PUBLISHED ON : பிப் 24, 2025 12:00 AM


மத்திய அரசின் மதிப்பு மிக்க விருதான பத்ம ஸ்ரீ விருது தெருக்கூத்து கலைஞர் புரிசை கண்ணப்ப சம்பந்தனுக்கு வழங்கப்பட இருப்பதான அறிவிப்பு பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அது என்ன தெருக்கூத்து என்று பலரை விசாரிக்கவும் வைத்துள்ளது.
உண்மையில் தெருக்கூத்து என்பது சினிமாவின் ஆதி வடிவமாகும்.இயல் இசை நாடகம் என்ற மூன்றும் கலந்ததுதான்.
பெரும்பாலும் மகாபாரதத்திலும்,ராமாயணத்திலும் இருக்கும் கதைகள் பாட்டுடன் கூடிய நாடகபாணியில் இருக்கும்.
இந்தக்கலையை கடந்த 150 ஆண்டுகளாக கட்டிக்காத்து வருகிறது ஒரு குடும்பம், அந்த குடும்பமே புரிசை குடும்பம் என்றே அழைக்கப்படுகிறது.
புரிசை என்பது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சின்னஞ்சிறிய கிராமமாகும்.கண்ணப்பன் மற்றும் அவரது மகன் துரைசாமி என்று வழிவழியாக இந்தக்கலை காப்பாற்றப்பட்டு வருகிறது, இப்போது துரைசாமியின் மகன் கண்ணப்ப சம்பந்தன் இந்தக் கலையை வழிநடத்தி வருகிறார்.
தற்போது 71 வயதாகும் புரிசை கண்ணப்ப சம்பந்தன் இதற்கென தெருக்கூத்து பயிற்சி பள்ளி அமைத்து விருப்பம் உள்ளவர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகிறார். இவரது தலைமையில், புரிசை தெருக்கூத்து குழு, மகாபாரதம், ராமாயணம் போன்ற புராணக் கதைகள் மட்டுமின்றி, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் 'A Very Old Man with Enormous Wings' போன்ற நவீன கதைகளையும் தெருக்கூத்து வடிவத்தில் வெளிப்படுத்தியுள்ளது.
பராம்பரியமான கலை வீழ்ந்துவிடாமல் தாங்கிப்பிடித்து நடத்திவரும் புரிசை கண்ணப்ப சம்பந்தனுக்கு இந்த விருது வழங்கியதன் மூலம் கலை மேலும் முன்னெடுத்துச் செல்லப்படும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
-எல்.முருகராஜ்

