தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/தலையங்கம்/ நக்சல்கள் பிரச்னை முடிந்தாலும் கண்காணிப்பு தொடர்வது அவசியம்!

 நக்சல்கள் பிரச்னை முடிந்தாலும் கண்காணிப்பு தொடர்வது அவசியம்!

 நக்சல்கள் பிரச்னை முடிந்தாலும் கண்காணிப்பு தொடர்வது அவசியம்!

2


PUBLISHED ON : ஏப் 06, 2026 04:26 AM

Follow on GoogleFavourite on Google

2

PUBLISHED ON : ஏப் 06, 2026 04:26 AM


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம் நாட்டில் நக்சல்கள் பிரச்னை முடிவுக்கு வந்து விட்டதாகவும், நக்சல்களின் அச்சுறுத்தலில் இருந்து நாடு விடுபட்டு விட்டதாகவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சமீபத்தில், பார்லிமென்டில் அறிவித்தார். 2026 மார்ச், 31க்குள் நக்சலிசம் முழுமையாக ஒழிக்கப்படும் என்ற மத்திய அரசின் இலக்கு எட்டப்பட்டு விட்டதாகவும் கூறினார்.

மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு வாயிலாக, நக்சல்களின் தாக்குதல்களால் நிகழ்ந்த ஏராளமான உயிரிழப்புகளுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது என்பதுடன், நக்சல்கள் பிடியில் சிக்கியிருந்த ஏராளமான கிராமங்களுக்கு, நல்ல காலம் பிறந்து விட்டதாகவும் நம்பலாம்.

கடந்த, 1967ல், மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நக்சல்பாரி கிராமத்தில், நிலப்பிரபுத்துவ சுரண்டலுக்கு எதிராக விவசாயிகள் துவங்கிய ஆயுத போராட்டமே, நக்சல் இயக்கத்தின் துவக்கமாகும். ஆயுதப் புரட்சி மூலம் அதிகாரத்தை கைப்பற்றுவது, நிலப்பிரபுக்களிடம் இருந்து நிலத்தை மீட்டு ஏழைகளுக்கு பகிர்ந்தளிப்பது என்பதை நோக்கமாகக் கொண்டே, நக்சல் இயக்கம் துவக்கப்பட்டது.

அதன்பின், சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரா, ஒடிசா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், கேரளா மற்றும் பீஹார் மாநிலங்களில், 200க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நக்சல்கள் ஆதிக்கம் பரவியது. இதனால், அப்பகுதிகளில் வசித்த பழங்குடியினர் உள்ளிட்ட பல பிரிவு மக்களும், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட மாநில அரசுகளின் பல்வேறு வளர்ச்சி பணிகளை பெற முடியாமலும், சரியான கல்வி கற்க முடியாமலும் அவதிப்பட்டு வந்தனர்.

நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு மாநிலங்களில் உள்ள வனப்பகுதிகளில் நிலவிய வறுமை மற்றும் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், பல ஆண்டுகளுக்கு முன் இருந்ததை போல தற்போது இல்லை.

மத்திய -- மாநில அரசுகளின் நலத்திட்டங்கள், இப்பகுதிகளில் வசிக்கும் விளிம்பு நிலை மக்களை சென்றடைந்துள்ளன. நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த சிவப்பு வழித்தடத்தின் பெரும்பாலான பகுதிகள், சாலை வசதி, தகவல் தொடர்பு உள்ளிட்ட உள்ளகட்டமைப்பு வசதிகளால் மேம்பட்டுள்ளன.

அவற்றின் வாயிலாக, அப்பகுதி மக்கள் மத்தியில், சமூக, பொருளாதார முன்னேற்றங்களும் ஏற்பட துவங்கியுள்ளன. அதுமட்டுமின்றி, பாதுகாப்பு படையினரின் திறமையான செயல்பாடுகளும், நக்சல்களின் வன்முறையை கடுமையாக நசுக்கி விட்டன என்றே சொல்லலாம்.

அமித் ஷாவின் அறிவிப்பு வாயிலாக, நக்சல்கள் ஒரு அமைப்பு ரீதியான கிளர்ச்சி இயக்கமாக இனி செயல்பட முடியாது. ஆனாலும், அந்த இயக்கம் முழுமையாக தோற்கடிக்கப்பட்டு விட்டது என்று, இப்போதே சொல்லி விட முடியாது. ஏனெனில், நில அபகரிப்பு, சுரண்டல், அரசியல் ரீதியான சலுகைகள் அனைத்து பிரிவு மக்களையும் சென்றடைவதில் ஏற்பட்டுள்ள இடைவெளிகள் இன்னமும் நம் நாட்டில் நீடிக்கின்றன.

அதனால், நக்சல்களின் எழுச்சிக்கு வழிவகுத்த இதுபோன்ற சூழ்நிலைகள், ஏதேனும் ஒரு ரூபத்தில் தொடர்வது தவிர்க்கப்பட வேண்டும். சில பிரிவினர் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் நிலைமை தொடர்வதற்கு முடிவு கட்ட வேண்டும். அப்போது மட்டுமே, நக்சலிசம் முழுமையாக ஒழிந்ததாக நம்பலாம்.

அதாவது, நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் வசிக்கும் மக்களின் வளர்ச்சியை உண்மையானதாகவும், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாக மாற்றுவதன் மூலமே இந்த வெற்றியை உறுதிப்படுத்த முடியும். அதுவே, நக்சல் இயக்கம் மீண்டும் எழுச்சி பெறுவதற்கு எதிரான மிகவும் வலிமையான நடவடிக்கையாக அமையும்.

அதே நேரத்தில், பல நக்சல் தலைவர்கள் சரணடைந்தாலும், மற்ற சிலர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களின் நடமாட்டத்தை மத்திய அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அவர்கள் சாதகமான நேரத்தில் மீண்டும் ஒன்று திரண்டு பதிலடி கொடுக்கக்கூடும். எனவே, நக்சல்கள் விஷயத்தில், இன்னும் சில ஆண்டுகளுக்கு கண்காணிப்பை தொடர்வது அவசியமாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us