PUBLISHED ON : ஜூன் 10, 2026 04:08 AM

- ஹெச்.டி.தேவகவுடா -
பாரத முன்னாள் பிரதமர்
நரேந்திர மோடி, இந்தியாவின் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு, மிக நீண்ட காலம் தொடர்ச்சியாக பணியாற்றும் பிரதமர் என்ற சாதனையை படைத்திருப்பது, இந்திய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியையும், அதன் உன்னத பரிணாமத்தையும் பறைசாற்றுகிறது.
கடந்த 1952-ல் ஜவஹர்லால் நேரு, நாட்டின் முதல் பொதுத்தேர்தலைச் சந்தித்தபோது, காங்கிரஸ் கட்சி ஒரு ஏகபோக சக்தியாக திகழ்ந்தது. வெறும் 53 கட்சிகள் மட்டுமே தேர்தல் களத்தில் இருந்தன.
ஆனால், 2014 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில், மோடி, நாட்டின் உயரிய பொறுப்பை ஏற்றபோது, இந்தியா தன் பரப்பளவு, பன்முகத்தன்மை, பொருளாதாரம், குடிமக்களின் விழிப்புணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் முற்றிலும் மாறுபட்ட, ஒரு பிரமாண்ட தேசமாக உருவெடுத்திருந்தது.
கடந்த 1952-ல் வெறும், 17 கோடியாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 2014-ல், 83 கோடியாக உயர்ந்தது. தற்போது நாட்டின் மக்கள்தொகை, 146 கோடியை கடந்துள்ளது. இதன் காரணமாக, 2024 பொதுத்தேர்தலில் மோடி, 2,593 அரசியல் கட்சிகளின் சவால்களை எதிர்கொண்டு போட்டியிட வேண்டியிருந்தது.
முந்தைய வரலாற்றுக்கால அமைச்சரவைகளை போல் இல்லாமல், பிரதமர் மோடி தலைமையிலான தற்போதைய அமைச்சரவை, 27 இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், 10 பட்டியலினத்தவர், 5 பழங்குடியின உறுப்பினர்களுடன் வியக்கத்தக்க சமூக பன்முகத்தன்மையை உள்ளடக்கி உள்ளது.
அதுமட்டுமின்றி, பெண்களுக்கு பார்லிமென்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்காக, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை, பிரதமர் மோடி வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்.
அரசியலமைப்பு உரிமைகள், பாலின சமத்துவம், குடிமை பொறுப்புகள் ஆகியவற்றில் இன்றைய வாக்காளர்கள், இதுவரை இல்லாத வகையில் அதிக கல்வியறிவும் விழிப்புணர்வும் பெற்று உள்ளனர்.
நேருவின் காலத்தில் செய்தி தொலைக்காட்சிகள் இல்லாத நிலையில், அவர் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பத்திரிகைகளையே எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
தற்போது, சமூக ஊடகங்களின் சரிபார்க்கப்படாத, கடுமையான குற்றச்சாட்டுகளையும், நுாற்றுக்கணக்கான பிரதான செய்தி ஊடகங்களின் விமர்சனங்களையும், பிரதமர் மோடி ஒவ்வொரு நொடியும் எதிர்கொண்டு வருகிறார்.
இந்தியாவை உலகின் அதிவேகமாக வளரும் பொருளாதார நாடாக நிலைநிறுத்துவதிலும், துல்லியமான மக்கள் நல கொள்கைகளை வகுப்பதிலும், பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளிலும், தேச நலனில் சற்றும் சமரசமற்ற தீர்க்கமான முடிவுகளை எடுப்பதிலும், மோடியின் நிர்வாக திறன் தனித்துவத்துடன் வெளிப்படுகிறது.
அவர் வெறும் நிர்வாக தலைவராக மட்டுமின்றி, 'மனதின் குரல்' என்ற வானொலி நிகழ்ச்சி மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக, நாட்டின் அனைத்து தரப்பு விளிம்புநிலை மக்களுடனும், பரிவோடு உரையாடும் முதன்மை ஆலோசகராகவும் விளங்குகிறார்.
தொடர்ச்சியான சுயபரிசோதனையும், தன்னலமற்ற அர்ப்பணிப்புமே அவரது இந்த நீடித்த ஆற்றல்மிக்க வெற்றிக்கு அடிப்படை காரணங்கள்.
அவரது செயல்களை மேலும் பல ஆண்டுகளுக்கும், பல பிரதமர் பதவி காலங்களுக்கும் தொடர தேவையான, அபரிமிதமான ஆற்றலையும் நல்ல ஆரோக்கியத்தையும், எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
