PUBLISHED ON : ஏப் 01, 2024 12:00 AM

![]() |
சென்னையின் புகழ்மிக்க நட்சத்திர ஒட்டலான லீலா பேலஸில் 'சென்னை போட்டோ பினாலே' என்று சொல்லக்கூடிய புகைப்படக்கலைக்காகவே இயங்கக்கூடிய சிபிபி நிறுவனத்தின் புகைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது.
பல்வேறு தலைப்புகளில் பரிசு பெற்றவர்களின் படங்களும்,பெயர்களும் பிரதான ஹாலில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.
சென்னையின் முக்கிய புகைப்பட ஆளுமைகள்பலர் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த படங்களை பார்த்து அதில் தங்களுக்கு எந்த படம் மிகவும் பிடித்திருக்கிறது என்பதை மனதிற்குள் மதிப்பெண் போட்டு பார்த்தபடி இருந்தனர்.
![]() |
அதில் பலரது கவனத்தையும் ஈர்த்தது விஷால் பட்நாகர் எடுத்த அரசியல் பேரணி படம்தான்,போட்டோ ஜர்னலிசம் பரிவின் கீழ் அந்தப்படம் முதல் பரிசைப் பெற்றிருந்தது.
யார் அந்த விஷால் பட்நாகர் என்பதை அறியும் ஆவல் பலருக்கும் எழுந்தது.
பெயர் வாசித்த போது மேடையேறிய அவருக்கு பலத்த கைதட்டல்
அவர் பேசுகையில்,நான் ராஜஸ்தான் பகுதியைச் சேர்ந்தவன் என் தாத்தா,அப்பா வழியில் நானும் போட்டோகிராபராகியுள்ளேன்.
தற்போது ப்ரீலான்சராக பல்வேறு ஊடகங்களுக்கு படங்கள் எடுத்து கொடுத்து வருகிறேன்.
ஒரு கதையுடன் கூடிய ஒரு அழகியல் புகைப்பட ஜர்னலிஸ்டிக் படம், இந்த உலகத்தை மாற்றக்கூடும் என்று நம்புபவன்.
பாஜக ஜோத்வாரா தொகுதி வேட்பாளர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோருக்கு ஆதரவாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் நேர ரோட்ஷோவின் போது இந்த விருது பெற்ற படத்தை எடுத்தேன்.
முதலில் மீடியா ஜீப்பில் எனக்கு இடம் கிடைக்கவில்லை, அதனால் ரோட்ஷோவுடன் நடக்க முடிவு செய்தேன். ஏறக்குறைய 8 கிலோமீட்டர் தூரம் நடந்தபோது இப்படி ஒரு காட்சி தென்பட்டது இதை சரியாக பதிவு செய்ய ஒரு உயரமான இடமும் கிடைத்தது, பிரமாதமாக படம் அமைந்தது.
பொதுவாக நான் போட்டிகளுக்கு படம் அனுப்பும் ஆள் இல்லை, ஆனால் இந்தப்படத்தை அனுப்பும்படி நண்பர்கள் தந்த நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் படத்தை அனுப்பினேன் அந்தப் படம் இந்த அளவிற்கு சர்வதேச அளவில் பெயரைப் பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கவில்லை, மிகவும் மகிழ்ச்சியாகவும் உந்துதலாகவும் இருக்கிறது நண்பர்களுக்கும்,
சிபிபி அறக்கட்டளைக்கும் பெரும் நன்றி என்றார்.
படமும்,தகவலும்:எஸ்.கே.பாலசந்தர்.


