட பட்டியலின வகுப்பு தொடர்பான அரசியல் சாசன உத்தரவில், இதுபற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது. அந்த உத்தரவின்படி, மாற்று மதம் மாறியவர்கள், பட்டியல் இனத்தவர்களாக கருதப்பட மாட்டார்கள். பிறப்பால் பெற்ற பட்டியலின அந்தஸ்தை உடனடியாக இழப்பர்' என, தீர்ப்பு வழங்கியுள்ளது.
நம் நாட்டில் ஜாதி என்பது, நீண்ட காலமாக சமூகங்களுடன் பின்னிப் பிணைந்ததாக இருக்கிறது. அதனால், மத மாற்றத்தால் ஜாதிய பாகுபாடுகள் மறைந்து விடுவதில்லை.
கிறிஸ்துவம் மற்றும் முஸ்லிம் மதங்களுக்கு மாறும் பட்டியல் ஜாதியினர், அங்கும் பாகுபாட்டை எதிர்கொண்டு வருகின்றனர் என்பதே உண்மை நிலவரம்.
மேலும், சீக்கிய மதமானது கொள்கை ரீதியாக ஜாதிய அமைப்பை நிராகரிக்கிறது. ஆனால், பொருளாதார ரீதியாகவும், மற்ற சில விவகாரங்களிலும், அந்த மதத்திலும் பிரிவினைகள் தொடர்கின்றன. 'சமத்துவமற்ற ஒரு சமூகத்தில், மற்றொரு மதத்திற்கு மாறுவது, மதம் மாறியவர்களுக்கு சமத்துவத்தை உறுதி செய்வதில்லை. எனவே, மதம் மாறியவர்கள் எஸ்.சி. - எஸ்.டி., அந்தஸ்தை கோர முடியாது' என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு நியாயமற்றது என்பது ஒரு சாராரின் வாதமாகும்.
ஆனாலும், பணத்தாசை காட்டியும், வேறு சில சலுகைகள் தருவதாக கூறியும், மதமாற்ற நடவடிக்கைளை மேற்கொள்வது, நாடு முழுதும் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது. கவர்ச்சி வாக்குறுதிகளை நம்பி மதம் மாறியவர்கள், அங்கும் ஜாதிய பாகுபாடுகள் தொடர்கின்றன என்பதை அறிந்து வருத்தம் அடைகின்றனர். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வே, சின்தடா ஆனந்த் விவகாரத்திலும் நிகழ்ந்துள்ளது.
அத்துடன், பட்டியல் இனத்தவருக்கான இடஒதுக்கீடு என்பது, அந்த சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ளவர்கள் மேம்பட்ட நிலைக்கு வர வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோடு, அரசியல் சட்டத்தை இயற்றியவர்களால் கொண்டு வரப்பட்டதாகும். எனவே, தற்போதைய தீர்ப்பு சமூக நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்துள்ளதாக மற்றொரு தரப்பில் கூறப்படுகிறது.
அத்துடன், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், இதுபோல ஹிந்து அல்லாத பிற மதங்களுக்கு மாறினால், அவர்கள் தங்கள் உரிமைகளை இழப்பார்களா என்ற கேள்வியும் எழுகிறது. 2007-ம் ஆண்டில், நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கை, கிறிஸ்துவம் மற்றும் முஸ்லிம் மதங்களுக்கு மாறிய தலித்துகளுக்கு, பட்டியல் ஜாதியினருக்கான இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
அந்த அறிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது குறிப்பிடத்தக்கது. இதன்பின், இந்த விவகாரம் தொடர்பாக நியமிக்கப்பட்ட, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையிலான கமிஷன், இன்னும் தன் அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.
எனவே, இந்த விஷயம் தொடர்பான பல சட்டச்சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படாமல் தொடர்கின்றன. அவற்றை எல்லாம் தீர்க்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பாகும். இருப்பினும், தற்போதைய இந்த தீர்ப்பு, கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் என்று நம்பலாம்

