தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நிஜக்கதை/'சார்லி'யின் 40 ஆண்டுக்காலக் கண்ணீர்க் கதை!

'சார்லி'யின் 40 ஆண்டுக்காலக் கண்ணீர்க் கதை!

'சார்லி'யின் 40 ஆண்டுக்காலக் கண்ணீர்க் கதை!

2


PUBLISHED ON : மே 19, 2026 06:57 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 19, 2026 06:57 PM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மனிதர்களின் சுயநலத்திற்காகத் தனது ஒட்டுமொத்த இளமையையும், இயற்கையான வாழ்வையும் இழந்துவிட்டு, நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மண்ணின் வாசனைக்காகக் காடுகளுக்குத் திரும்பிய ஒரு வயதான ஜீவனின் நெகிழ்ச்சியான கதைதான் இந்த ஆப்பிரிக்க யானை 'சார்லி'யின் வாழ்க்கை.

கடந்த 1982-ஆம் ஆண்டு, ஆப்பிரிக்காவின் அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒரு அழகான ஆண் யானைக் குட்டி பிறந்தது. காட்டின் சுதந்திரக் காற்றைச் சுவாசித்து, தன் தாயின் அரவணைப்பில் துள்ளித் திரிந்த அந்தச் சிறிய குட்டிக்கு இரண்டு வயது இருக்கும்போது வனவிலங்கு வேட்டைக்காரர்களால் கடத்தப்பட்டு, தன் தாயிடமிருந்தும் காட்டிடமிருந்தும் அது நிரந்தரமாகப் பிரிக்கப்பட்டது.

கடத்தப்பட்ட சார்லி, தென்னாப்பிரிக்காவின் 'பலகாடா' சர்க்கஸ் கம்பெனிக்கு விற்கப்பட்டது. சார்லி என்ற பெயருடன் அங்குதான் அதன் நரக வாழ்க்கை தொடங்கியது. காட்டின் ராஜாவாக வாழ வேண்டிய ஒரு விலங்கு, மனிதர்களின் கைதட்டலுக்காகவும், காசுக்காகவும் பசிக்காகவும் சர்க்கஸ் மாஸ்டரின் சாட்டையடிக்கு பயந்து பணிந்து வாழ்ந்தது.Image 1578199மண்டையைப் பிளக்கும் சத்தங்கள், கால்களைப் பிணைத்த இரும்புச் சங்கிலிகள், பசி, தாகம் என அடுக்கடுக்கான சித்திரவதைகளுக்கு நடுவே, மனிதர்கள் சொல்லும் வித்தைகளைக் கற்றுக்கொண்டு சுமார் 17 ஆண்டுகள் சர்க்கஸ் மேடைகளில் கண்ணீரோடு வலம் வந்தது சார்லி.

2001-ஆம் ஆண்டு சர்க்கஸ் மூடப்பட்டபோது, சார்லிக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று அனைவரும் நம்பினர். ஆனால், விதி அவனைக் கொண்டு போய் நிறுத்திய இடம் 'பிரிட்டோரியா தேசிய விலங்கியல் பூங்கா' அங்கு சர்க்கஸ் கூடாரத்திற்கு பதில் சிமெண்ட் கூண்டு அவ்வளவுதான் வித்தியாசமே தவிர, அதே வேதனை அதே சிறைவாசம் அதே மன உளைச்சல்.

காலப்போக்கில் அங்கிருந்த வேறு சில சக யானைகள் அனைத்தும் அடுத்தடுத்து உயிரிழந்தன. சார்லி தனிமையாக மிகவும் சிரிமப்பட்டான். 4 டன் எடையுள்ள அந்தப் பிரம்மாண்ட ஜீவன், ஒரு சிறிய கூண்டிற்குள் ஒற்றை ஆளாகத் தனிமையில் தவித்தது. தனக்குத் தானே தலையை ஆட்டிக்கொண்டும், சுவர்களை வெறித்துப் பார்த்துக்கொண்டும், கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளானதை வனவிலங்கு ஆர்வலர்கள் பார்த்து வேதனைப்பட்டனர்.

ஒரு கட்டத்தில், சார்லியின் இந்த அவல நிலை உலகெங்கும் உள்ள விலங்கு நல ஆர்வலர்களின் இதயங்களை உலுக்கியது. 'அவனைச் கூண்டிற்குள் அடைக்கக் கூடாது, மீண்டும் அவனது சொந்த மண்ணான காட்டிற்கே அனுப்ப வேண்டும்' என்று நீதிமன்றங்கள் வரை சென்று தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அதன் பலனாக, 2024 ஆகஸ்டில் தென்னாப்பிரிக்க அரசு சார்லியை விடுவிக்க ஒப்புக்கொண்டது. ஆனால், 40 ஆண்டுகள் மனிதர்களோடு வாழ்ந்த ஒரு வயதான யானையை, அவ்வளவு எளிதாகக் காட்டுக்குக் கொண்டு செல்ல முடியாது. அதற்காக, மாதக்கணக்கில் அதற்குப் பிரத்யேகப் பயிற்சிகள் வழங்கப்பட்டு, ஒரு பிரம்மாண்ட கண்டெய்னர் கூண்டுக்குள் அது ஏறுவதற்குக் கற்றுக்கொடுக்கப்பட்டது.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, 42 வயதான முதிய யானை சார்லி, லிம்போபோ மாகாணத்தில் உள்ள 'ஷாம்பாலா பிரைவேட் கேம் ரிசர்வ்' என்ற 24,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட அடர்ந்த பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டது.Image 1578200நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு, முதன்முறையாகத் காட்டின் ஈரமான மண்ணை மிதித்தபோது, சார்லி ஒரு நிமிடம் அப்படியே உறைந்து நின்றது. காற்றின் வாசனை, மரங்களின் சலசலப்பு, சுவர்கள் இல்லாத எல்லையற்ற வானம்... இவை அனைத்தையும் அது உணர்ந்த தருணம், அதன் கண்களில் மட்டுமின்றி அங்கிருந்தவர்களின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.

தற்போது, தன்னைப்போலவே மனிதர்களால் பாதிக்கப்பட்டு மீட்கப்பட்ட மற்ற சாதுவான யானைகளுடன் இணைந்து, ஒரு சுதந்திரமான காட்டு யானையாகத் தனது முதிய வயதைக் கழித்து வருகிறது சார்லி. மனிதர்கள் கொடுத்த காயங்களை, இயற்கை தன் பச்சைப்பசேல் கரங்களால் மெதுவாக ஆற்றி வருகிறது!

-எல்.முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us