PUBLISHED ON : டிச 21, 2025

கணைய அழற்சியால் இளம் வயதினர் பாதிக்கப்படுவது சமீப ஆண்டுகளில் அதிகரித்து உள்ளது.
வார இறுதியில் நண்பர்களுடன் சேர்ந்து நாள் முழுதும் மது அருந்துவதால், எதிர்பாராத சமயத்தில் வயிற்று வலி ஏற்படும்.
அருகில் இருக்கும் மருத்துவரிடம் 'டிரிப்' போட்டு, இரண்டு நாட்கள் கழித்து மூச்சு விடுவதில் சிரமம் என்று வருவர். செரிமானக் கோளாறு என்று தான் பெரும்பாலும் நினைப்பர்.
கணைய அழற்சியால் ஏற்பட்ட பிரச்னை இது என்றே தெரியாது.
ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதற்கு தேவையான இன்சுலின் சுரப்பு, கொழுப்பு, புரதத்தை செரிமானம் செய்வதற்கான என்சைம்களை சுரப்பதும் கணையத்தின் இரு முக்கிய பணிகள்.
ஆண்களில் மதுப் பழக்கம், பெண்களில் பித்தப்பை, பித்த நீரில் கற்கள், கொழுப்பில் டிரைகிளிசரைடு அளவு அதிகமாக இருப்பது, பாரா தைராய்டு சுரப்பியில் இருந்து அதிக அளவு கால்சியம் சுரந்து, ரத்தத்தில் சேருவது ஆகியவை கணைய அழற்சிக்கான பொதுவான காரணங்கள்.
கணையத்தில் இயல்பாக சுரக்கும் என்சைம்கள் தேவைக்கு அதிகமாக சுரந்து, இரைப்பைக்குள் செல்லாமல் கணையத்தின் வெளியே கசிந்து, கணையத்தை வெந்து போகச் செய்யும். இது தான் 'ஆட்டோ டைஜஷன்' எனப்படும் கணைய அழற்சி.
அறிகுறிகள்
மேல் வயிற்றில் ஆரம்பித்த வலி, பின் முதுகிற்கு பரவுவது போல தீவிர வலி, நிமிர்ந்து உட்காரவே முடியாது. முன்பக்கம் குனிந்து அமர வேண்டும்.
வாந்தி வரும் உணர்வு, காய்ச்சல், இதயத் துடிப்பு அதிகரிப்பது, மஞ்சள் காமாலை ஆகியவை பொதுவான அறிகுறிகள்.
கணைய அழற்சியால் வரும் வயிற்று வலி 24 மணி நேரம் வரையிலும் நீடிக் கலாம். ரத்த பரிசோதனை, அல்ட்ரா சவுண்டு செய்தாலே இதை உறுதி செய்யலாம்.
சிகிச்சை
மிதமான பாதிபபை முழுமையாக குணப்படுத்த முடியும். தீவிர பாதிப்பாக இருந்தால், அவசர சிகிக்சை தேவைப்படும். இந்நிலையில், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், இதயம் என்று அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும்.
கணையத்தைச் சுற்றி சேர்ந்த திரவத்தில் தொற்று ஏற்பட்டு இருந்தால், ஸ்கேன் உதவியுடன் லேப்ராஸ்கோபி, எண்டோஸ்கோபி உதவியுடன் நீரை வடிய வைக்க வேண்டும்.
அப்படியே விட்டால் இரண்டு வாரத்தில் திரவம் அதிகமாகி, வயிறு, கணையத்திற்கு இடையில் கால்பந்து அளவிற்கு பெரிதாக நீர் கட்டி உருவாகி விடும். அந்த சமயத்தில் சாப்பிடுவது சிரமமாக இருக்கும். சிறிது சாப்பிட்டாலே வயிறு நிறைந்த உணர்வு, வாந்தி வரும் உணர்வு இருக்கும்.
முறையாக சிகிச்சை செய்தால், வெந்து போன கணையம் மெதுவாக இயல்பு நிலைக்கு வந்து விடும். தீவிர பாதிப்பு இருப்பவர்களில், 0 -15 சதவீதம் பேருக்கு மீண்டும் கணைய அழற்சி வரும். நீண்ட காலம் பாதிப்பு இருந்தால், கணைய செயல்பாடு நாளடைவில் குறைந்து கொண்டே வந்து, நிரந்தர சர்க்கரை நோயாளியாக மாறுவர். கொழுப்பு முழுமையாக செரிமானம் ஆகாமல், மலம் எண்ணெய் பசை போல் இருக்கும். தொடர்ச்சியாக உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
கணையத்தில் கற்கள் உருவாகி, கணையத்தின் வாயை அடைக்கும். இதனால், செரிமான என்சைம்கள் வயிற்றுக்கு செல்ல முடியாமல், அதீத வலியை ஏற்படுத்தும். இந்த கற்களை லேப்ராஸ்கோபி வாயிலாக நீக்கலாம்.
பெண்களுக்கு
கர்ப்பம், குழந்தை பெற்ற பின் ஹார்மோன் மாற்றங்களால் பித்தப் பை கற்கள் உருவாவது அதிகம்.
டாக்டர் எஸ்.ஸ்ரீவத்சன் குருமூர்த்தி, ஜீரண மண்டல அறுவை சிகிச்சை நிபுணர், ஜெம் மருத்துவமனை, சென்னை.044 6166 6666. 95002 00600gemhospitals.com

