PUBLISHED ON : ஏப் 12, 2024 12:00 AM

![]() |
அது ஒரு வழக்கமான சனிக்கிழமைதான்
ஆனால் சென்னை கோடாம்பாக்கம் டிரஸ்ட்பாக்கம் மைதானத்திற்கு வழக்கமான சனிக்கிழமையாக இருக்கவில்லை.
அதிகாலையில் யோகா,ஒட்டம்,ஷட்டில் ,கராத்தே என்று பலவித உடற்பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு நடுவே சைக்கிள் ஓட்டும் வீரர்கள் பலர் தங்கள் சைக்கிளுடன் மைதானத்திற்குள் வந்தனர்.
![]() |
முதலில் பத்து பேர் இருபது பேர் என்று வரத்துவங்கினர் பின்னர் ஐம்பது நுாறு என்று காலை 6 மணியளவில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் திரண்டுவிட்டனர்.
வந்தவர்களில் நிறைய பேர் இளைஞர்கள், அவர்கள் வயதிற்கு அத்தனை பேர் அங்கு கூடியிருந்தால் ஒரே அரட்டை கும்மாளமாக இருந்திருக்கும் ஆனால் அங்கு நிலமை அப்படியில்லை அனைவரது முகத்திலும் ஒரு கனத்த சோகம் கவ்வியிருந்தது.
![]() |
சோகத்திற்கு காரணம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தங்களது சைக்கிள் ஓட்டும் நண்பர்களில் ஒருவரான ராகுல் சுரேஷ் என்ற 22 வயது இளைஞரை விபத்தில் பலி கொடுத்ததுதான்.
![]() |
இத்தனைக்கும் ராகுல் மிகக்கவனமாக சைக்கிள் ஒட்டுபவர் ஆனால் சாலையில் நாம் மட்டும் கவனத்தில் இருந்து பிரயோசனம் இல்லையே நமக்கு பின்னால், முன்னால் வரக்கூடிய வாகனங்கள் குறிப்பாக நான்கு சக்கர வாகனங்களில் வருபர்கள் கவனமாக இருக்கவேண்டுமே.
அப்படி கவனம் தவறிய காரோட்டியால் ஏற்பட்ட விபத்தே ராகுல் சுரேஷின் உயிரைக்காவு வாங்கிவிட்டது.கார் ஒட்டியவரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து என்று வழக்கம் போல போலீஸ் பைலை குளோஸ் செய்துவிட்டது
ஆனால் ராகுலின் குடும்பம் ஈடு செய்யமுடியாத இழப்பை சந்தித்துள்ளது,படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லும் பக்குவத்தில் இருந்தார்.நிறைய கனவுகள் சுரேஷ்க்கும்,சுரேஷை வைத்து அவரது குடும்பத்தினருக்கும் இருந்தது அது எல்லாம் இந்த விபத்தில் தகர்த்து எறியப்பட்டுள்ளது.
![]() |
தங்கள் மனங்களில் மண்டியிருக்கும் சோகத்தை இறக்கிவைக்க ஒரு இரங்கல் கூட்டத்தை சென்னை சைக்கிளிங் குரூப் ஏற்பாடு செய்திருந்தது .இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னை நகரின் உள்ள 16 க்கும் மேற்பட்ட சைக்கிள் ஒட்டும் குழுக்களைச் சார்ந்தவர்கள் மைதானத்திற்கு வந்திருந்தனர்.
![]() |
மறைந்த சுரேஷ் ராகுல் பற்றி அவரது நண்பர்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்,ராகுல் ஒரு சைக்கிள் பிரியர் நீண்ட காலமாக சைக்கிள் ஒட்டிவருகிறார் என்றார் சைக்கிளிங் குரூப் நிறுவனர்களில் ஒருவரான திவாகரன், சிலர் பேசமுடியாமல் விம்மலுடன் நிறுத்திக் கொண்டனர்.
சைக்கிள் ஒட்டுபவர்கள் தங்களது மற்றும் சுற்றுப்புற சூழலின் நலன் கருதி இயங்கிவருகின்றனர் ஆனால் அவர்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது,சைக்கிள் ஒட்டுபவர்கள் மீதான மோட்டார் வாகன ஒட்டிகளின் அலட்சிய பார்வைக்கு பலியானவரே ராகுல், இது இவரோடு நிற்கட்டும், சட்டமும்,அரசும் சைக்கிள் ஒட்டுபவர் நலனில் அக்கறை காட்டட்டும் என்ற வேண்டுகோளும் இரங்கல் கூட்டத்தில் வைக்கப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ராகுல் இழப்பு ஈடு செய்ய இயலாதது என்பதைச் சொல்லும் விதத்திலான பதாகைகளை ஏந்தியபடி நின்றனர்.கூட்ட நிறைவில் ராகுல் சுரேஷ்க்கு இரணடு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.மைதானத்தில் பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டவர்களும் விஷயத்தைக் கேள்விப்பட்டு தங்களது பயிற்சியை ஒத்திவைத்துவிட்டு இந்த மவுன அஞ்சலியில் கலந்து கொண்டனர், கலந்து கொண்டவர்கள் பலரின் கண்களில் கண்ணீர் திரண்டிருந்தது.
-எல்.முருகராஜ்







