இடஒதுக்கீடு மசோதா தோல்வி; மத்திய அரசுக்கு நல்ல பாடம்
இடஒதுக்கீடு மசோதா தோல்வி; மத்திய அரசுக்கு நல்ல பாடம்
PUBLISHED ON : ஏப் 20, 2026 05:21 AM

லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில், பெண்களுக்கு, 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க, 2023 செப்டம்பரில், 'நாரி சக்தி வந்தன்' என்ற சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்த சட்டத்தை, 2029ல் அமல்படுத்துவதில் சிக்கல் எழுந்ததால், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த, மத்திய அரசு முடிவெடுத்தது. அதற்காக, 131வது அரசியல் சட்ட திருத்த மசோதாவை லோக்சபாவின் சமீபத்திய சிறப்பு கூட்டத்தொடரில் அறிமுகம் செய்தது.
இது சட்டத்திருத்த மசோதா என்பதால், லோக்சபா மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில், மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு வேண்டும். இதன்படி, 353 எம்.பி.,க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 298 பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்ததால், மசோதா தோல்வி அடைந்தது.
மசோதா தோல்வி அடையும் என்பது, மத்திய அரசுக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும், அதை தாக்கல் செய்தது பலவித சந்தேகங்களை எழுப்புகிறது.
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுடன், தொகுதி மறுவரையறை மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பை இணைத்ததால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தோற்கடித்து விட்டதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், 'மசோதாவை எதிர்க்கட்சிகள் தோல்வி அடையச் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்' என்று மத்திய அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
மசோதா மீது பார்லி.,யில் விவாதம் நடந்த போது, 'தொகுதி மறுவரையறையின் போது, லோக்சபா இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதாவது, மக்கள் தொகை அதிகம் நிறைந்த வடமாநிலங்கள் மற்றும் மக்கள் தொகை குறைவான தென்மாநிலங்களில் சமச்சீரற்ற முறையில் அதிகரிக்கும்.
'அதன் வாயிலாக, தென்மாநிலங்களின் முக்கியத்துவம் குறையும்; வடமாநிலங்கள் கூடுதல் ஆதாயம் பெற வாய்ப்பு உள்ளது' என, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. அதற்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த பதில்கள் திருப்தியாக இல்லை என்றே தோன்றுகிறது.
தொகுதி மறுவரையறையில், அமித் ஷா முன்மொழிந்த 50 சதவீத இடங்கள் அதிகரிப்பு என்பது சரியானதாக தெரிந்தாலும், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அத்துடன், மாநிலங்களுக்கு இடையே தொகுதிகள் எண்ணிக்கையில் பெரிய இடைவெளி ஏற்படும் போது, பல பிரச்னைகள் உருவாகும் என்றும் எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன.
அது மட்டுமின்றி, மத்திய அரசால் திட்டமிடப்பட்டுள்ள தொகுதி மறுவரையறையால் ஏற்படும் தாக்கங்கள் குறித்தும், மசோதா எந்த தெளிவையும் வழங்கவில்லை. அதுவும் தோல்விக்கு காரணமாகி உள்ளது.
கடந்த, 1951ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், முதன் முதலில் தொகுதிகள் பிரிக்கப்பட்டன. அப்போது, லோக்சபா எம்.பி.,க்கள் எண்ணிக்கை 494 ஆக இருந்தது. அதன்பின், 1962ல் இரண்டாவது முறையாகவும், 1973ல் மூன்றாவது முறையாகவும் தொகுதிகள் மாற்றி அமைக்கப்பட்டன. மூன்றாவது முறை தான், லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை 543 ஆக உயர்ந்தது.
பின், இந்த எண்ணிக்கை, 2001 மற்றும் 2026ம் ஆண்டு வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோன்று, தற்போது நீட்டிக்க வேண்டும் என்பது, தென்மாநில அரசியல் கட்சிகளின் கோரிக்கை. ஆனால், தொகுதிகளின் எண்ணிக்கையை 815 ஆக உயர்த்த வேண்டும் என, மத்திய அரசு விரும்புகிறது.
அதே நேரத்தில், பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டம், அரசியல் ரீதியாக ஒருமித்த கருத்தை பெற்றிருந்தாலும், அது அமலாவது பல ஆண்டுகளாக தாமதமாகி வருகிறது. இந்த தருணத்தில், அந்த மசோதாவை தொகுதி மறுவரையறையுடன் இணைத்ததன் மூலம், வடமாநிலங்கள் மற்றும் தென்மாநிலங்கள் என்ற பிரிவினையை துாண்டி விட்டுள்ளது.
எனவே, தற்போதைய தோல்வியில் இருந்து மத்திய அரசு பாடம் கற்க வேண்டும். இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட விஷயங்களில், எதிர்க்கட்சிகளின் கருத்துகளையும் கேட்டு, சுமுக தீர்வு காண்பதே சரியாக இருக்கும்.
