
ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள 'ஆப்பிள் விஷன் புரோ' என்ற நவீன தொழில்நுட்ப 'ஹெட்செட்' கண்ணாடியைப் பயன்படுத்தி, 'கீ - ஹோல்' எனப்படும் நுண்துளை அறுவை சிகிச்சையை, நாட்டில் முதன்முறையாக எங்கள் மையத்தில் செய்துள்ளோம்.
பொதுவாக லேப்ராஸ்கோபிக் முறையில் அறுவை சிகிச்சை செய்யும்போது, உடலில் எந்த பகுதியில் செய்கிறோமோ, அங்கு மெல்லிய துளையிட்டு அதன் வழியாக கேமரா பொருத்திய நுண்குழாயை செலுத்தி, உள்ளுறுப்புகளை 'டிவி, கம்ப்யூட்டர்' திரையில் பார்த்து அறுவை சிகிச்சை செய்யப்படும்.
சினிமா, விளையாட்டுப் போட்டிகளை துல்லியமாகப் பார்க்க, 'ஹை டெப்னிஷன்' எனப்படும் உயர் வரையறை ஒலி, ஒளியில் டிவி, கம்ப்யூட்டர்கள் வந்துவிட்டன. இவற்றின் மேம்பட்ட தொழில்நுட்பம் தான் ஆப்பிள் விஷன் புரோ. இந்த கண்ணாடியை மாட்டிக் கொண்டால் போதும். கம்ப்யூட்டர், மொபைல் போனில் உள்ள 'ஆப்'களை கண்கள், கைகளால் எளிதாக உபயோகிக்க முடியும். பிம்பங்களை விரும்பிய அளவில் பெரிதுபடுத்திப் பார்க்கலாம்.
கேளிக்கை விஷயங்களுக்கான இந்த தொழில்நுட்பத்தை, லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையில் ஏன் பயன் படுத்தக் கூடாது என்ற எங்களின் முயற்சி தான் இது. உள்ளுறுப்புகளை துல்லியமாகப் பார்த்து, அறுவை சிகிச்சை செய்வது மட்டுமல்ல; சி.டி., ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனை முடிவுகள், அறுவை சிகிச்சை பற்றிய விபரங்கள், உலகின் எந்த நாட்டில் உள்ள டாக்டருடன் நேரடியாக ஆலோசிக்கும் வசதி என்று அனைத்தும் இதில் உள்ளன.
பித்தப்பை கல்லை நீக்குவது முதல், குடல், இரைப்பையில் கேன்சர் பாதித்த பாகங்களை அகற்றுவது வரை, பல அறுவை சிகிச்சைகளை இந்த நவீன தொழில்நுட்ப உதவியுடன் செய்துள்ளோம்.
டாக்டர் ஆர். பார்த்தசாரதி
தலைமை செயல் அதிகாரி,
ஜெம் மருத்துவமனை,
கோவை 0422 - 2325100

